நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்கள் நடப்பாண்டு தூர்வாரப்படாததால் புதர்மண்டி நீர்வழித்தடங்கள் அழியும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இருபோகங்களில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. நெல்வயல்களை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி வருவதால் குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு 5,000 ஹெக்டேராக சுருங்கியுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இதில் பாதிஅளவாக வயல்பரப்புகள் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என வேளாண் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், எஞ்சியுள்ள விளை நிலங்களுக்கு முறையாக பாசன நீர் விநியோகம் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் போதிய அளவுக்கு நீர்இருப்பு உள்ளது. ஆனால் அவற்றை விவசாய நிலங்களில் முறையாக கொண்டு சேர்க்க பொதுப்பணித்துறை நீர் ஆதார பிரிவு திட்டமிடாமல் அலட்சியம் காட்டுவதால் மாவட்டத்தில் விவசாயம் அழியும் சூழல் உள்ளது.
ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை காலத்தை பயன்படுத்தி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் தொடங்கி, இவற்றின் தண்ணீர் செல்லும் ஆறு, கால்வாய், கிளைவாய்க்கால் மற்றும் நீர்வழித்தடங்களை தூர்வாரி பாசன நீர் தடையின்றி செல்வதற்கு பொதுப்பணித்துறை நீராதார துறையினர் வசதி செய்து கொடுப்பது வழக்கம்.
» கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடைவிதித்த உத்தரவுக்கு தடை - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» அயோத்தி ராமர், அஷ்ட ஆஞ்சநேயர் தொகுப்பு... - மதுரையில் புதிதாக அணிவகுக்கும் கொலு பொம்மைகள்!
ஆனால், கரோனா பாதிப்புக்கு பின்னர் பொதுப்பணித்துறை மற்றும் பிற அரசு துறையினர் குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களையும், பாசன குளங்களையும் தூர்வாராமல் கிடப்பில் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு பாசன கால்வாய்களை பெயரளவுக்கு தூர்வாரியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
நடப்பாண்டு கால்வாய்களை தூர்வாராததால் புதர் மண்டி அடையாளம் தெரியாமல் பாசன நீர்வழித்தடங்கள் அனைத்தும் அழியும் தருவாயில் உள்ளன. இந்த கன்னிப்பூ சாகுபடிக்கு கடைமடைபகுதி மட்டுமின்றி இரட்டைக்கரை கால்வாய், தோவாளை கால்வாய்,வள்ளியாறு உட்பட பல கால்வாய்களிலும், கிளை கால்வாய்களிலும் தண்ணீர் வரவில்லை.
இதனால் இப்பகுதிகளில் உள்ள பயிர்கள் அழிந்துவருகின்றன. இதே நிலை நீடித்தால் மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் அழியும் சூழல் விரைவில் உருவாகும். எனவே ஆண்டுதோறும் பாசன கால்வாய்களை முறையாக தூர்வார அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘நெல் விவசாயத்துக்கு சிறப்பு பெற்ற குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை முறையாக தூர்வாரி பராமரிக்காததால் அழியும் தருவாயில் உள்ளது. பெரும்பாலான நீர்வழித்தடங்கள் புதர்மண்டியும், மண்மூடியும் காணாமல் போய்விட்டன. குமரி மாவட்டத்தில் எஞ்சியுள்ள விவசாயத்தை காக்கவேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் இங்குள்ள நீர்வழித்தடங்களை முறையாக ஆய்வு செய்து பாசன நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.