சாக்கடையாகும் சமுத்திரம் ஏரி! - கண்டுகொள்ளுமா தஞ்சை மாநகராட்சி?

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சியில் புதை சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரங்கள் பழுதடைந்ததால், கழிவுநீர் முழுவதும் சுத்திகரிப்பு செய்யப்படாமல், சமுத்திரம் ஏரியில் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடந்த 2000-வது ஆண்டில் ரூ.70 கோடி மதிப்பில் புதை சாக்கடை பணிகள் தொடங்கி, 2007-ம் ஆண்டில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரித்து வந்த இந்தப் பணிகளை, அதன்பின், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

புதை சாக்கடை திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிக்க, சமுத்திரம் ஏரிக்கரையில் 42 ஏக்கர் பரப்பளவில் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நாளொன்றுக்கு 28.05 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய முடியும். இங்கு சுத்திகரித்து வெளியேற்றப்படும் நீரை, பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

சமுத்திரம் ஏரிக்கரையில் ராட்சத குழாய் மூலம் உறிஞ்சப்பட்டு
சுத்திகரிப்பு நிலைய கிணற்றுக்கு செல்லும் கழிவுநீர்.

குழாய்கள் அடைப்பு: மாநகரில், 275 கி.மீ. தொலைவுக்கு புதை சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது, கோரிகுளம், கணபதி நகர், வடக்கு வாசல் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள கழிவு நீரேற்று நிலையங்கள் மூலம் உந்தப்பட்டு சமுத்திரம் ஏரிக் கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதை சாக்கடை குழாய்களில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விளார் சாலை, வி.பி.கோயில் தெரு, நாகை சாலையில் சோழன் நகர் உள்ளிட்ட பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் அனைத்தும் ஆள் இறங்கும் குழாய் வழியாக வெளியேறி, அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், விளார் சாலையில் கடந்த 5-ம் தேதி கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைப்பு செய்தபோது தான், மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும், சோழன் நகரில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், அங்கு கழிவுநீரை டீசல் மோட்டார் மூலம் உறிஞ்சி, அருகில் உள்ள பாசன வாய்க்காலில் விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாசன நீரை பயன்படுத்தும் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதை சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட
கழிவுநீர் கலக்கும் சமுத்திரம் ஏரி.

ஏரியில் கலப்பு: சமுத்திரம் ஏரிக்கரையில் உள்ள கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையத்தில் பெரிய அளவில் 5 கிணறுகள் உள்ளன. இங்கு, முதலில் ராட்சத குழாய் மூலம் கழிவுநீர் உறிஞ்சப்பட்டு தொட்டிகளில் நிரப்பி, அதில் குப்பை அகற்றப்பட்டு, இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் சமுத்திரம் ஏரியிலும், பாசன வாய்க்காலிலும் வெளியேற்றப்படுவது வழக்கம்.

ஆனால், கடந்த ஒரு மாத காலமாக இயந்திரங்கள் பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், அப்படியே சமுத்திரம் ஏரியில் திறந்துவிடப்படுகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் கழிவுநீருடன் அதிகளவில் மண் இருந்ததால், இயந்திரங்கள் பழுதாகியுள்ளன. அதை சுத்தம் செய்து, சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இயந்திரங்கள் சீரமைக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE