மதுரை மாநகரில் வீடுகளுக்கு ‘வாட்டர் மீட்டர்’ - முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் அப்டேட்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் விரைவில் தொடங்கப்பட உள்ள முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பு பெறும் ஒவ்வொரு வீடுகளிலும் ‘வாட்டர் மீட்டர்’ (Water Meter) பொருத்தி குடிநீர் கட்டணம் செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.

மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக் குறையை போக்க, அம்ருத் திட்டத்தில் ரூ.1,295.76 கோடியில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதனால், குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளில் மின்சாரத்தை கணக்கிடும் மின் மீட்டர்கள் போல், குடிநீர் பயன்பாட்டை கணக்கிடும் குடிநீர் அளவு மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் பயன்படுத்தும் குடிநீர் எத்தனை லிட்டர் என கணக்கிடப்படும். இதற்கு ஏற்றவாறு கட்டணம் நிர்ணயித்து, 2 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் கட்டணம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையால், குடிநீர் சிக்கனம் கடைப்பிடிக்கப்படும் என்றும், அவசியமில்லாமல் பொதுமக்கள் குடிநீரை வீணாக்குவது தடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதன் மூலம் அதிக எண்ணிக் கையிலான மக்கள் கூடுதல் நேரத்துக்கு குடிநீரை பெறமுடியும்.

ரீடர் மேன் நியமனம்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சியில், குடிநீர் அளவு மீட்டர் பொருத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல. 30 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் அளவு மீட்டர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்துள்ளது. குடிநீர் மீட்டரை அளவெடுப்பதற்காகவே, மாநகராட்சியில் வாட்டர் ரீடர் மேன் பணியாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.

காலப்போக்கில் அந்த நடைமுறையை பின்பற்றும் அளவுக்கு மாநகராட்சியில் போதுமான குடிநீர் ஆதாரம் இல்லை. அதனால், வாட்டர் ரீடர் மேன் பணியிடமும் இல்லாமல் போய்விட்டது. தற்போது இந்த பணியிடம் புதிதாக உருவாக்கவும், இந்த குடிநீர் திட்டத்தில் இணைப்பு பெற்றவர்களுக்கு டெபாசிட் தொகை வசூலிக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த நடைமுறையால் மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவது தடுக்கப்படும். அதனால், எல்லோருக்கும் சீராக குடிநீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும்’’ என்றார்.

தினமும் நபருக்கு 130 லிட்டர் குடிநீர்: மாநகராட்சி மேயர் இந்திராணி கூறுகையில், ‘‘தற்போது மாநகராட்சியில் வசிக்கும் ஒரு நபருக்கு தினசரி 70 முதல் 80 லிட்டர் குடிநீர் விநியோகம் செய்கிறோம். ஆனால், அதைவிட அதிகமாகத்தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் நமக்கு கிடைக்க உள்ளதால் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டாலே 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் சாத்தியமாகிவிடும். இந்த திட்டத்தில் ஒருநபருக்கு 130 லிட்டர் குடிநீர் வழங்க உள்ளோம். இந்த குடிநீர் திட்டம், மதுரை மாநகராட்சியின் அடுத்த 40 ஆண்டு கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE