இந்தியாவையே வியக்க வைத்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

By காமதேனு

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, இந்தியாவையே வியக்க வைக்கும் அளவிற்கு நடந்தேறியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த ஏழாம் தேதி தொடங்கி நேற்று வரை இரண்டு நாட்கள் நடந்தது. இதில் உலகின் மிகப் பெரும் நிறுவனங்கள் பலவும் தமிழ்நாட்டில் பல கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அந்த வகையில் சுமார் 6.5 லட்சம் பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நன்றி கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்," #TNGIM2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர், முனைவர் டி.ஆர்.பி.ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு

இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024.

'எல்லோருக்கும் எல்லாம்', 'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி' என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!' என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE