மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், இம்மையத்தின் பயன்பாடு குறித்த தகவல்களை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோரும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்களுக்கு உதவும் வகையில், மாநில அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவுசார் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில், மயிலாடுதுறையில் நகராட்சி சார்பில் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி எதிரில் ‘நூலகம் மற்றும் அறிவு சார் மையம்’ கடந்த ஜன.5-ம் தேதி தொடங்கப்பட்டது. இம்மையத்தை பிப்.5-ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2,300 புத்தகங்கள், இணைய வசதியுடன் கூடிய 10 கணினிகள், நாளிதழ்கள், விசாலமான கூடம், மின் விசிறி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த மையத்துக்கு நாள்தோறும் 100-லிருந்து 120 மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இம்மையத்தை பயன்படுத்திக் கொள்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இங்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
» ரூ.100 கோடி ஒதுக்கீட்டால் வேகம் எடுக்குமா பழநி - ஈரோடு ரயில் பாதை திட்டம்?
» 14 மாவட்ட எஸ்பி-க்கள் உட்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி பயிலக மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான எஸ்.சிவராமன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: போட்டித் தேர்வு எழுத திட்டமிட்டுள்ளோர் இம்மையத்தை மிகுந்த ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு நாள்தோறும் 100 பேர் வந்து செல்கின்றனர். ஆனால், 60 நாற்காலிகள் மட்டுமே உள்ளன. அதனால் மாணவர்கள் கீழே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.
எனவே, கூடுதல் எண்ணிக்கையிலான நாற்காலிகள், மேசைகள் ஏற்படுத்தி தர வேண்டும். எல்சிடி ப்ரொஜெக்டர் அமைக்க வேண்டும். வல்லுநர்கள் வகுப்பெடுக்கவும், ‘க்ரூப் ஸ்டடி’ பயன்பாட்டுக்கும் தனிக் கூடம் அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் உள்ளது.
ஆனால் அடிக்கடி பழுது ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், அவற்றை பராமரிப்பதற்கான பொருட்கள் போதுமானதாக இல்லை. பெரிய அளவில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை.
இந்த மையத்தையும், மைய வளாகத்தையும் தினசரி பராமரிப்பு செய்வதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தினசரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். படிக்க வரும் மாணவர்களுக்கு ஏதேனும் தேவைகள், அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்படும்போது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கூறியது: இந்த மையம் இங்கு செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்தும், மையத்தின் நோக்கம், பயன்பாடு குறித்தும் மாவட்ட மக்களிடம் பரவலாக தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படிக்க வரும் மாணவர்கள் கொண்டு வரும் புத்தகங்கள், பைகளை தனி இடத்தில் வைப்பதற்கான ‘கிளாக் ரூம்’ அமைக்க வேண்டும் என்றனர்.