வழக்குகளுடன் ‘போராடும்’ மதுரை மாநகராட்சி நிர்வாகம்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளை நடத்த 8 வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளை சந்திக்க 5 வழக்கறிஞர்களும் உள்ளனர்.

இந்த வழக்கறிஞர்கள், மாநகராட்சி சட்ட அலுவலகம் பரிந்துரை அடிப்படையில் ஆணையரால் நியமிக்கப்படுகின்றனர். உயர் நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,500, மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு ரூ.4,500 கவுரவ ஊதியமாக மாநகராட்சி நிர்வாகம் வழங்குகிறது. இதற்காக மாநகராட்சி பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏராளமான வழக்குகளை எதிர்கொள்கிறது. பெரும்பாலும் ஆக்கிரமிப்புகள், பிறப்பு - இறப்பு சான்றிதழில் திருத்தங்கள், வரி விதிப்பு, அடிப்படை பிரச்சினைகள், அதிகாரிகள், ஊழியர்களின் பணப் பலன்கள் மற்றும் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள்தான் பதிவாகின்றன.

மாநகராட்சி நிர்வாகம் கொடுக்கும் பதில்களால் சில நேரங்களில் வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும். சில வழக்குகளில், அந்த பிரச்சினை தொடர்பாக மாநகராட்சியின் பரிசீலனைக்கு உயர் நீதிமன்றம் விட்டுவிடும்.

மதுரை மாநகராட்சி மீது அன்றாடம் வழக்குகள் பதிவானாலும், அதன் சட்ட அலுவலகமும், அதன் வழக்கறிஞர்களின் சிறப்பான வாத திறமையால் தற்போது 618 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் மாநகராட்சிக்கு எதிரான 124 வழக்குகள் தள்ளுபடியாகி உள்ளன.

48 வழக்குகளில் மாநகராட்சிக்கு எதிராக உத்தரவுகள் வந்துள்ளன. அதை எதிர்த்து மாநகராட்சி வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். மாவட்ட நீதிமன்றத்தில் மாநகராட்சிக்கு எதிரான 363 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் வந்த பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை சட்ட அலுவலர், அதன் வழக்கறிஞர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, வழக்குகளின் நிலை, அந்த வழக்குகளை சந்திப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநகராட்சி சட்ட அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வழக்கு கட்டுகள்.

இத்தனை முயற்சி எடுத்தாலும், மாநகராட்சி நிர்வாகம் மீது தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வழக்குகளால் மாநகராட்சி நிதியும், அதிகாரிகளுடைய நேரமும் விரயமாகி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் வழக்குகள் வருவது தவிர்க்க முடியாததாக உள்ளது. மாநகராட்சி மீது அதிகளவு வழக்குகள் தொடுக்கும்போது அதிகாரிகளின் நேரம் விரயமாகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் வழக்குகளை சந்திக்க சட்ட அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் இதுவரை மாநகராட்சி சந்தித்த வழக்குகளின் விவரங்கள், மாநகராட்சி அளித்த விளக்கம், பதில்கள், வெற்றிபெற்ற வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், மேல் முறையீடு செய்த வழக்குகள் போன்ற அனைத்து விவரங்களும், ஆவணங்களும் பராமரிக்கப்படுகின்றன.

ஒருவர் மாநகராட்சி மீது வழக்குப் பதிவு செய்தால், அதற்கான விளக்கங்களை அதிகாரிகளிடமிருந்து மாநகராட்சி சட்ட அலுவலர் கேட்டுப் பெறுவார். அந்த விவரங்களை வழக்கறிஞர்களிடம் வழங்குவார். இவ்வாறு உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்து கொள்வதால் வழக்குகளை திறம்பட எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE