சாமானியர்களின் அரசுப்பணி கனவை நனவாக்கும் திருப்பூர் வேலைவாய்ப்பு அலுவலகம்!

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள போட்டித் தேர்வு மையத்தில் பயின்ற 9 பெண்கள் உட்பட 13 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தொகுதி 2 (ஏ) தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.

திருப்பூர், பல்லடம், அவினாசி, காங்கயம், உடுமலை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பில் நாள்தோறும் பங்கேற்ற இவர்கள், தற்போது தேர்ச்சியும் அடைந்துள்ளனர். இவர்களில் பலர் விவசாயம் மற்றும் எளிய தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

13 பேரும் போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வை தொடர்ந்து கடந்த வாரம் பணி நியமன ஆணைகளை பெற்று, தற்போது பணியில் சேர்ந்துள்ளனர். எம்.கோபிநாத், சிநேகா ஆகியோர் கருவூலத்துறையிலும், ஆர்.சிந்து, கே.பவித்ரா ஆகியோர் பள்ளிக் கல்வித்துறையிலும், வி.ரமேஷ், கே.சையத் ஆகியோர் போக்குவரத்துத் துறையிலும், எஸ்.கிருஷ்ணபிரியா வருவாய்த் துறையிலும், உடுமலை போடிபட்டியை சேர்ந்த எம்.கிருத்திகா மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையிலும் சேர்ந்துள்ளனர்.

ஏ.உதயநிதி சட்டம் மற்றும் நிதித்துறையிலும், திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த எம்.கிருத்திகா கூட்டுறவுத்துறையிலும், விமலாராணி பத்திரப்பதிவுத் துறையிலும், என்.சுகாசினி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையிலும், விஷ்ணுபிரியா சமூக நலத்துறையிலும் உதவியாளர்களாக பணியாற்ற தேர்வாகி பணியில் சேர்ந்துள்ளனர்.

தேர்ச்சி அடைந்தவர்களிடம் பேசியபோது, “அரசுப் பணியில் சேர நினைக்கும் பலரின் நம்பிக்கைத் தாயகமாக, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையம் இருக்கிறது.

வகுப்புகள், பாடக்குறிப்புகள், தனியார் மையத்துக்கு நிகராக இருந்ததால் எங்களால் தேர்ச்சி பெற முடிந்தது. எங்களை போல் பலரும் இங்கு வந்து படித்துக் கொண்டிருக்கின்றனர்.

போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நூலகம், செய்தித்தாள்கள், குறிப்புதவி நூல்கள், படிக்க போதிய அறைகள் என அனைத்து வசதிகளும் இருப்பதால், போட்டித் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறுகிறோம். வாரந்தோறும் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண் பெறுபவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் வழங்கும் ஊக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் உதவியால் எளிதில் தேர்ச்சி பெறுவதாக கருதுகிறோம்.

அசல் டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்றே நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளால் போட்டித் தேர்வை பயமின்றி எழுதி வருகிறோம்’’ என்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரே.சுரேஷ் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் வேலை வாய்ப்பு அலுவலக பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயின்ற எளிய குடும்பங்களை சார்ந்த மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. மனம் தளராத, இடைவிடாத முயற்சி இருந்தால் அனைவரும் தேர்ச்சி பெறலாம் என்பதையே இவர்களின் தேர்ச்சி காட்டுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE