தேக்கடி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் யாசகம் எடுக்க தடை!

By என்.கணேஷ்ராஜ்

குமுளி: தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. வனப்பகுதியான இப்பகுதியில் படகு சவாரி, பசுமை நடை, மலையேற்றம், வியூ பாய்ண்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன.

மேலும் கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் களரி, கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அருகிலேயே வாகமன், ராமக்கல்மெட்டு, செல்லாறு கோயில் மெட்டு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளதால் உள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் தேக்கடிக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான பள்ளத்தாக்குகள், பரந்து விரிந்து கிடக்கும் தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், தவழ்ந்து செல்லும் மேகங்கள், ஆண்டு முழுவதும் நிலவும் இதமான சூழ்நிலை போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். கேரளாவைப் பொறுத்தளவில் அரசின் பெரும்பான்மையான வருவாய் சுற்றுலாத் தொழில் மூலமே கிடைக்கிறது.

இதனால் சுற்றுலா அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்து தரப்படுவதுடன் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக இப்பகுதியில் யாசகம் (பிச்சை) எடுக்கத் தடை விதித்துள்ளது. இதற்காக காவல் துறையினர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து சுற்றுலா வழிகாட்டி ரூபன் கூறியதாவது: மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இவர்களிடம் யாசகம் கேட்பதால் நம் மீது மாறுபட்ட அபிப்ராயம் ஏற்படும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாசகம் எடுப்பவர்களை காவல் துறையினர் மட்டும் அல்லாமல் வியாபாரிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளும் கண்காணித்து அப்புறப்படுத்துவோம். அல்லது அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்போம் என்று கூறினார். சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த விதிமுறையை தொடர்ந்து கண்காணித்து கடுமையாக பின்பற்றி வருகிறோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE