வீணாகும் செயற்கை தடகள ஓடுபாதை: புதுச்சேரி வீரர்கள் பாதிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி உப்பளத்தில் கடந்த 1992-ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இங்கு 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடு பாதை, புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் அமர கேலரி ஆகியவை அமைக்கப்பட்டன.

இத்துடன் கால்பந்து, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஹாக்கி, கையுந்து பந்து, கைப்பந்து மைதானங்களும் உரு வாக்கப்பட்டன. பிறகு ரூ.80 லட்சத்தில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது. பகல் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். மாநில அளவிலான போட்டிகளும் பகல், இரவு நேரங்களில் நடத்தப்பட்டு வந்தன. இதனால் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர். தொடர்ந்து, தேசிய போட்டிகளிலும் பங்கேற்று புதுச் சேரி பெருமையடைந்தது.

காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் மைதானத்தில் உள்ள தடகள வீரர்களுக்கான ஓடுபாதை, கால்பந்து மைதானம் உள்ளிட்டவை சேதமடைந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் செயற்கை தடகள ஓடுபாதை அமைக்க அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து இப்பணிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்துசிந்தடிக் டிராக் லேயர் கொண்டு வரப் பட்டது.

ஓடுதள பாதை அமைக்கும் பணியோ மந்தமாக 3 ஆண்டுகளாக நடந்து முடிந்தது. ஆனால் மூன்று மாதங்களாகியும் விளையாட்டு மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படாமல் வீணாகி வருகிறது. இதுதொடர்பாக விளையாட்டு ஆர்வலர்களிடம் விசாரித்தபோது, ‘‘தடகள வீரர்களுக்கான செயற்கை தடகள ஓடுபாதை வந்தும் எந்த பலனும் இல்லை.கடற்கரை பகுதிகளுக்கு சென்று தடகள பயிற்சி பெற்று வருகின்றனர். இதை அமைத்தால் மட்டும் போதாது. அவற்றை தண்ணீர் ஊற்றி,குறிப்பிட்ட சிதோஷண சூழ்நிலையில் முறையாக பராமரிக்க வேண்டும்.

இல்லையெனில் செயற்கை தடகள ஓடுபாதை பயன்படுத்த முடியாத அளவிற்கு கடினமாகி விடும். ஒரு கட்டத்தில் மட்கி வீணாகி விடும். இதேபோல் கடந்த காலங் களில் ஹாக்கி மைதானத்துக்கு செயற்கை புல்வெளி மைதானம் அமைத்தனர்.அவற்றை முறையாக பராமரிக்காமல், தண்ணீர் தெளிக்காமல் பல கோடி வீணாகி விட்டது. அதே நிலை பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவேற்றிய திட்டத்துக்கும் வரக்கூடாது. அதற்குள் அரசு நடவடிக்கை எடுப்பது மிக அவசியம்'' என்றனர்.

ஸ்டேடியத்துக்கு வருவோர் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தற்போது ஸ்டேடியமே பராமரிப்பி்ல்லாமல் உள்ளது. செயற்கை பாதை இல்லாமல் மண்ணில் விளையாடு வதால், வீரர்களின் ஆட்டத்திறன் பாதிக்கப் படுகிறது. இதனாலேயே புதுச்சேரியில் இருந்து செல்வோர் தேசிய அளவில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஸ்டேடியத்தில் கழிப்பறை, குடிநீர் வசதி சரியாக இல்லை. இதில் அதிகளவில் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற் சிக்கு வரும் பெண்கள், மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். ஸ்டேடியத்துக்கு ஒதுக்கப் படும் நிதி என்னவாகிறது? '' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE