தமிழக அரசின் ஆவின் நிறுவனம், குடுவையில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனைக்கும் ஆயத்தமாவதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பாலமாக செயல்படுகிறது. அரசுசார் அமைப்பு என்பதால், வாடிக்கையாளர்களுக்கு ஆவின் மீதான நம்பகத்தன்மை அதிகம். பால் மட்டுமன்றி பால் சார்ந்த பொருட்களில் நெய், இனிப்புகள் மற்றும் ஐஸ்க்ரீம் என ஆவின் வருமானத்துக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், அண்மைக்காலமாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரு தரப்பிலும் அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன.
தனியார் நிறுவனங்களுக்கு இணையான பால்கொள்முதலில் தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கான பால் விநியோக சேவை வரை ஆவின் செயல்பாடுகள், அதிக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குஜராத்தின் கூட்டுறவு நிறுவனமான ’அமுல்’, அங்கிருந்து தனது விற்பனை கரங்களை தமிழகம் முழுக்க பரப்பியதோடு, தற்போது பால் கொள்முதலிலும் தீவிரமாகி உள்ளது. இதே பிரச்சினை கர்நாடகத்தின் கூட்டுறவு உற்பத்தியான ’நந்தினி’க்கு எதிராக எழுந்தபோது, அவை தேர்தல் பிரச்சாரத்திலும் பெரிதாக வெடித்தன. ஆனால், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தி, தமிழகத்தின் வெண்மைப் புரட்சிக்கு வித்திடவேண்டிய ஆவின் தொடர்ந்து சுணக்கம் காட்டுவதோடு, புதிதாக குடிநீர் வர்த்தகத்திலும் கவனம் இடறுவது கேள்விகளை எழுப்பி வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையை அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தபோது, திமுக உள்ளிட்ட அப்போதைய எதிக்கட்சிகள் அவற்றை கடுமையாக எதிர்த்தன. “பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இலவசமாக வழங்காது, பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் வியாபாரத்தில் இறங்குவது முறையல்ல” என அவை வாதிட்டன. அப்படி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போதுக்கு ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் அதே போன்ற ’குடுவை நீர் விற்பனை’ விசித்திரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
உண்மையில், குடுவையில் அடைக்கப்பட்ட அரசின் குடிநீர் அறிமுகமானபோது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு எழுந்தது. இதற்கு, சுகாதாரமான குடிநீருக்கு எழுந்த தட்டுப்பாடும், அவை தனியார் சந்தையில் சாமானியருக்கு எட்டாத விலையில் இருந்ததுமே காரணம். முந்தைய அரசும் குடிநீர் விற்பனைக்கு மாறாக, பொது இடங்களில் சுகாதாரமான குடிநீரை உறுதி செய்திருக்க வேண்டும். தற்போதைய அரசேனும் அதற்கான நவீன வழிவகைகளை ஆராய வேண்டும்.
நீராதாரங்களை முறையாக பாதுகாத்து வளப்படுத்தினாலே பொது உபயோக குடிநீர் தேவையை சமாளித்துவிடலாம். அவசியமெனில், உரிய சுத்திகரிப்பு நிலையங்களை அரசே நிறுவி பராமரிக்கலாம். அவற்றை ஈடுகட்ட அடையாள அளவில் சிறுதொகையை விலையாகவும் நிர்ணயிக்கலாம். முக்கியமாக, குடிநீரை பாட்டிலில் அடைக்காது, அவரவர் குடுவைகளில் பிடித்துச் செல்வதை வலியுறுத்தலாம். தவிர்க்க இயலாதவர்களுக்கு மட்டும் குடுவையுடன் குடிநீர் வழங்கலாம்.
காற்று போல குடிநீரும், குடிமக்களுக்கு எளிதில் கிடைப்பதாக மாற வேண்டும். ஒரு தலைமுறைக்கு முன்னர் அப்படித்தான் இருந்தது. பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஒரு கலனில் நிரப்பப்பட்ட குடிநீரும் அதனுடன் பிணைக்கப்பட்ட குடுவையுமே பொதுமக்களின் தாகம் தீர்த்தது. காலமாற்றத்தில் அனைத்துமே வணிகமானதில், குடிநீரையும் விலைக்கு நுகரத் தொடங்கினோம். சுத்தம் சுகாதாரம் என்ற பெயரில், நச்சுக்கொல்லிகள் சேர்க்கப்பட்ட நாள்பட்ட தண்ணீரை, சுற்றுச்சூழலுக்கு எமனாகும் பிளாஸ்டிக் குடுவையில் வறட்டுப் பெருமையோடு ஏந்தி வலம் வருகிறோம்.
முன்மாதிரி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நல்லரசு, ஆவின் நிர்வாகத்தை அதன் நீர்த்த நிலையிலிருந்து முதலில் மீட்கட்டும். ஆவினின் பால் உற்பத்தியில் குடிநீர் ’கலப்பதை’ தவிர்ப்பதோடு, பொதுமக்களுக்கான குடிநீர் தேவைகளை உரிய முறையில் தனியாக தீர்க்கவும் அரசு முன்வரட்டும்!