கோவை: விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் தொழில் உள்ளது. இந்நிலையில், பருத்தி, பாலியஸ்டர், விஸ்கோஸ் உள்ளிட்ட ஜவுளி மூலப்பொருட்களின் விலை சர்வதேச விலையை விட இந்தியாவில் அதிகமாக உள்ளதால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) முன்னாள் தலைவர் ரவிசாம் கூறும்போது, “பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்கு மதி வரி இத்தொழில் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம்தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பருத்தி விவசாயிகளிடம் இருக்கும். எனவே, அக்காலகட்டத்தில் இறக்குமதி வரி 11 சதவீதத்தை அமலில் வைக்கலாம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பருத்தி பெரும் பாலும் வர்த்தகர்கள் வசம்தான் இருக்கும்.
அக்காலகட்டத்தில் (6 மாதங்களுக்கு) இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். இதனால் இந்திய ஜவுளித்தொழில் சிறப்பான வளர்ச்சியை பெறும்” என்றார். இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, “பருத்தி, பாலியஸ்டர், விஸ்கோஸ் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை சர்வதேச விலையை விட அதிகமாக உள்ளதால் இந்திய தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நீண்ட இழை பருத்திக்கு மட்டும் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.
30 எம்எம்-க்கு கீழ் உள்ள இழை பருத்திக்கு இறக்குதி வரி 11 சதவீதம் தொடர்கிறது. அதே போல் பாலியஸ்டர், விஸ்கோஸ் பொருட்களின் விலை சர்வதேச சந்தை விலைக்கு நிகராக இருப்பதை உறுதி செய்ய முன்னாள் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் சிறப்பு திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளார். ஆனால் செயற்கை இழைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவற்றை முறையாக பின்பற்றுவதில்லை” என்றார்.
» திமுக முன்னாள் மண்டல தலைவரைக் கொல்ல முயற்சி.. அரிவாளுடன் சுற்றித்திரிந்தவர் கைது!
» 3வது வரை மட்டுமே படிப்பு; தினமும் சைக்கிளில் ஆய்வு - வியக்கவைக்கும் நெல்லையின் புதிய மேயர்!
மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “இன்றைய சூழலில் இந்திய பருத்தி விலை சர்வதேச பருத்தி விலையை விட ஒரு கிலோ ரூ.17 அதிகமாகவும், பாலியஸ்டர் ஒரு கிலோ ரூ.24, விஸ்கோஸ் ஒரு கிலோ ரூ.26 அதிகமாகவும் உள்ளது. இது நல்லதல்ல.
சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் தன்மை கடுமையாக பாதிக்கப்படுகிறது. மத்திய அரசு பருத்திக்கு விதித்துள்ள 11 சதவீத இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க வேண்டும். பாலியஸ்டர், விஸ்கோஸ் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்” என்றார்.