தருமபுரி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தருமபுரியில் புதிய பேருந்து நிலைய பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்காமல் தாமதித்து வருவதால் மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தருமபுரி நகரின் மையத்தில் நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கம், அதன் தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும், நகர வளர்ச்சி நோக்கிலும் தருமபுரி நகருக்கு வெளியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
தொடர் கோரிக்கைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டில் அன்றைய அதிமுக ஆட்சியின்போது தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.
புதிய பேருந்து நிலையம்: அதைத் தொடர்ந்து, தனியார் பங்களிப்புடன் கூடிய மற்றும் டிசைன் பில்டு பைனான்ஸ் ஆபரேட் அண்டு டிரான்ஸ்பர் (டிபிஎப்ஒடி) திட்டங்களின் கீழ் தகுதியான நபரை தேர்வு செய்து தருமபுரி, திண்டிவனம், திருத்தணி உள்ளிட்ட 7 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
» தேனியில் ஆடிப்பெருக்கு: முல்லை பெரியாற்றுக்கு சீர்வழங்கி பெண்கள் உற்சாக வழிபாடு!
» வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழப்பு: 25 பேர் மாயம்!
அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டில் சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் மூலம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட நிலையில் கரோனா சூழலால் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
கரோனா சூழல் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்ததைத் தொடர்ந்து, பெறப்பட்ட 4 ஒப்பந்தப் புள்ளிகளில் 2 புள்ளிகள் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டு 2 புள்ளிகள் குறித்த விவரம், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக நிர்வாக அலுவலகத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும், நிர்வாக காரணங்களால் சில முறை ஒப்பந்தப் புள்ளிகள் நிராகரிக்கப்பட்டது. 2022-ல் பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளில் 2 புள்ளிகள் தகுதி பெற்றன. அவற்றில், உயர்ந்த மதிப்பீட்டில் வருடாந்திர கட்டணம் பதிவிட்டிருந்த நிறுவனத்தை தேர்வு செய்து பேருந்து நிலையம் அமைத்தல் மற்றும் பராமரித்து நிர்வகித்தல் பணிகளை வழங்கும் பணி நிலுவையில் இருந்தது.
பொதுநல வழக்கு: இந்நிலையில், தருமபுரியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர், ‘தருமபுரி நகராட்சியின் வருவாய் இழப்பை தடுக்கும் வகையில் உடனடியாக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதே ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இந்த வழக்கில், ‘நான்கு மாதங்களுக்குள் தருமபுரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தை அமைத்திட வேண்டும்’ என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்: உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கடந்த 24-ம் தேதி தருமபுரி நகராட்சியில் நடந்த அவசரக் கூட்டத்தில், ‘நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கவும் வேண்டும்.
இதற்கிடையில், உயர்ந்த மதிப்பில் வருடாந்திர கட்டணம் குறிப்பிட்டிருந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை வழங்கலாம்’ என தீர்மானம் கொண்டுவந்து அனைத்து உறுப்பினர்களும் (32 பேர்) ஒப்புதல் வழங்கினர்.
தொடரும் தாமதம்: அதன் பின்னரும், பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதால் தருமபுரி மாவட்ட மக்களிடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘நீதிமன்ற உத்தரவுக்கு தருமபுரி நகராட்சி நிர்வாகம் உண்மையாகவே மதிப்பளிப்பதாக இருந்தால் நீதிமன்றம் வழங்கிய 4 மாத அவகாசத்துக்குள்ளாகவே புதிய பேருந்து நிலைய பணிகளை தொடங்கி இருக்க வேண்டும்.
6 மாதங்களைக் கடந்த பின்னர், நீதிமன்ற அவமதிப்பை தவிர்ப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளித்த தருமபுரி நகராட்சி நிர்வாகம் இன்னும் பணிகளை தொடங்கவில்லை. தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் புதிய பேருந்து நிலையம் மிகவும் அவசியம். சில தரப்பினரைத் தவிர அனைவருமே புதிய பேருந்து நிலையத்தை வரவேற்கின்றனர்.
இருப்பினும், அரசியல் ரீதியிலான பின்னணி காரணங்களால் தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி புறக்கணிக்கப்படுகிறது. இனியும் தாமதம் தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நகராட்சி நிர்வாகம் எதிர்கொள்ளும் நிலை உருவாகும். அதேபோல, பேருந்து நிலையம் தொடர்பாக அரசின் மீதும் மக்களுக்கு நம்பிக்கையின்மை உருவாகும், என்றனர்.
இதுதொடர்பாக, தருமபுரி நகராட்சி ஆணையர் புவனேஸ்வரனிடம் கேட்டபோது, ‘தருமபுரியில் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்க நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.