வாணியம்பாடி அருகே வரலாற்று சிறப்புமிக்க போர்வாள்கள் கண்டெடுப்பு!

By ந. சரவணன்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த பழங்கால போர் வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி தலைமையில், வரலாற்று ஆர்வலர் காணி நிலம் மு. முனிசாமி, வாணியம்பாடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்களை சேகரித்து, அதன் விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், வாணியம்பாடி அருகே ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில் பழங்கால 2 போர் வாள்கள் கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் செல்வன் மோனீஷ் தன்னுடைய பாட்டி வரலாற்று சிறப்புமிக்க போர் வாள்களை பாதுகாத்து வருவதாக கூறிய தகவலின் பேரில், ‘வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியிலுள்ள வன்னியர் அடிகளார் நகரில் வசித்து வரும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் எழில் இல்லத்துக்கு நாங்கள் சென்றோம்.போர்வாள்களை

அங்கு, எழில் அம்மையார் தான் பாதுகாத்து வந்த 34 செ.மீ. நீளமுடைய கைப்பிடிகளோடு கூடிய இரண்டு போர்வாள்களை எங்களிடத்தில் ஒப்படைத்தார். இந்த போர்வாள்கள் இரண்டும் தன்னுடைய தந்தையார் அர்ஜூனன் பாதுகாத்து வந்ததாகவும், அவருக்கு முன்பிருந்தே அவர்களின் முன்னோர்கள் இந்த போர்வாள்களை பாதுகாத்து வருவதாக கூறினார்.

அந்த போர்வாளை ஓய்வுப்பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர் பெ.வெங்கடேசனிடம் காட்டியபோது, இந்தப் போர் வாள்கள் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர்களின் காலத்தைச் சேர்ந்ததாக கூறினார். இந்த போர் வாள்கள் தமிழரின் பண்பாட்டு வரலாற்றை எடுத்துரைப்பதாக உள்ளன. ‘‘வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே” என்ற புறநானூற்று 312- வது பாடலை பொன் முடியார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

இதேபாடலில், ஒளிறுகின்ற வலிமையுடைய வாளைக் கொண்டு பகைவரின் யானைகளை வெட்டி வீழ்த்தி விட்டு வருவது தமிழ்நாட்டு இளம்போர் வீரர்களின் கடமை என்றும் அப்புலவர் பாடுகிறார். இந்த பாடலை போல பல சங்க இலக்கியப் பாடல்கள் இரும்பை உருக்கி வாள் உள்ளிட்ட போர் கருவிகளை செய்வதை வலியுறுத்துகின்றன. சங்க இலக்கிய நூல்களான புறநானூறு, பதிற்றுப்பத்து உள்ளிட்ட தமிழ் நூல்கள் போர்க்கலையினை பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பினை உருக்கி போர் தொழிலில் சிறந்த இரும்பு கொல்லர்களும், இளம் போர் மறவர்களும் நிறைந்த நாடாக தமிழ்நாடு விளங்கியிருந்தது. அதனுடைய தொடர்ச்சியாக பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், சம்புவராயர்கள், விஜயநகர பேரரசன் ஒரு பிரிவான நாயக்க மன்னர்கள், முகமதிய மன்னர்கள், ஐரோப்பியர்கள் என வலிமையுடைய அரசாட்சி தமிழகத்தில் நடந்திருக்கின்றன.

வட தமிழகத்தின் ஒரு பகுதியான வாணியம்பாடி பாலாற்றின் கரையில் அமைந்திருக்கும் வளம்மிக்க ஊராகும். ஆந்திரா, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்கள் வாணியம்பாடி அருகே உள்ளன.

மேலும் நாயக்கர், முகமதியர், ஐரோப்பியர் உள்ளிட்ட வேற்று மொழி பேசும் மன்னர்களால் அடிக்கடி போர்களை வாணியம்பாடி சந்தித்திருக்கிறது. அதன் விளைவாக போர் தொழிலில் சிறந்த பல வீரர்கள் இந்த பகுதியில் வாழ்ந்திருப்பர். இதனை எடுத்துரைக்கும் விதத்தில் கைகளில் போர்வாள்களை வைத் திருக்கும் ஏராளமான நடுகற்கள் இப்பகுதியில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

நடுகற்களில் குறிப்பிடப்படும் போர்வாள்கள் இரண்டு சிறந்த இரும்பினால் செய்யப்பட்டு தரமாக கிடைப்பது இதுவே முதல்முறை. மேலும், இந்த பகுதியில் நடைபெற்ற பல போர்களையும் இந்த வாள்கள் நினைவுப்படுத்துகின்றன. இதுபோன்ற பல அரிய வரலாற்று தரவுகளை எங்களுடைய ஆய்வுக் குழு கடந்த 15 ஆண்டுகளாக கண்டறிந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்து வருவது சிறப்புக்குரியது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE