இரண்டே மாதங்களில் முடிவுக்கு வந்த அவலம்: முடங்கியது புதுச்சேரி - சென்னை சரக்கு கப்பல் போக்குவரத்து!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி - சென்னை சரக்கு கப்பல் போக்குவரத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு அமர்க்களமாக தொடங்கப்பட்டு, இரண்டே மாதங்களில் முடங்கிபோய் விட்டது. அதன்பின், ஒன்றரை ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி உப்பளத்தில் சிறிய அளவிலான புதிய துறைமுகம் கடந்த 1994-ல் தொடங்கப்பட்டது. இந்த துறைமுகம் மூலம் 2006-ம் ஆண்டு வரையில் சரக்குகள் கையாளப்பட்டன.

அதன் பிறகு இந்த துறைமுகத்துக்கு எந்தக் கப்பலும் வரவில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்களில் வரும் சரக்குகளை சென்னை துறைமுகத்தில் இறக்கி, பல்வேறு ஊர்களுக்கு சாலை மார்க்கமாக லாரிகளில் எடுத்துச் செல்கின்றனர்.

இதனால் சென்னை - புதுச்சேரி இடையிலான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாடு முழுவதும், கடல் வழி போக்குவரத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. சிறிய துறைமுகங்களிலும் கப்பல் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கண்டெய்னர் டெலிவரி சேவை தொடக்கப் பணிகள் நடந்தன.

புதுச்சேரி துறைமுகத்துக்கு உயிரூட்ட, சென்னை - புதுச்சேரி இடையிலான வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க, இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அதன் பிறகு துறைமுக முகத்துவாரத்தில் சரக்கு கப்பல் சென்று வருவதற்காக ஆழப்படுத்தும் பணியும் நடந்தது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு, கடந்த 2023 பிப்ரவரி மாதம் சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் இரண்டே மாதங்களில் இது முடிவுக்கு வந்தது.

இதுபற்றி துறைமுக வட்டாரங்களில் விசாரித்த போது, இத்திட்டம் தொடங்கப்பட்டதும், குளோபல் லாஜிஸ்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த ‘ஹோப்7’ என்ற கப்பல் வாரத்துக்கு இருமுறை புதுச்சேரி - சென்னை இடையே சரக்குகளை ஏற்றி சென்றன. 106 கண்டெய்னரில் சரக்குகள் கையாளப்பட்டன.

பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளை தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக, அவைகள் புதுச்சேரி துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டன. அங்கிருந்து சாலை மார்க்கமாக தேவையான இடங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் புதுச்சேரி துறைமுகத்துக்கு வந்து இங்கு சுங்கவரி உள்ளிட்ட ‘கிளியரன்ஸ்’ அனைத்தையும் முடித்து, சரக்கு சென்னை துறைமுகத்துக்கு சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் கால விரயம் குறைந்தது.

புதுச்சேரி - சென்னை துறைமுகங் களுக்கு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையால் 25 சதவீதம் செலவு குறைந்தது. சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் கிடைத்தது. மேலும் பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் தொடங்கிய வேகத்தில், இரண்டு மாதங்களில் இத்திட்டம் முடங்கி போனது.

“சரக்கு கப்பல் உரிமையாளருக்கும் கப்பலை வாடகைக்கு எடுத்து நடத்தும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பண பிரச்சினை தான் இதற்கு காரணம். கப்பல் பழுது பார்க்கும் செலவு தொடர்பாக உரிமையாளருக்கும் அதை ஏற்று நடத்திய ஏஜென்ட் இடையே ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளது” என்று தெரிவிக்கின்றனர். கண்டெய்னர் மட்டுமில்லாமல் அடுத்து காய்கறி ஏற்றி செல்ல வந்த கப்பலும் செயல்படவில்லை. சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் கப்பல் சேவை தொடங்குவதாக அறிவித்தும் அதுவும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதுபற்றி புதுச்சேரி இளையோர் கூறுகையில், “சரக்கு கப்பல் வருகை திட்டத்தால் இப்பகுதி பொருளாதாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருதரப்பு பிரச்சினையால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், இதைச்சார்ந்து வரும் வேலைவாய்ப்புகளும் பறிபோய் விடுகிறது.

புதுச்சேரியில் ‘இரட்டை இன்ஜின்’ ஆட்சி நடப்பதாக தெரிவிக்கின்றனர். அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வராமல் உள்ளது. சரக்கு கப்பல் போக்குவரத்து நின்று ஒன்றரை ஆண்டுகளாகி விட்டது. இனியாவது அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE