அருளே ஆனந்தம் 21: மகா பெரியவா

By காமதேனு

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

‘இன்பம்’ என்கிற ஒன்று இருந்தால் ‘துன்பம்’ என்கிற இன்னொன்றும் இருக்கும்.
‘லாபம்’ என்கிற ஒன்று இருந்தால், ‘நஷ்டம்’ என்கிற இன்னொன்றும் இருக்கும்.
அதுபோல் பிறப்பு என்று இருந்தால், இறப்பும் இருக்கும்.
திருஞானசம்பந்தர் பதினாறு வயதில் இறைவனடி சேர்ந்தார்.
ஆதிசங்கரர் முப்பத்திரண்டு வயதில் சிவனோடு கலந்தார்.
இவர்களைப் போல் எத்தனையோ அருளாளர்கள், குறுகிய காலமே வாழ்ந்து வியத்தகு சாதனைகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இவர்கள் சாதித்த விஷயங்கள், நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற ஆன்மிகப் பொக்கிஷங்கள் ஏராளம்.
மனிதப் பிறவியில் பிறருக்கு ஏதேனும் நம்மால் முடிந்த நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்கிற கொள்கையோடு வாழ வேண்டும்.
மற்றவர்களின் நல்லது, கெட்டதுகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷத்தில் திளைக்கின்ற ஒருவனிடம் சென்று அவனது உயர்வுக்கு மேலும் வாழ்த்த வேண்டும். துக்கத்தில் காணப்படுகின்ற ஒருவனிடம் அவனது சோகத்தை பதமாக விசாரித்து அறிந்து, அதில் நாமும் பங்கு கொள்ள வேண்டும்.
இறப்பு என்கிற செய்தியைக் கேட்டால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஓடோடிப் போய் உதவ வேண்டும்.
‘நல்ல காரியங்களில் கலந்து கொள்ளாமல்கூட விட்டுவிடலாம். தவறில்லை. ஆனால், இறப்பு என்கிற செய்தி காதில் விழுந்தவுடனே எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அங்கே செல்ல வேண்டும்’ என்று இன்றைக்கும் தமிழக கிராமங்களில் பேச்சு உண்டு.
கிராமங்களில் கல்யாணத்துக்குக் கூடுகிற கூட்டத்தை விட, ஒருவருடைய இறப்பின்போது கூடுகிற கூட்டம் கட்டுக்கடங்காத ஒன்று.
காரணம்... மனிதனின் இறுதிப் பயணம் அது. எத்தனையோ இடர்களையும், துயரங்களை யும் கடந்து வாழ்ந்து முடித்திருக்கிறான். எனவே, அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவனை உற்சாகமாக வழியனுப்ப வேண்டும். இதனால்தான் ஆட்டம், பாட்டம், மேள தாளம், வாணவேடிக்கை, மலர்மாலைகள் எல்லாமே!
நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா சொல்வார்:
‘உன்னுடைய கிராமத்திலோ அல்லது நீ வசிக்கிற இடத்துக்கு அருகிலோ ஒருவன் இறக்கும் தருவாயில் இருக்கிறான் என்று உன் காதில் விழுந்தாலே, உடனே புறப்பட்டுச் செல்ல வேண்டும்.
வீட்டில் இல்லாமல் ஒருவேளை ஆஸ்பத்திரியிலோ அல்லது சிறைச்சாலையிலோ கடைசி காலத்தில் உயிரை விடுகின்றவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களையும் தயங்காமல் உடனுக்குடன் சென்று பார்க்க வேண்டும்.
இந்த இடங்களுக்குச் சாதாரணமாக சென்று பார்த்து விட முடியாது. எனவே, ஆஸ்பத்திரி மற்றும் சிறைச்சாலைகளில் என்னென்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று தெரிந்து கொண்டு, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனுமதி பெற்று அங்கே எப்படிச் செல்ல வேண்டும் என்பனவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வாழ்க்கையின் கடைசித் தருணங்களில் இருக்கின்ற சிலரைப் பார்க்கப் போகிறபோதே நமக்கு நிலவரம் தெரிந்துவிடும் (அதாவது இன்னும் எத்தனை மணி நேரம் தாங்குவார் அல்லது எத்தனை நாள் தாங்குவார் என்று). இறப்பு உறுதியாக நிகழப் போகிறது என்று தீர்மானமாகத் தெரிகின்ற இடங்களுக்குப் போகிறபோது வெறும் கையோடு போகக் கூடாது. என்ன இப்படிச் சொல்கிறேன் என்று குழம்பக் கூடாது. ‘வெளி வஸ்து’ ஒன்றையும் வாங்கிச் செல்ல வேண்டாம் (உயிர் பிரிகிற நேரத்தில் பழங்களோ, இதர பொருட்களோ முக்கியமில்லை. என்றாலும், இறந்த பின் இதர காரியங்கள் செய்வதற்குக் கஷ்டப்படுகிறவர்கள் குடும்பத்துக்கு பண வகையிலும், அல்லது வேறு பொருளுதவி மூலமாகவும் உதவுவது உத்தமம்).
அனைவருக்கும் இதம் தரக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் நாம ஜபம். இந்த நாம ஜபம்தான் ‘சர்வரோக நிவாரணி’. அங்கே பிரியப் போகின்ற ஜீவனின் காதில் விழும்படியாக நாமம் சொல்ல வேண்டும். இத்தகைய நாமங்களைத் தனியாகவும், குழுவாகவும் சொல்லலாம். அப்படிச் சொல்கிறபோது குரலில் சாந்தம் இருக்க வேண்டும். அனைவரும் கூடி ஒருமித்த குரலில் சொல்ல வேண்டும்.
சிவன் கோயில் விபூதி, அம்பாள் சந்நிதி குங்குமம், பெருமாள் கோயில் துளசி போன்ற வற்றை, உயிர் பிரிவதற்கு முன் சம்பந்தப்பட் டவருக்குக் கொடுக்கலாம். கடைசி வேளையில் கொடுக்கப்படுகிற இறை பிரசாதம், அவர்க ளுக்கு முக்தியை வழங்கலாம். இதற்காக எப்போதும் பிரசாதமான விபூதி, குங்குமம், துளசி போன்றவற்றை நீங்கள் ‘ஸ்டாக்’ வைத் திருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி, தோஷங் களை அகற்ற வல்லது ஜலம். அதிலும், கங்கா ஜலம் ரொம்பவும் புனிதமானது. அனைத்துப் பாவங்களையும் போக்கிவிடும் என்பதால், இல்லத்தில் எப்போதும் கங்கா ஜலம் வைத்திருக்க வேண்டும்.
மரணம் அடையப்போகிற ஜீவன் சைவமோ, வைணவமோ... அதைப் பொறுத்து அந்தந்தப் பிரசாதத்தை முன்கூட்டியே கொண்டு போக வேண்டும். அவரவருடைய அபிப்பிராயத்துக்கு, வழிபாட்டுக்கு ஏற்ற வகையில்தான் இந்தப் பிரசாதத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
சைவர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார்கள். மரணம் நிகழப் போகிற இடத்தில் சித்தாந்தச் சண்டைகளைக் கிளப்பக் கூடாது. யாருக்கு எது உபகாரமாக இருக்குமோ, அந்தப் பிரசாதத்தைக் கொடுக்க வேண்டும்.
பெருமாளுக்கு அர்ச்சனை செய்த துளசியை ஆலயங்க ளில் பிரசாதமாகப் பெற்று வந்து வீட்டில் உலர்த்தி வைக்க வேண்டும். இத்தகைய துளசிகளைப் போதுமான அளவு வீட்டில் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றவரை பார்க்கப் போகிறீர்களா? இந்தத் துளசியை எடுத்துக் கொண்டு அவரது இருப்பிடம் செல்ல வேண்டும். பெருமாள் நாமத்தைச் சொல்லி இந்தத் துளசியை அவருக்கு உட்கொள்ளக் கொடுக்க வேண்டும்.
கோயில்களில் பெருமாள் திருவுருவத்துக்கு எப்போதும் அபிஷேகம் (திருமஞ்சனம்) நடைபெறாது. ஆனால், பெரு மாள் திருப்பாதங்களில் மட்டுமே சிறிதளவு நீர் ஊற்றி அபிஷே கம் நடத்துவார்கள். இப்படி பெருமாள் திருப்பாதங்
களுக்கு அபிஷேகம் ஆன தீர்த்தத்தை சேகரித்துக்கொண்டு வந்து இறக்கப் போகின்றவருக்குக் கொடுக்கலாம்.
‘மரணம்’ என்றாலே எல்லோருக்கும் பயம்தான் (இறப்பு வந்துவிடக் கூடாது என்று எல்லோரும் கோயில் கோயி லாகப் படை எடுக்கிறார்கள். எல்லா தெய்வத்தையும் வேண்டுகிறார்கள்). ஆயுள் முழுக்க நாத்திகனாக இருந்த வன் கூடத் தன் இறுதிக் காலத்தில் ஏதோ ஒரு பெரிய சக்திதான் இதுவரை நம்மை ஆட்டுவித்தது... இப்போதும் ஆட்டுவிக்கிறது என்று கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டான்.
எனவே, இறுதி நேரத்தில் மரண பயத்தைப் போக்க அந்த சக்திதான் கதி என்கிற எண்ணம் எத்தகைய நாத்திகனுக்கும் வராமல் இருக்காது. எல்லோருமே ஈஸ்வர தியானத்
தோடுதான் மரணிக்க விரும்புவார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. எனவே, அந்த வேளையில் தனக்குக் கிடைக்கிற (ஆன்மிக) உபசரிப்புகளை யாராக இருந்தாலும் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். அவனுடைய சொந்தக்காரர்களும் வருகின்றவர்கள் செய்யும் இதுபோன்ற இறைக் கைங்கர்யத்தை வரவேற்கவே செய்வார்கள். எந்த வகையிலும் புண்படுத்த விரும்ப மாட்டார்கள்.
வயதானவர்கள் சிலர் இப்படியும் அப்படியும் இழுத்துக் கொண்டிருப்பார்கள். சட்டென்று உயிர் போகாது. சொந்தக்காரர்கள் பலரும் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். ஆனாலும், போகாது. அப்படிப்பட்ட இடத்துக்குப் போய் ‘வைத்தியம் பார்க்கிறேன்... பிழைத்து விடுவார்’ என்று சொல்லி ஏதேனும் சிகிச்சைகளை ஆரம்பித்தால், இருக்கின்ற சொந்த பந்தங்கள் ஆட்சேபனைக் குரல்கள் எழுப்ப நேரிடலாம். ஆனால், ‘புறப்பாடு’ (மயானம் செல்வதை மகா பெரியவா இப்படிச் சொல்கிறார்) நன்றாக நடப்பதற்கு உபகாரம் செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லிப் பாருங்கள்... அங்கே எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
அதிலும் செல்கின்றவர்கள் விபூதி, கங்கா ஜலம், நாம ஜபம் போன்றவற்றோடு செல்வதால் ‘இவர்கள் நமக்கு எந்தச் செலவையும் வைக்க மாட்டார்கள்’ என்று சொந்த பந்தங்கள் தாராளமாக உங்களை அனுமதிப்பார்கள்.
இப்படிப்பட்ட தொண்டினை எவர் ஒருவர் செய்து வந்தாலும், அவரைப் பல குடும்பங்களில் இருந்தும் வலிய அழைக்கவே செய்வார்கள். ஒருவேளை இதுபோன்ற பிராணன் போகிற நிலையில் இருக்கின்ற குடும்பங்களில் இருந்து கூப்பிடவில்லை என்றாலும், ‘தொண்டு உள்ள’த்தோடு நாமே செல்ல வேண்டும்.
‘புறப்பாடு’ பற்றி மகா பெரியவா இன்னும் சொல்கிறார்... பார்ப்போம்!
(ஆனந்தம் தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE