ஏற்காடு கோடை விழா: சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?

By எஸ்.விஜயகுமார்

சேலம்: ஏற்காடு கோடை விழா 22-ல் தொடங்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக் கூடாது என்று மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத மஞ்சப்பை, எஃகு பாத்திரங்கள் கொண்டு வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் 22-ம் தேதி கோடை விழா - மலர்க்காட்சி தொடங்குகிறது. வரும் 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ள கோடை விழாவை, பிளாஸ்டிக் இல்லா கோடை விழாவாகக் கொண்டாட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்காடு கோடை விழாவில், தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் 2 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தை மாசில்லா மாநிலமாக உருவாக்கும் பொருட்டு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் கத்திகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள் உள்பட பல்வேறு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

எனவே, ஏற்காடு கோடை விழாவுக்கு வருகை தரும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் அனைவரும் ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருடக்ளை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவற்றுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மஞ்சப்பை, எஃகு பாத்திரங்கள், வாழை இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், துணி மற்றும் சணல் பைகள், காகித உறிஞ்சு குழல்கள் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவின்பேரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஏற்காடு போலீஸார் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஏற்காட்டில் 15 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அதில், 12 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தைக் கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை வைத்திருந்த கடைக்காரர்களிடம் ரூ.3,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE