விருதுநகர் மாவட்டத்தில் கன மழையால் கரிமூட்டத் தொழில் பாதிப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: தொடர் மழையாலும் உரிய விலை கிடைக்காததாலும் விருதுநகர் மாவட்டத்தில் கரிமூட்டத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மளிகைப் பொருள்கள் வர்த்தகம் மட்டுமின்றி எண்ணெய் உற்பத்தி, மிளகாய் வத்தல் உற்பத்தியிலும் சிறந்து விளங்கி வரும் விருதுநகர் மாவட்டம் கரிமூட்டத் தொழிலிலும் முக்கிய இடத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சீமைக் கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்திருப்பதைக் காண முடியும். இந்தக் கருவேல மரங்களை வெட்டி எரித்து கரியாக்கி அதைக் காசாக்கி பிழைப்பு நடத்தும் குடும்பங்கள் இந்த மாவட்டத்தில் ஏராளம் இருக்கின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிளில் கரிமூட்டத் தொழில் பல தலைமுறைகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெட்டப்பட்ட சீமைக் கருவேல மரங்களை அளவு மற்றும் தரம் வாரியாகப் பிரித்தெடுத்து அவைகளை சீராக அடுக்கிவைத்து, களிமண்ணால்மூடி தீவைத்து மூட்டம் போடுவர். சுமார் ஒரு வாரம் வரை மூட்டம் போடப்பட்ட பின்னர், அதில் தண்ணீர் ஊற்றி அணைத்து மெல்ல பிரித்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

அவ்வாறு மூட்டம்போட்டு பிரித்தெடுக்கப்படும் கரி தூள்கரி, தூர்கரி, உருட்டுக்கரி, குச்சிக்கரி, மண் கரி என 5 வகையாக தரம்பிரிக்கப்படும். இதில் தூள்கரி மற்றும் மண்கரி போன்றவை ஊதுபத்தி, கொசுவர்த்திச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படும். உருட்டுக்கரி, குச்சிக்கரி போன்றவை தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலும் ஓட்டல்களிலும் பயன்படும்.

தூர்கரி இரும்பு உருக்கும் ஆலைகள், ஹோட்டல்கள், பட்டறைகள் போன்றவற்றுக்காக ஓசூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படும். சிறிய அளவிலான கரித்துண்டுகள் ஹோட்டல்கள், வண்டிப் பட்டறைகள் போன்றவைக்கும், கரித்தூள்கள் சிமென்ட் ஆலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும்.

சிமென்ட் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள்களில் ஒன்று கரித்தூள் என்பதால் இதற்கு எப்போதும் தேவை உண்டு. ஆனால், அண்மைக்காலமாக கரித்துண்டுகள் மற்றும் கரித்தூளுக்கான தேவைகள் பெருமளவில் குறைந்துள்ளதால் கரிமூட்டத் தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சுழி பகுதியைச் சேர்ந்த கரிமூட்டத் தொழிலாளர்கள், “நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள ஓட்டல்களில் கரித்துண்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது கேஸ் அடுப்புகளையும், சோலார் அடுப்புகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், கரித்துண்டுகளுக்கான தேவை குறைந்துவிட்டது.

கோடை காலத்தில் கரிமூட்டம் அதிகமாக போடப்படும். ஆனால் தற்போது, தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக கரிமூட்டத் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கருவேல மரங்களை வெட்டிவந்து காயவைத்து, பின்னர் அடுக்கி மூட்டம் போட வேண்டும். ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் கருவேல மரங்களை வெட்டி வருவதும், மூட்டம் போடுவதும் மிகவும் சிரமமாக உள்ளது. மரங்களை வெட்டி வருவதற்கும், மூட்டம் போடுவதற்கும் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. மழை விட்டு இயல்புநிலை திரும்பும் வரையில் கரிமூட்டம் போடமுடியாது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE