கமலா ஹாரிஸுக்கு ஒபமா ஆதரவு: “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்ற ஆதரவுக் குரல் மூலம் அமெரிக்க அரசியல் களத்தில் நிலவிவந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசுபொருளானது. அதேநேரம், பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று, "அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என ஒபாமா எண்ணவில்லை. கமலா ஹாரிஸ் இந்தப் போட்டியில் வெல்ல முடியாது. இதனால் ஒபாமா அதிருப்தியில் இருக்கிறார்" என்று சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது பராக் ஒபாமா மற்றும் அவரின் மனைவி மிட்சேல் ஒபாமா இருவரும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருவரும் ஒன்றாக கமலா ஹாரிஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பராக் ஒபாமா, “இந்த வார தொடக்கத்தில், மிட்சேலும், நானும் எங்கள் தோழி கமலா ஹாரிஸை அழைத்து எங்கள் ஆதரவினை தெரிவித்தோம். கமலா அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்று நாங்கள் நினைக்கிறோம். அவருக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அமெரிக்கா இக்கட்டாக இருக்கும் இந்த தருணத்தில், கமலா வெற்றிபெற, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
» புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி
» பெட்ரோல் டேங்கில் காதலனை அமரவைத்து ரொமான்ஸ்: திருப்பூர் ஜோடிக்கு ரூ.13,000 அபராதம் விதித்த போலீஸ்!
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை: மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து, ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை” - பிரதமர் மோடி: “கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள். எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அக்னி பாதை: மோடி பொய்களை பரப்புவதாக கார்கே சாடல்: அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கார்கில் விஜய் திவஸ் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அற்ப அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி செய்ததில்லை. ராணுவத்தின் உத்தரவின் பேரில் தனது அரசு அக்னி பாதை திட்டத்தை செயல்படுத்தியதாக மோடி கூறுகிறார்.
இது அப்பட்டமான பொய். நமது வீரம் மிக்க ஆயுதப்படைகளுக்கு மன்னிக்க முடியாத அவமானம். மோடி, நீங்கள்தான் பொய்களைப் பரப்புகிறீர்கள். அக்னி பாதை திட்டத்தின் மீது இளைஞர்கள் மத்தியில் கடும் கோபமும் கடும் எதிர்ப்பும் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை நிலையானது. அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கார்கே தெரிவித்துள்ளார்.
பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், “இந்த மனுவை எப்படி பதிவுத் துறை ஏற்றுக்கொண்டது?” என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்: பெண் போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, தினமும் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
“நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால்...” - மம்தா: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
டெல்லி செல்லும் முன்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தின் மீது காட்டப்படும் அரசியல் பாகுபாட்டிற்கு எதிராக நிதி ஆயோக் கூட்டத்தில் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அந்த கட்சியின் தலைவர்களின் அணுகுமுறை, வங்கத்தை பிரிக்க நினைக்கும் வகையில் உள்ளது. பொருளாதார முற்றுகையுடன், புவியியல் தடையையும் விதிக்க விரும்புகிறார்கள். ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் வங்கத்தை பிரிக்க பாஜகவின் பல்வேறு தலைவர்கள் பல்வேறு அறிக்கைகளை விடுகிறார்கள். நாங்கள் அதனை கண்டிக்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் நாங்கள் எங்கள் குரலை பதிவு செய்ய விரும்புகிறோம். எனவே, நான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்” என தெரிவித்தார்.
ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர்" என்று தெரிவித்தார்.
ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் இந்திய ஆடவர் அணி: நடப்பு ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இணைந்து 2013 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் இந்தியா மூன்றாம் இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி ஆனது.
தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டது. அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6.415-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையானது.
கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3.160 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் ரூ.4,500 வரை விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை நகை தயாரிப்பாளர்கள் கணித்துள்ளனர்.