அடிப்படை வசதியின்றி புதர் மண்டிக் கிடக்கிறது தொன்மையான அரிக்கமேடு!

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் ஆய்வு சார்ந்த இடம் அரிக்கமேடு ஆகும். சோழர் காலத்தில் இது ஒரு மீனவ கிராமமாக இருந்து. இது புதுச்சேரி நகருக்கு தெற்கே 6 கி.மீ. தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையோரத்தில் அமைந்துள்ளது.

அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி. அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருக்கிறது. இங்கு கி.மு.200 முதல் கி.பி.200 வரை வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும், ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள்,சுடுமண் சிற்ப பொம்மைகள் கண்டெடுக்கப் பட்டதன் மூலம், ரோமானியர்களுடனான வாணிபம் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது. அரிக்கமேட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள பிற நாட்டவர் அதிகம் ஆர்வம் காட்டினர்.

காரணம் அண்டை நாடுகளுடனான கடல் வாணிபத்தில் அங்கம் வகித்த பல துறை முகங்களின் தொடர்ச்சியான ஒரு துறைமுகமாக இந்த அரிக்கமேடு விளங்கியிருப்பது தான். இத்தனை சிறப்பு மிக்க இடத்தை, இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், தற்போதைய நவீன காலத்துக்கேற்ற அகழ்வாராய்ச்சிகள் ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டு விட்டன. அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதற்கான அடை யாளம் மட்டுமே இங்கு காணப்படுகிறது.

அரியாங்குப்பம் ஆற்றின் கரையை யொட்டி அமைந்துள்ள அரிக்கமேடு தற்போது புதர் மண்டிக்கிடக்கிறது. மரங்கள், செடி, கொடிகள் மட்டுமே உள்ளன. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் கட்டிடம் ஒன்று, இடிந்த நிலையில் காணப்படுகிறது. ஏற்கெனவே இங்கு அகழ்வாய்வு நடத்திய போது கிடைத்த பொருட்கள் தற்போது அருங்காட்சியத்தில் வைத்து பாது காக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்பகுதி சுற்றுலா தலமாக விளங்குகிறது. முக்கியமாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இங்கு நடந்ததால் பலர் இங்கு வருகின்றனர். கோடையில் பலரும் சுற்றுலாவுக்காக வருகின்றனர். ஆனால் அதன் நிலையோ படுமோசம்

இது பற்றி தமிழ் அறிஞர் அறிவன் கூறுகையில், ‘‘இது அகழாய்வு தளம். இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறுக்கு இவ்விடம் சான்று. முந்தைய நமது கடல் வணிகத்தை அறியலாம். இதைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு, அரிக்கமேடு குறித்த எச் செய்தியும் கிடைக்காத வகையில் தற்போது உள்ளது. மத்திய தொல்லியல் துறையும், புதுச்சேரி அரசும் எவ்வித முனைப்பும் காட்டவில்லை.

பலவித வழிகாட்டு பலகைகள் வைக்க வேண்டும். இங்குள்ள பழமையான கட்டிடம் ஒன்று 1771-ல் கட்டப்பட்டது. அது அப்போது அந்நிய போதக சபையாக இருந்தது. இங்கு அருங்காட்சியகம் அமைக்கலாம். அரிக்கமேடு பொருட்களை பட்டியலிட்டு அருங்காட்சியகத்தில் வைப்பது அவசியம். 1930-களில் பிரெஞ்சு காலத்தில் அகழ்வராய்ச்சி நடந்தது. அதையடுத்து 1989 முதல் 1992 வரை வெளி நாட்டு பேராசிரியர் மூலம் நடந்தது.மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘இங்கு அகழ்வாராய்ச்சி ஏதும் நடக்கவில்லை. தகவல் பலகை கூட இல்லை. இன்னும் மேம்படுத்தினால் பலரும் வந்து வரலாறை அறிவார்கள்'' என்றனர்.

பெரியார் திராவிடர் கழகத்தின் லோகு அய்யப்பன் கூறுகையில், ‘‘அரிக்கமேடு குற்றவாளிகளின் புகழிடமாக இருக்கிறது. மணல் திருட்டு, மரம் வெட்டுதல், கஞ்சா புழங்குதல் இங்கு அதிகம். போராட்டம் நடத்தியும் நடவடிக்கையே இல்லை. கழிப்பறை வசதியோ, பாதுகாப்பு வசதியோ இல்லை. இது மாற்றப்பட வேண்டும். இங்கிருந்து எடுத்துச் சென்ற பொருட்களை இங்கேயே காட்சிப் படுத்த வேண்டும். முழுமையான அருங்காட்சியமாக இதை மாற்ற வேண்டும்'' என்றார். அரசும், தொல்லியல் துறையும் இதற்கு செவி சாய்க்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE