மனிதர் வாழும் வீடுகள் கவிதைகள்; வாழ்ந்த வீடுகள் புதினங்கள். கவிதைகள் நிகழ்காலத்தைப் பேசி எதிர்காலக் கனவை விதைக்கும், கற்பனைகளோடு காயங்களை ஆற்ற முயலும். புதினங்கள் பெரும்பாலும் முடிந்த காலத்தை மீட்டெடுக்கச் செல்லும், வாழ்வை கற்பனை தடவிச் சொல்லும்.
புதினமாய் வீற்றிருக்கிறது ஹம்ப்டன் வீடு. இங்கிலாந்து அரச குடும்பங்கள் 200 ஆண்டுகள் வாழ்ந்த அரண்மனை இது (Hampton Court Palace). பூங்கா, கால்வாய், காடு என 750 ஏக்கர் பரப்பளவில் விரிந்து வியப்பளிக்கிறது.
இருள், ஒளி, குளிர், தூறல்
சூடேற்றும் கருவி குளிர் விரட்டிய அறையில் தூங்கி எழுந்தேன். சுடு நீரில் குளித்து, குளிராடை அணிந்தேன். காலை 6.30-க்கு வெளியேற கதவு திறந்தேன். இரவெல்லாம் கதவை அணைந்து நின்ற குளிர் பளிச்சென்று முகத்தில் மோதியது. ஆஹா! என்னே ஓர் ஆனந்தம். முதல் மூச்சுக் காற்றே வாயில் வெண் மேகம் வரைந்தது. சதைகளைத் தேடித் தேடி தழுவியது காற்று. குளிருக்கு அத்தனை ஏக்கமா, புத்துணர்வால் என்னைப் புதுப்பிக்க! மலர்ந்த முகத்துடன், உள்ளங் கைகளுக்குள் விரல்களை மடக்கி, “ஆஹ்!... வாவ்” என்று கத்திக்கொண்டே படி இறங்கி வாசல் கடந்தேன்.
சூரியன் இன்னும் இமை திறக்கவில்லை. பறவைகள் எதுவும் இணை பிரியவில்லை. மின் கம்பங்கள் கண் மூடாத அதிகாலையில், மஞ்சள் ஒளியில், மென் தூறலில், முத்தமிடும் காற்றோடு நடந்தேன். இரண்டு தொடர்வண்டிகளில் பயணித்தேன். தொடர்வண்டி நிலைய நுழைவாயில்களில் செய்தித்தாள்கள் அடுக்கி இருந்தன. யார் வேண்டுமென்றாலும் வாசிக்க எடுத்துச் செல்லலாம். கட்டணமில்லை. அதற்காக, எல்லாரும் எடுக்கவுமில்லை, எடுத்தவர்களும் நான்கைந்து அள்ளவுமில்லை.
சுற்றுலா முன்பதிவு படிவத்தில் இருந்த முகவரிக்கு நடந்தேன். பணியாளர், “நேரே செல்லுங்கள். வாகனங்கள் வேறு இடத்தில் நிற்கின்றன” என்றார். அங்கே, பயணிகள் நீண்ட வரிசையில் நின்றார்கள். நானும் நின்றேன். தலைக்கு மேலிருந்த பாலத்திலிருந்து நீர்த் துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. எனக்கான பேருந்து எண் தெரிந்த பிறகு பேருந்தில் அமர்ந்தேன். கைகளை உரசி சூடேற்றிக்கொண்டே அனைவரையும் வரவேற்ற சுற்றுலா வழிகாட்டி ஹம்ப்டன் அரண்மனையின் வரலாறு சொன்னார்.
மறுமணத்துக்காக புதிய மதம்
“தேம்ஸ் நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது ஹம்ப்டன் அரண்மனை. முதலில், தாமஸ் வல்சே எனும் கத்தோலிக்க கர்தினால் இங்கே இருந்தார். அரசர் 8-ஆம் ஹென்றியின் நண்பராகவும் விளங்கினார். அரசருக்கு ஆண் குழந்தை இல்லை. எனவே முதல் மனைவி அரகோன் பகுதியைச் சேர்ந்த கேத்தரினை விவாகரத்து செய்ய நினைத்தார். கர்தினால் வழியாக கத்தோலிக்கத் திருச்சபையின் அனுமதி கேட்டார். கிடைக்கவில்லை.
“கத்தோலிக்கத் திருச்சபை எனக்கு வேண்டாம். இங்கிலாந்து தனி திருச்சபையாக இருக்கும். நானே தலைவர்!” என்று அறிவித்தார். ஆங்கிலிக்கன் சபை உருவானது. ஹம்ப்டன் அரண்மனையையும் அரசர் கைப்பற்றினார். அடுத்தடுத்து, தான் மணமுடித்த 6 மனைவிகளுடனும் 8-ஆம் ஹென்றி இந்த அரண்மனையில் வாழ்ந்தார். அதில், ஆண் குழந்தை பெற்றெடுத்த 3-வது மனைவி பிரசவ நேரத்தில் இறந்தார். 5-வது மனைவி ராஜ துரோகம் மற்றும் கூடா ஒழுக்கக் குற்றச்சாட்டில் கொல்லப்பட்டார்.
தைவான் தோழி
வரலாறு கேட்டுக்கொண்டே சென்றோம். அரண்மனைக்கு சற்று தொலைவில் வாகனம் நிறுத்துமிடத்தில் இறங்கினோம். இரவில் மேகம் அழுத தடம் தரையில் தெரிந்தது. கண்ணீரில் கால் படாது நடந்தோம். நீர் தழுவிய இலைகள் வாய் துடைக்க சூரியக் கதிருக்காகக் காத்திருந்தன. எல்லோரும் வந்து சேரும் வரை, அரண்மனை சதுக்கத்துக்கு முன்பாக நானும் காத்திருந்தேன். சாம்பல் பூத்த காலையில் செங்கழுநீர் மலர்போல மலர்ந்திருந்தேன். என்னருகில் தைவான் இளம்பெண் லிஷ் வு நின்றார். ஆண் நண்பரைப் பார்க்க லண்டன் வந்திருந்தவர், அந்த நாளில், நண்பருக்கு வேறு வேலைகள் இருந்ததால், தனியாக சுற்றுலாவுக்கு வந்திருந்தார். இக்கட்டுரை எழுதும் நாளில், லிஷ் வு-டன் மெசஞ்சரில் உரையாடினேன். நலமோடு இருக்கிறார்.
புதினச் சுவர்கள்
குழுவினர் வந்ததும் அரண்மனையின் முகப்பு நோக்கி நடந்தோம். வழிகாட்டி, “அரசர் 3-ஆம் வில்லியம் மற்றும் அரசி 2-ஆம் மேரி இருவரும் அரண்மனையை இன்னும் பிரமாண்டமாக கட்டத் திட்டமிட்டார்கள். லண்டன் நகரத்தை வடிவமைத்த கிறிஸ்டோபர் ரென் அரசரின் வேண்டுகோளை ஏற்று, இம்மாபெரும் அரண்மனையை வடிவமைத்தார்” என்று சொன்னார். அரண்மனைக்குள் மேலும் இரண்டு சதுக்கங்களைப் பார்த்தோம். அரண்மனையின் உள்ளேயும் வெளியேயும் என்னென்ன இருக்கிறது என்பதை அறிய 2 வரைபடங்கள் கொடுத்தார்கள்.
ஒரு வரைபடத் தாளை விரித்தேன். அரண்மனையின் பிரமாண்டம் கண்டு மலைத்தேன். அரண்மனையின் கோவில், சமையல் கூடம், ஓவியம் மற்றும் கலை சேகரிப்புகள், சுவர் ஓவியங்கள் அனைத்தையும் பார்த்தேன். 8-ஆம் ஹென்றியின் மனைவிகளை ஓவியங்களாகக் கண்டேன்.
முதல் மனைவியின் படத்துக்குக் கீழே, “அரசர் 8-ஆம் ஹென்றியும் அரகோன் பகுதி கேத்தரினும் 24 ஆண்டுகள் திருமண வாழ்க்கை வாழ்ந்தனர். இந்த உலகின் மிக அழகான படைப்பு என கேத்தரின் அழைக்கப்பட்டார்” என்றிருந்தது. 3-வது மனைவி, ஜேன் செய்மோர் படத்தின் கீழே, “அழகிலும் பண்பு நலனிலும் சிறந்தவர். மிகவும் சாந்தமும் கீழ்படிதலும் மிக்கவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
5-வது மனைவி ஆன் பொலீன்: “சொல்லிக்கொள்ளுமளவு அழகி இல்லை. ஆனால் நளினம், நடன ஆற்றல், அனைத்துக்கும் மேலாக தன்னம்பிக்கையும் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியும் மிக்கவர். அவருடைய காலத்தைச் சேர்ந்த அவருடைய படம் எதுவும் கிடைக்கவில்லை. தொலைந்துபோன மூல படத்தை மாதிரியாக வைத்து, மகளும் அரசியுமான முதலாம் எலிசபெத் காலத்தில் இந்தப் படம் வரையப்பட்டது” என்று எழுதி, படத்தின் கீழே, “தலை வெட்டி கொல்லப்பட்டவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அருகில், 8-ஆம் ஹென்றி - கேத்தரின் பார் (6-வது மனைவி) இருவரின் திருமணம் நடைபெற்ற அறையைப் பார்த்தேன்.
சாக்லெட் ஆலை
அரசர் 3-ஆம் வில்லியம் மற்றும் அரசி 2-ஆம் மேரி ஆட்சியில் 1690வாக்கில் அரண்மனையில் சாக்லெட் ஆலை கட்டப்பட்டது. அந்த காலத்தில், சாக்லெட் இங்கிலாந்துக்கு புதிது. சாக்லெட் தயாரிப்பதும் சாப்பிடுவதும் அதிகாரம், செல்வாக்கு, மற்றும் செல்வச் செழிப்பின் அடையாளமாக இருந்தது. அரசரும் அரசியும், காலை உணவின் போது சாக்லெட் குடித்தார்கள். நண்பர்களுக்கு சாக்லெட் விருந்து கொடுத்தார்கள். சாக்லெட் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை அந்த அறையில் பார்த்தோம். காரம் தூக்கலாக இருக்க சிவப்பு மிளகாய் கலந்தும் குடித்திருக்கிறார்கள்.
தோட்டமும் சுகந்தமும்
அரண்மனைக்குப் பின்புறம் மிகப்பெரிய தோட்டம் இருக்கிறது. அழகான கனவுகளில் நடப்பதுபோல இருந்தது. தோட்டத்தைக் கடந்ததும் பெரும் காடு இருக்கிறது. வேட்டையாட விரும்பிய 8-ஆம் ஹென்றி, உருவாக்கிய காடு அது. இங்கே ஐரோப்பிய வகை மான்களை (fallow) வளர்த்தார்கள். வேட்டையாடி மகிழ்ந்தார்கள். இப்போதும், 300 மான்கள் உள்ளன. 1660-இல் அரசர் இரண்டாம் சார்லஸ், புது மனைவிக்கு பரிசாக, காட்டின் நடுவில் கால்வாய் வெட்டினார். இரு கரைகளிலும் 2000 எலுமிச்சை மரங்கள் நட்டார்.
இரண்டாவது வரைபடத்தை விரித்தேன். ஒரு பக்கத்தில் தோட்ட வரைபடமும் மறு பக்கத்தில் அதன் விளக்கமும் இருந்தன. உதாரணமாக,
சமையலறை தோட்டம்
ஏறக்குறைய 150 ஆண்டுகளாக, அரண்மனை சமையலுக்கும் உணவு மேசைக்கும் தேவையான காய்கறிகளும், பழங்களும் இங்கே விளைந்தன. தற்போது தோட்டத்தைச் சீரமைத்து, 18-ஆம் நூற்றாண்டில் இருந்த செடிகளை வைத்துப் பராமரிக்கிறார்கள்.
திராட்சைத் தோட்டம்
அரச குடும்பத்தினருக்காக 1768-இல் உருவாக்கினார்கள். இப்போதும் நல்ல விளைச்சல் கிடைக்கிறது.
அரிய வகை செடி தோட்டம்
அரசி 2-ம் மேரி, அரிதான செடிகளைச் சேகரிப்பதில் ஆர்வம் மிகுந்தவர். குளிர் நாடுகளிலும் வெப்ப நாடுகளிலும் இருந்து கொண்டு வந்த செடிகளை இங்கு வளர்தார்.
பாலைவனம்
17-ஆம் நூற்றாண்டில், அரச குடும்பத்தினர் நடைபயிற்சி செய்வதற்கு உருவான பிரமை (Maze) விளையாட்டு கட்டம் இங்குள்ளது. உள்ளே நுழைந்து வெளியேறுவது நல்ல பொழுதுபோக்கு. அந்த காலத்தில் இருந்ததுபோல இப்போதும் இருப்பது இந்த ஓர் இடம் தான்.
சண்டை நடக்கும் தோட்டம்
அரசர் 8-ஆம் ஹென்றியும் அரச குடும்பத்தினரும் பார்த்து மகிழ்வதற்காக குதிரையேற்றம் மல்யுத்தம் நடந்த இடம் இது. பின்னாளில், அரசர் 3-ஆம் வில்லியம் அந்த இடத்தை தோட்டமாக மாற்றினார்.
(பாதை விரியும்)
அரசி தொலைந்த ஆடை
அரசி முதலாம் எலிசபெத் 1603-இல் இறந்தபோது, அவரது அலமாரியில் ஏறக்குறைய 2000 ஆடை வகைகள் இருந்தன. ஆனால், சில காரணங்களால் அவருடைய ஆடைகள் ஏதும் இல்லை எனும் சூழல் உருவானது. ஆய்வாளர்கள் பலரும் தேடினார்கள். தொடர் தேடலுக்குப் பிறகு, ஒரே ஓர் ஆடை கிடைத்துள்ளது (Lost dress of Elizabeth I). வேறோர் ஊரில் கோவிலின் பீடத் துணியாகப் பயன்பாட்டில் இருந்தது அந்த ஆடை. இறக்கும் தருவாயில் அரசி கோவிலுக்கு கொடுத்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ‘தொலைந்த ஆடை’யை நான் ஹம்ப்டன் அரண்மனையில் பார்த்தேன். வெள்ளியும், பூ வேலைப்பாடுகளுமாக ஜொலித்தது.