வாரம் முழுவதும் எழுந்திருக்க இயலாமலேயே செத்தது, பிள்ளைகளை வளர்த்த பசுமாடு; வீட்டுக்குள் நுழைந்ததும் அரவணைக்கும் நாய், உணவேதும் உண்ணாமல் மூன்றாம் நாளில் இறந்தது; ஆண்டுக்கொரு முறை வாகை மரத்து கிளைகளை விற்று குடும்பச் சுமை சமாளித்த நிலையில், இடியில் கருகியது மரம். மனிதர்களின் மறைவில் மட்டுமல்ல, இயற்கையின் இறப்பிலும் நாம் துவண்டு போகிறோம். இயற்கை தானாக அழிவதும் உண்டு, அழிக்கப்படுவதும் உண்டு. இரண்டையும் அறியத் தருகிறது இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்.
ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே சென்றபோது, பவளப்பாறைகளின் மாதிரிகளைப் பார்த்தேன். ‘பல்லுயிர் பெருக்கத்துக்கான முக்கிய இடமாக பவளப்பாறைகள் திகழ்கின்றன. அருங்காட்சியகத்தில் இருவோட்டுடலி(Bivalves) முதல் பவளப்பாறைகள் வரை மற்றும் புழுக்கள் முதல் ஜெல்லிமீன்கள் வரை முதுகெலும்பு இல்லாதவைகளின் மாதிரிகள் 5 லட்சத்துக்கும் அதிகம் உள்ளன’ என்கிற தகவல் அறிந்தேன்.
நமது எலும்புகளை எவ்வளவு கவனமாக நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு படம் துல்லியமாக விளக்கியது. எலும்பு இல்லாத மனிதன், வெறும் சதை மூட்டைபோல இருக்கிறான்.
நாம் தொலைத்த பொக்கிஷங்கள்
அருங்காட்சியத்தில் உள்ள மிகவும் தனித்துவமான சிலவற்றை, பொக்கிஷ காட்சிக்கூடத்தில் வைத்துள்ளார்கள். 7 கோடிக்கும் அதிகமான மாதிரிகள், புத்தகங்கள் மற்றும் கலைப் படைப்புகளில் இருந்து இவற்றைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் மிகப்பெரிய அசாதாரண கதை இருக்கிறது. சில கதைகள் நம் நம்பிக்கையை அசைத்துப் பார்த்துள்ளன. வேறுசில கதைகள், ‘நாம் இவ்வுலகின் பாதுகாவலர்கள்’ என்னும் புரிதலை வலுப்படுத்தியிருக்கின்றன. ‘இக்கூடத்தில் உள்ள அனைத்தையும் www.nhm.ac.uk/mobiletreasures இணையதளத்திலும் பார்க்கலாம்’ என்கிற குறிப்புடன் உள்ளே நுழைந்தேன்.
குழந்தைகளையும் ஈர்க்கும் வண்ணம் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவியில் பறவை அல்லது விலங்கின் படமும் அதைக் குறித்த சிறு குறிப்பும் உள்ளது. அடியில் பல்வேறு தலைப்புகள் உள்ளன. நேரம் இருந்தால் ஒவ்வொரு தலைப்பாகத் தொடலாம். கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
டோடோ
தொலைக்காட்சியில் டோடோ பறவையின் குறிப்புகள் இருந்தன. தலைப்புகளைத் தொட்டேன். ‘26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக, புறா மாதிரியான பறவைகள் இந்தியப் பெருங்கடலில், மொரிஷியஸ், மடகாஸ்கர் தீவுகளில் அதிகம் இருந்துள்ளன. வேட்டைக்காரர்களே இல்லாத அந்நிலப்பகுதியில் டோடோ வாழ்ந்தது. தேவைக்கு அதிகமாக உணவு கிடைத்தது. 1500-ஆம் ஆண்டுகளின் கடைசியில் மனிதர்கள் அங்கே செல்லும்வரை, ஆபத்து ஏதுமில்லை. கடலோடிகள் வேட்டையாடியதாலும், அவர்கள் கொண்டு சென்ற பூனைகள், பன்றிகள், குரங்குகள் மற்றும் எலிகளுக்கு இரையானதாலும் டோடோக்கள் அழிந்தன. ஆக்கிரமிப்பாளர்கள் காடுகளை அழித்ததால் உணவு இல்லாமல்கூட அழிந்திருக்கலாம்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
டோடோவின் முழுமையான எலும்புக்கூடு ஒருசிலவே கிடைத்துள்ளதால், டோடோ எப்படி இருந்திருக்கும், வாழ்ந்திருக்கும் என்பதை நம்மால் முழுமையாகச் சொல்ல இயலவில்லை. கடலோடிகளால் உருவாக்கப்பட்ட கற்பனைப் படைப்பு என்றுகூட சிலர் நினைத்தார்கள். 1625-இல் ரோலன்ட் சவரி வரைந்த, டோடோ ஓவியத்தைப் பார்த்தேன். தொலைக்காட்சியின் அருகிலேயே, டோடோவின் எலும்புக்கூடு வைத்துள்ளார்கள். சதையும் உயிரும் பொருத்தி கற்பனை செய்தேன். என்னே மகிழ்ச்சியான பறவை அது!
ஆர்கியொட்ரிக்ஸ்
டார்வின் தன்னுடைய பரிணாம கோட்பாடை வெளியிட்ட சில ஆண்டுகள் கழித்து ஆர்கியொட்ரிக்ஸ் (Archaeopteryx) புதைபடிவம் ஜெர்மனியில் 1861-இல் கிடைத்தது. இது 147 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக, ஜுராஸிக் காலத்தின் கடைசியில் வாழ்ந்திருக்கிறது. அருங்காட்சியகத்தில் இருப்பதிலேயே மிகமிக முக்கியமான புதைபடிவம் இது. ஏனென்றால், நமக்குத் தெரிந்த மற்றும் கிடைத்துள்ள ஆரம்பகால பறவையின் புதைபடிவம் இதுதான்.
சிறகுகளின் அமைப்பு, வடிவம் எல்லாமே தற்கால பறவைகளுக்கு இருப்பதுபோலதான் இருக்கிறது. ஆனாலும், பல், தாடை, வால் போன்றவை டயனோசருக்கு இருந்ததுபோல உள்ளன. இது, ஊர்வன வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றார்கள் சில அறிஞர்கள். ஆனால், விலங்குகளை அடையாளம் காண்பதில் உலகப் புகழ்பெற்ற நிபுணரான ரிச்சர்ட் ஓவன் அதை மறுத்தார். இது ஒரு பறவை என்று உறுதிப்படுத்தினார். டார்வினின் தீவிர ஆதரவாளரான தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி, இது டயனோசர் மற்றும் பறவை இரண்டுக்கும் இடையிலான பரிணாம வளர்ச்சியில் தோன்றியது என்றார்.
கேட்கும்போதே பிரமிப்பாக இருக்குதல்லவா? மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்துக்குள் சென்று பொக்கிஷம் அனைத்தையும் வாசித்துப் பாருங்கள். அசந்துபோவீர்கள்!
எரிமலை
எரிமலை வெடிப்பு அனுபவம் நமக்கு இல்லை. ஏனென்றால், இந்தியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் உள்ள ஒரே எரிமலை, பாரன் தீவு எரிமலை. அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் அது இருக்கிறது. ஆபத்து ஏற்படுத்தும் வெடிப்பு ஏதும் இதுவரை நிகழவில்லை. பிரிட்டனிலும், 55 மில்லியன் ஆண்டுகளாக எரிமலை வெடிப்பு ஏதும் நிகழ்ந்ததில்லை. ஆனால், இந்தியாவிலும் பிரிட்டனிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எரிமலை மற்றும் நிலநடுக்கம் குறிந்து அருங்காட்சியகத்தில் உள்ள மிகப்பெரிய காட்சிக்கூடம் கற்பிக்கிறது.
எரிமலைகள் எப்படி உருவாகின்றன, புவித் தட்டுகள் எப்படி நகருகின்றன, இயற்கையின் இயங்குதல் எப்படி கண்காணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை விரிவாக தருகிறார்கள். ஏனென்றால், பல பில்லியன் ஆண்டுகளாக எரிமலைகளும் நிலநடுக்கங்களும்தான் நமது கிரகத்தின் மேற்பரப்பை வடிவமைத்துள்ளன. நமக்குத் தேவையான தனிமங்களையும் தாதுக்களையும் கொடுத்துள்ளன.
கூடத்தில் உள்ள உலக வரைபடத்தில், வட்ட வடிவ 3 பொத்தான்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் தொட வேண்டும்.
1. 2000-ஆம் ஆண்டு முதல், எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும் என்கிற நிலையில் உள்ள எரிமலைகளின் இடங்கள் - தொட்டதும் சிவப்பு விளக்கு எரிந்தது.
2. எங்கெல்லாம் 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை பச்சை விளக்குச் சொன்னது.
3. பூமி தட்டுகளின் எல்லைகளை நீல நிற விளக்குகள் காட்டின.
மற்றொரு தொலைக்காட்சியில் அடுத்தடுத்த படங்களை நகர்த்தினேன். முக்கியமான எரிமலைகள் வெடித்த நாடு, ஆண்டு, ஏற்பட்ட இழப்பு அனைத்தையும் படங்களுடன் சேகரித்துள்ளார்கள். உதாரணமாக சோபியரே மலையில் (Soufriere Hills), ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்த எரிமலை 1995, ஜுலை மாதம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக அடுத்தடுத்து வெடித்ததால், தீவின் தென்பகுதியில் வாழ்ந்த அனைவருமே வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள்.
நிலநடுக்கம்
வீட்டில் உள்ள சிறிய அறை போன்று வடிவமைத்துள்ளார்கள். தொலைக்காட்சிகள், மின்விசிறி, சமையலறை பொருட்கள், நாற்காலிகள், புத்தகங்கள் எல்லாம் இருக்கின்றன. தொலைக்காட்சியில் நிலநடுக்க காணொளி ஓடுகிறது. பார்த்துக்கொண்டு நின்றோம். திடீரென விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தன. தொலைக்காட்சி உள்ளிட்ட எல்லா பொருட்களும் அங்குமிங்கும் ஆடின. தரையும் ஆடியது. எங்களால் நிற்க இயலவில்லை. ஆமாம், நிலநடுக்கம் வரும்போது எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக உணர வைத்தார்கள்.
இங்குள்ள தொலைக்காட்சி திரையிலும் அடுத்தடுத்து நகர்த்தினேன். பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கங்களின் படங்களும், தகவல்களும் இருந்தன. 2004, டிசம்பர் 24 அன்று 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டது. 1900 முதல் நடந்த நிலநடுக்கத்தில் 3-வது அதிகபட்ச ரிக்டர் அளவு இது. இந்திய, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரை நாடுகளில் உள்ளவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தார்கள். சுனாமி உருவானது. இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ள சுனாமிகளில், இதுபோன்று பேரழிவு ஏற்படுத்திய சுனாமி வேறொன்று இல்லை.
என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. 1996-ஆம் ஆண்டுவாக்கில், நான் பள்ளி மாணவனாக இருந்த காலம். குழந்தைகளுக்கான வார பத்திரிகை ஒன்றில், அறிவுக்கு ஐந்து என்கிற பகுதி வரும். 5 கேள்வி கேட்டு பதில் சொல்வார்கள். சுனாமி குறித்து வாசித்திருக்கிறேன். 2004-ல் சுனாமி வந்தபோது, ’அட இது அதுல்ல..’ என்று நினைத்துக்கொண்டேன்!
2010 ஜனவரி 12, ஹெய்தி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,20,000 பேர் கொல்லப்பட்டார்கள். நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டிடங்களும் விழுந்தன. இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலநடுக்கங்களில் அதிக உயிரிழப்பு எற்படுத்திய நிலநடுக்கம் இதுதான்.
அருங்காட்சியகத்தில் அனைத்தையும் முடிந்தவரை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். வாசித்தேன். படமெடுத்தேன். பிங்க் நிறத்தில் பெரிய பூமி பந்து செய்து வைத்துள்ளார்கள். அதன் நடுவில் இங்குவதற்கான படிகள் உள்ளன. இறங்கினேன். மேலும் சில தகவல்களை வாசித்துவிட்டு வீதிக்கு வந்தேன். குளிரும், இருளும் மின்னொளியில் புதுவித ரசனை ஊட்டின.
(பாதை விரியும்)
கர்ப்பிணி பெண்ணின் இதயத் துடிப்பு
ஒரு குழந்தை எப்படி வளரத் தொடங்குகிறது? ஒவ்வொரு மாதமும் அதன் வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது? உள்ளிட்ட தகவல்களுடன் ஓர் அரங்கம் உள்ளது. அதில், தாயின் கருவறையில் 8 மாத சிசு அமர்ந்திருப்பதைத் தத்ரூபமாக செய்து வைத்துள்ளார்கள். இந்தியாவில், ஆடையில்லா குழந்தை பற்றிய பதிவு என்றாலே, ஆண் குழந்தையின் படம்தான் பொதுவாக இருக்கும். ஆனால், அருங்காட்சியகத்தில் பெண் குழந்தையின் படம் இருந்தது. பிரிட்டன் மக்களின் பக்குவப்பட்ட மனதை இக்காட்சி உணர்த்தியது.
அறை முழுவதும் மெல்லிய துடிப்பு சத்தம் கேட்டது. அது, கர்ப்பப்பை உள்ளே கேட்கும் கர்ப்பிணி பெண்ணின் இதயச் சத்தம். ஏற்கெனவே பதிவு செய்து வைத்துள்ள ஒலி, அறை முழுக்க கேட்கிறது. தாயின் இதயத் துடிப்பு ஒலியில், நாமும் சேய்களாகிறோம்.