சிறகை விரி உலகை அறி-78: அறிவியல் ஆளுமைகள்

By சூ.ம.ஜெயசீலன்

கேள்விகள் மிகவும் சுவாரசியமானவை. கேட்பவரையும் கேட்கப்படுபவரையும் பொறுத்து அர்த்தம் பெறும். இருவருக்கிடையிலான உறவுமுறை, மன வருத்தம், வாழ்வின் பரபரப்பு, அந்தந்த நேரத்து நியாயங்கள், மனநிலை, கற்றறிதல் அனைத்துமே பதிலைத் தீர்மானிக்கும்.

“Blue whale என்றதும் முதலில் நினைவுக்கு வருவது என்ன?” சிலரிடம் கேட்டேன். ‘விளையாட்டு’, ‘ஆபத்தானது’, ‘தற்கொலை செய்யத் தூண்டுவது’ போன்ற பதில்கள் கிடைத்தன. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியத்தில் இக்கேள்வியைக் கேட்டால், ‘எங்களின் பொக்கிஷம்' என்று சொல்வார்கள்.

நீலத் திமிங்கிலம்

ஹிண்ட்சே அரங்கத்தின் மையத்தில் நம் தலைக்கு மேலே 25 மீட்டர் நீளமுள்ள பெண் நீல திமிங்கிலத்தின் எலும்புக்கூடு தொங்குகிறது. அரங்கம் முழுவதையும் தம் நிறையழகால் நிறைக்கிறது. இந்த எலும்புக்கூடு, அயர்லாந்தில் உள்ள வெக்ஸ்ஃபோர்டு துறைமுகத்துக்கு அருகே, ஸ்வான்டன் கடற்கரையில் 1891 மார்ச் 26 அன்று ஒதுங்கியது. அருங்காட்சியம் அதை வாங்கியது.

உலகில் வாழ்ந்த, வாழும் உயிரினங்களிலேயே மிகவும் நீளமான உயிரினம் நீலத் திமிங்கிலம். எடை 1,30,000 – 1,50,000 கிலோ இருக்கும். நாக்கு மட்டுமே ஒரு யானை அளவு எடை உடையது. கடலின் சுற்றுச்சூழலை நிலைநிறுத்துவதில் நீலத் திமிங்கிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு நாளைக்கு 2,000 முதல் 4,000 கிலோ கூனிப்பொடிகளைச் சாப்பிடுகின்றன. தங்கள் கழிவுகளின் வழியாக ஆழ் கடலுக்கு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. கோடைகாலத்தில் உணவுக்காகக் குளிர் மிகுந்த துருவப்பகுதி நோக்கி இடம் பெயருகின்றன. இவை, தண்ணீருக்குள் மூழ்கியபடி 300 மீட்டர்வரை தொடர்ந்து செல்லும். 10 முதல் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கியும் இருக்கும்.

நீலத் திமிங்கிலத்தின் எலும்புக்கூடு

நீலத் திமிங்கிலங்கள் உணவருந்தும் முறையே புதுமைதான். தாடைகளைத் திறந்து தொண்டை மடிப்புகளை விரித்து தண்ணீராலும் கூனிப்பொடிகளாலும் வாயை நிரப்புகின்றன. நிரம்பியதும் சல்லடை போன்ற தகட்டெலும்புகளின் (Baleen) வழியாக வேகமாகத் தண்ணீரை வெளியேற்றுகின்றன வாயில் தங்கிய பல நூறு கிலோ கூனிப்பொடிகளைச் சாப்பிடுகின்றன. மிகப்பெரும் கடல் விலங்கு, மிகச் சிறிய மீன்களால் உயிர் வாழ்கிறது. என்னே இயற்கையின் அதிசயம்!

எண்ணெய், உணவு மற்றும் தகட்டெலும்புகளுக்காக நீலத் திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டன. 20-ம் நூற்றாண்டின் கடைசியில் எண்ணிக்கை 400 ஆகக் குறைந்தது. 1960-களில் எடுக்கப்பட்ட சீரிய முயற்சிகளால் பாதுகாக்கப்படும் விலங்காக மாறியது. இதனால், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனாலும், கடல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றங்களால் நீலத் திமிங்கிலம் பாதிப்புக்குரிய மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக உள்ளது.

நீல மார்லின்

அரங்கத்தைச் சுற்றி வருகையில், நீல மார்லின் (Blue Marlin) மீனைப் பார்த்தேன். ‘4 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. கடலின் ஆழத்திலும், குளிர் நிறைந்த பகுதியிலும்கூட வேட்டையாடும் திறமைமிக்கது. ஆயிரக்கணக்கான கூம்பு பற்கள் உண்டு. கண் தசைகளில் இருந்து வெப்பத்தை உருவாக்கும் திறன் இருப்பதால், தன்னுடைய பெரிய கண்களையும், மூளையையும் வெதுவெதுப்பாக வைத்துக்கொள்கிறது. நீல மார்லினுக்கு விலை அதிகம். எனவே, உள்ளூர் மீனவர்கள் மற்றும் வணிக ரீதியில் மீன் பிடிப்பவர்களால் பெரும் அச்சுறுத்தலைச் சந்திக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள 9,00,000 மிகப் பெரிய மீன் மாதிரிகளில் இதுவும் ஒன்று’ என்கிற தகவலில் வியந்தேன்.

சார்லஸ் டார்வின் (1809- 1882)

அரங்கத்தில் இருந்த படிகளில் ஏறினேன். ஏறக்குறைய 20 படிகள் ஏறியதும் அடுத்த தளத்துக்குச் செல்லும் படிகள் வலது பக்கமும் இடது பக்கமுமாகப் பிரிந்தன. நடுவில் இடதுகால் மீது தம் வலது காலைப் போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் சார்லஸ் டார்வின். அருங்காட்சியகம் திறந்து நான்கே ஆண்டுகளில் 1885-ல் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

அருகில் இருந்த குறிப்பில், ‘சார்லஸ் டார்வின் மருத்துவம் படிப்பதற்காக எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கல்லூரி போதனையிலும், அறுவை சிகிச்சையிலும் ஆர்வம் ஏற்படுவதற்குப் பதிலாக அயர்ச்சியுற்றார். இயற்கை வரலாற்றில் அதீத ஆர்வம் கொண்டார். இதனிடையே, மருத்துவப் படிப்பைத் துறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிக்க ஆரம்பித்தார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1831-ல் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். போதகராக வேண்டும் என்கிற எண்ணம்கூட அவருக்கு இருந்தது. நல்லவேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. அந்நேரத்தில், HMS Beagle உலகப் பயணத்தைத் தொடங்கியது. ஆசிரியரின் பரிந்துரையின்படி பயணம் புறப்பட்டார் டார்வின்.

‘ஐந்தாண்டு (1831-1836) பயணம் டார்வினின் வாழ்வை முற்றிலும் மாற்றியது. பல்வேறு நாடுகளில் கப்பல் கரை ஒதுங்கியபோது, அங்கிருந்து ஆயிரக்கணக்கான மாதிரிகளை (Specimens) டார்வின் சேகரித்தார். தான் பார்த்ததையும், தன் கருத்துக்களையும் குறிப்புகளாகப் பதிவு செய்தார். 1859-ல் On the Origin of Species எனும் புத்தகத்தின் வழியாகப் பரிணாமக் கோட்பாட்டை உலகுக்கு வழங்கினார். இயற்கையின் வரலாற்றை அதுவரை நம் முன்னோர்கள் பார்த்த விதத்தை மாற்றினார்’ என்கிறது அக்குறிப்பு. வெள்ளை பளிங்குச் சிலையாக நிமிர்ந்து அமர்ந்திருக்கும் டார்வினுடன் நிழற்படம் எடுத்தேன். படியேறி அடுத்த தளம் சென்றேன். அங்கே வேறு சில சிலைகளைப் பார்த்தேன். ஒவ்வொருவரின் அருகேயும் இருந்த குறிப்புகளை வாசித்தேன்.

ரிச்சர்ட் ஓவன் (1804-1892)

ஓவன் படித்தபோது பள்ளி ஆசிரியர்கள் இவரை சோம்பேறி என்றார்கள். மருத்துவம் படிக்கத் தொடங்கியபோதுகூட ஆர்வம் இல்லாமலே தொடர்ந்தார். ஆனால், மருத்துவப் பேராசிரியர் ஒருவர் உடற்கூறியல் நடத்தியபோது ஓவனின் ஆர்வம் துளிர்விட்டது. விலங்குகளின் உடலையும் மனித உடலையும் ஒப்பிட்டுச் சொன்னபோது கவனம் கூர்மையானது. தன் வாழ்வின் பொருளை உணர்ந்தார். புதைபடிவங்களைப் பகுப்பாய்வு செய்யும் திறனுடன், சிறந்த அறிவியல் அறிஞராகவும், உடற்கூறியலில் திறமைமிக்கவராகவும் மாறினார். டயனோசர் எனும் வார்த்தையை உருவாக்கினார். லண்டன் இயற்கை அருங்காட்சியகத்தை நிறுவினார்.

தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி (1825-1895)

ஹக்ஸ்லி, ஆசிரியர், சிந்தனையாளர் மற்றும் உயிரியல் அறிஞர்களுள் முன்னோடி. டார்வின் கோட்பாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த இவர், கடைசிவரை அவருக்கு ஆதரவாக நின்றார். 1846-ம் ஆண்டு தொடங்கி முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினங்களைச் சேகரித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் மூலம் அறிவியல் அறிஞர்கள் மத்தியில் புகழ்பெற்றார். அறிவியலாளருக்குரிய லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார்.

தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி

சொந்தத் தேடலில் நிறைய கற்ற ஹக்ஸ்லி, எல்லா மக்களுக்கும் அறிவியல் சென்று சேர வேண்டும் என்று நினைத்தார். கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்லாது பல்வேறு பிரிவினர் இடையேயும் உரையாற்றினார். “முதல் நாளில் இருந்தது போலவே, ஒவ்வொரு மனிதருக்கும் உலகம் புதிதாகக் காட்சியளிக்கிறது. பார்க்கும் ஆர்வமுள்ள கண்களுக்குச் சொல்லப்படாத புதுமைகள் நிறைந்ததாகத் தோன்றுகிறது” என்றார்.

ஜோசப் பேங்ஸ் (1743-1820)

தன் வாழ்நாள் முழுவதும் தாவரவியலில் பேரார்வத்துடனும் வாழ்ந்தார். 1768-ல் உலகைச் சுற்றி பயணம் சென்று, பல்வேறு வகையான தாவரங்களையும் விலங்குகளையும் சேகரித்தார். ராயல் சொசைட்டியின் தலைவரானார். ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களுடன் நல்லுறவை உருவாக்கினார்.

ஜோசப் பேங்ஸ்

அரசர் மூன்றாம் ஜார்ஜின் ஆலோசகராக இருந்தபோது. தன்னுடைய அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி ராயல் தாவரவியல் பூங்கா (Royal Botanic Garden, Kew) உருவாக்கினார். அது, உலகின் மிகப்பெரிய தாவரவியல் பூங்காக்களில் ஒன்றாக மாறியது. தற்போது யுனெஸ்கோ புராதனச் சின்னமாக விளங்கும் இந்தப் பூங்காவில் உயிருடன் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமான தாவர வகைகள் உள்ளன. மேலும், 70 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பாதுகாக்கப்படுகின்றன.

ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் (1823-1913)

ரஸ்ஸல், திறமையான அறிவியல் அறிஞர் மற்றும் இயற்கை வரலாற்று சேகரிப்பாளர். இந்தோனேசியாவில் முதன்முதலில் தங்கநிற சிறகுடைய (birdwing) ஒரு ஆண் பட்டாம்பூச்சியைப் பார்த்த தருணத்தைச் சொல்கிறது அவரின் சிலை. “இந்தப் பூச்சியின் அழகு மற்றும் புத்திசாலித்தனம் விவரிக்க முடியாதது” என்று எழுதியுள்ளார் ரஸ்ஸல். உயிரினங்களின் பரிணாமம் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆய்வு செய்தார்.

ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ்

1858-ல் தன் கோட்பாட்டை உருவாக்கினார். இதே போன்றதொரு கருத்தியலை சில ஆண்டுகளுக்கு முன்பு டார்வின் உருவாக்கியிருப்பது தெரியாமலேயே, தன் சிந்தனையை விளக்கி சார்லஸ் டார்வினுக்கு ஒரு கட்டுரை அனுப்பினார். பிறகு, இரண்டு கோட்பாடுகளும் 1858 ஆகஸ்ட் மாதம் ஒன்றாக வெளியிடப்பட்டன. இச்செயல், இருவருக்கும் இடையிலான வாழ்நாள் நட்பை விளக்குகிறது. இது குறித்த குறிப்புகளுடன் தொடர்ந்து நடக்கிறேன்.

(பாதை விரியும்)

ரிச்சர்ட் ஓவன்

கலைநுட்பச் சிலைகள்!

வந்து செல்லும் மாணவர்களையும், பெரியவர்களையும், அறிஞர்களையும் நின்றபடி பார்த்துக்கொண்டிருக்கிறார் ரிச்சர்ட் ஓவன்; நாற்காலியின் கைப்பிடிகளில் தன் இரண்டு கைகளையும் வைத்து மிகமிக எதார்த்தமாக அமர்ந்திருக்கிறார் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி; உயர்ந்த மேடையில், வலது கலை சற்று முன்னே நீட்டி, வலது முழங்கையை நாற்காலியின் கைப்பிடியில் ஊன்றி, கையில் குறிப்பேட்டுடன் வெகு எதார்த்தமாக அமர்ந்து, யாரோ பேசுவதைக் கவனமுடன் செவிமடுக்கிறார்ஜோசப் பேங்ஸ்; கையில் ஈட்டியுடன், தலை சாய்த்து மேல் நோக்கி பார்கிறார் ரஸ்ஸல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE