இதே தேதி... முக்கியச் செய்தி: இதயத்தை உறையவைத்த மும்பை தாக்குதலும் இன்னமும் கிடைக்காத நீதியும்!

By சந்தனார்

“கண்ணில் படுபவர்கள், வருவோர் போவோர் என எல்லோரையும் சுட்டுத்தள்ளு” - மும்பை தாக்குதலின் மூளையாக இருந்தவர்களில் ஒருவரான பாகிஸ்தான் பயங்கரவாதி சாஜித் மிர், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குப் பிறப்பித்த உத்தரவில் இடம்பெற்ற வார்த்தைகள் இவை. இந்தக் குரல் பதிவை, மும்பையில் கடந்த மாதம் நடந்த ஐநா பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்தில் ஒலிக்கவிட்டது இந்தியா. அதைக் கேட்டவர்கள் கனத்த மவுனத்தில் ஆழ்ந்தனர். அந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தபோது, நேரலையில் அதைப் பார்த்த இந்தியர்களின் இதயம் அப்படித்தான் ஸ்தம்பித்துப்போயிருந்தது.

2008 நவம்பர் 26. மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கும் தருணம். மும்பையின் மீனவர் குடியிருப்பு அருகே, கரையொதுங்கிய அந்தப் படகிலிருந்து 10 பேர் இறங்கினார்கள். அவர்களது நோக்கம், சாஜித் மீர் சொன்னது போல் கண்ணில் படும் அனைவரையும் காவு வாங்குவதுதான். அன்றைய தினம் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. 8 பயங்கரவாதிகளும் இந்தியாவுக்குள் நுழைந்த தருணத்தில் மும்பையில் பெரும்பாலானோர் கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தனர். ஆரஞ்சு நிற வாட்டர்ப்ரூஃப் ஜாக்கெட் அணிருந்த 10 பேரும் அவற்றைக் களைந்துவிட்டு, ஜீன்ஸ் - டிஷர்ட் சகிதம் வெறியுடன் முன்னேறினர். முதுகில் கனத்தை பைகளைச் சுமந்திருந்தனர். அவர்களைப் பெரும்பாலானோர் கவனித்திருக்கவில்லை.

தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் பணிபுரிந்துவந்த ஒருவர் காற்று வாங்க கடற்கரைக்குச் சென்றிருந்தார். அவர்களைப் பார்த்ததும் அவருக்கு ஏதோ வித்தியாசமாகப் பட்டிருக்கிறது. பார்க்க பாலிவுட் நடிகர்களைப் போன்ற தோற்றப் பொலிவுடன் அவர்கள் இருந்ததாகவும், அதேசமயம் முகம் இறுக்கமாக இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். 25 வயதுக்குட்பட்ட அந்த இளைஞர்கள்தான் அந்தக் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினர். நவம்பர் 26 முதல் 29 வரை தாக்குதல் தொடர்ந்தது. ஏறத்தாழ 62 மணி நேரம் அந்த இளைஞர்கள் வெறியாட்டம் ஆடினர்.

சத்ரபதி சிவாஜி மஹராஜ் முனையம், ஒபெராய் ட்ரைடென்ட். தாஜ்மஹால் பேலஸ் அண்ட் டவர், நாரிமன் ஹவுஸ் யூத மையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக அவர்கள் நடத்திய அந்தத் தாக்குதலில், 18 பாதுகாப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பயங்கரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே, மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், உதவி ஆணையர் அசோக் காம்டே, மூத்த ஆய்வாளர் விஜய் சலாஸ்கர் எனப் பலர் முக்கிய காவல், ராணுவ அதிகாரிகளை இழந்தோம். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நகரமான மும்பை, பயங்கரவாதத் தாக்குதல்களைப் பல முறை எதிர்கொண்டிருக்கிறது. 1993-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2006-ல் மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், மூன்று நாட்கள் நீடித்த, ஊடக நேரலைகளில் காட்சிப்படுத்தப்பட்ட 2008 தாக்குதல் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் பாகிஸ்தானில் இயங்கிவந்த, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதில், அஜ்மல் கஸாப் தவிர அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 4 வருடங்கள் கழித்து கஸாப் தூக்கிலிடப்பட்டான். லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த சாஜித் மிர், ஹஃபீத் சயீத், ஸாக்கி-உர்-ரஹ்மான் லக்வி போன்றோர் மீது இந்தியா குற்றம்சாட்டியிருந்தாலும், அவர்கள் விஷயத்தில் பாகிஸ்தான் அரசு பல தந்திரங்களை மேற்கொள்கிறது. முதலில், சாஜித் மிர் இறந்துவிட்டதாகக் கூறியது. ஆனால், அது உண்மையல்ல என சமீபத்தில் தெரியவந்தது. அவர் கைதுசெய்யப்பட்டதாக, சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதையும் நியாயத்துக்குக் கட்டுப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல. பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்ட நிதி நடவடிக்கைப் பணிக் குழுவின் சாம்பல் பட்டியலில் இடம்பெற்றால் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேரும் என்பதால், எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்கு இதுவரை இந்தியாவுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்தியா கொடுக்கும் அனைத்து ஆதாரங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு காத்திரமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் தப்பித்துவருகிறது பாகிஸ்தான். அதுமட்டுமல்ல, இந்தத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களையும் அழித்துவருவதாக அந்நாட்டின் மீது குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, தாக்குதலை ஒருங்கிணைக்க கராச்சியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் அமைத்திருந்த கட்டுப்பாட்டு அறையை பாகிஸ்தான் ராணுவம் தகர்த்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மும்பை தாக்குதல் குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா எடுக்கும் முயற்சிகளை பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா முறியடித்துவருகிறது.

இதுபோன்ற தாக்குதல்கள் இனி நடக்காத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக, இந்தியக் கடற்படை உறுதியளித்திருக்கிறது. எந்தக் காரணத்தை முன்னிட்டும், மனிதகுலத்துக்கு எதிரான இதுபோன்ற அக்கிரமங்களை யாரும் செய்யாத வகையில் உலகம் விழிப்புணர்வு பெறட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE