இதே தேதி... முக்கியச் செய்தி: பாலிவுட்டை ஆட்டுவித்த தாரகை!

By சந்தனார்

வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளை வென்று வாகை சூடியவர்கள்தான் வரலாற்றில் நிலைக்கிறார்கள். ஏழ்மை, குடும்பத்தில் சிக்கல்கள் என எதிர்மறையான பின்னணியிலிருந்து வந்து சாதனை செய்த எத்தனையோ பேர் உண்டு. அவர்களில் ஒருவர் சரோஜ் கான். பாலிவுட் திரையுலகின் முதல் பெண் நடன இயக்குநர் எனும் பெருமை கொண்டவர் அவர். அந்த இடத்தை அடைய எதிர்கொண்ட சிரமங்கள் கணக்கில் அடங்காதவை.

1948 நவம்பர் 22-ல் மும்பையில் பிறந்தவர் சரோஜ் கான். இவரது இயற்பெயர் நிர்மலா நாக்பால். அவரது தந்தை கிருஷ்ணசந்த் சாது சிங், கராச்சியில் வெற்றிகரமான வணிகராக இருந்தவர். தேசப்பிரிவினையின்போது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்துவிட்டார். இங்கு பிழைக்க வழியில்லை. ஏழ்மை வாட்டியது. கிருஷ்ணசந்த் - நோனி சிங் தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். நிர்மலாதான் மூத்தவர்.

குழந்தைப் பருவத்திலேயே நடனத்தின் மீது ஈடுபாடு வந்துவிட்டது. சிறுமி நிர்மலாவின் நடன ஆர்வத்தைக் கவனித்த தாய் நோனி சிங்குக்கு அச்சம்தான் ஏற்பட்டது. ஏதோ விபரீதம் எனக் கருதி மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினார். குழந்தைப் பருவத்தில் இப்படியான ஈடுபாடுகள் சகஜம் என மருத்துவர் அவரைச் சமாதானப்படுத்தினார். சினிமாவில் சேர்த்துவிடலாம் என்றும் யோசனை தெரிவித்தார். ஏழ்மையிலிருந்து விடுபட இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே நிர்மலாவின் குடும்பம் கருதியது. ஆனால், உறவினர்கள் என்ன சொல்வார்களோ எனும் பயமும் எழுந்தது. நிர்மலா எனும் பெயரை சரோஜ் என மாற்றினார்கள்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சரோஜ். குடும்பம் வறுமையிலிருந்து மீளத் தொடங்கியது. அந்த மகிழ்ச்சியும் சில ஆண்டுகள்தான் நீடித்தது. புற்றுநோயால் கிருஷ்ணசந்த் சாது சிங் மரணமடைந்தார். சரோஜுக்கு 10 வயதாகியிருந்தது. குழந்தை நட்சத்திரமாக நடிக்க முடியாத சூழல். அப்போதுதான் பாடல்களில் நடனமாடும் நடனக்குழுவில் ஒருவராகச் சேர்ந்துகொண்டார். அந்தக் காலகட்டத்தில் பாலிவுட் திரையுலகின் நடன இயக்குராக இருந்த கதக் நடனக் கலைஞர் சோஹன்லாலின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் முறைப்படி நடனம் கற்றுக்கொண்டார். மிகவும் கண்டிப்பான ஆசிரியராக இருந்து கதக் நடனத்தின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார் சோஹன்லால்.

அதுதான் சரோஜின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அப்போது சரோஜுக்கு 13 வயதுதான். சோஹன்லாலுக்கு 43 வயது. ஏற்கெனவே திருமணமானவர். நான்கு குழந்தைகளுக்குத் தந்தை. இந்த விஷயத்தைச் சொல்லாமலேயே சிறுமி சரோஜை ஏமாற்றினார் சோஹன்லால். எனினும், வயது வித்தியாசத்தையும் தாண்டி வளர்ந்த காதல் ஒருகட்டத்தில் திருமணத்தில் முடிந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. எனினும், அந்த உறவு நீடிக்கவில்லை. ஏகப்பட்ட கசப்புகளைச் சந்தித்தார் சரோஜ். குழந்தைகளுக்கு இனிஷியல் கொடுக்கக்கூட மறுத்துவிட்டார் சோஹன்லால். வலி நிறைந்த வாழ்க்கையைத் தொடர விரும்பாத சரோஜ் அவரிடமிருந்து விலகினார்.

பின்னர் சர்தார் ரோஷன் கான் எனும் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார். சரோஜ் கான் ஆனார். இந்தித் திரைப்படங்களில் நடன இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்துவந்தார். பின்னாட்களில் சோஹன்லால் குறித்த பல பேட்டிகளில் அவர் செய்த கொடுமைகளைப் பற்றிப் பதிவுசெய்த சரோஜ் கான், அவர் மூலம்தான் தனக்கு நல்ல வாழ்க்கையே கிடைத்தது என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

இப்படி ஏற்ற இறக்கமாகச் சென்றுகொண்டிருந்த சரோஜ் கானின் வாழ்க்கை, 1974-ல் மாறியது. சாதனா ஷிவ்தாசானி எனும் பெண் இயக்குநரின் கைவண்ணத்தில் உருவான ‘கீதா மேரா நாம்’ படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானார் சரோஜ். அதுவரை பாலிவுட்டில் நடன ஆசிரியராக ஒரு பெண் இருந்ததில்லை. கடும் சவால்களுக்கு மத்தியில் அந்த இடத்தை அடைந்த சரோஜ், தனது அபாரமான நடனத் திறமையாலும், அர்ப்பணிப்பாலும் உயர்ந்தார்.

ஸ்ரீதேவி, மாதுரி தீக்‌ஷித், ஐஸ்வர்யா ராய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடித்த பாடல் காட்சிகளில், அவர்களது நடனம் மிகப் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. அதன் பின்னணியில் இருந்தவர் சரோஜ் கான் தான். பாலிவுட் எல்லையைத் தாண்டி, நாடு முழுவதும் பேசப்பட்ட பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘ஹவா ஹவாயி (மிஸ்டர் இந்தியா), ‘மைய்ன் தேரி துஷ்மன்’ (நாகினா) போன்ற பாடல்களில் ஸ்ரீதேவியின் நடன அசைவுகளை வடிவமைத்தார். மாதுரி தீக்‌ஷித் நடித்த ‘ஏக் தோ தீன்’ (தேஸாப்), ‘தக் தக் கர்னே லகா’ (பேட்டா), ‘சோளி கே பீச்சே க்யா ஹை’ (கல்நாயக்) எனப் பல பாடல்கள் சரோஜ் கானின் கைவண்ணம்தான். நடனத்துக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத பாலிவுட்டில் சோஹன்லால், அவரது சகோதரர் ஹீராலால் போன்றோரின் வருகை பெரும் திறப்பை ஏற்படுத்தியிருந்தது. சரோஜ் கான் அந்தப் பாதையில் இன்னும் பல படிகள் முன்னே சென்று நடனங்களுக்காகவே படங்கள் வெற்றிபெறும் எனும் மாயத்தை நிகழ்த்தினார். பாலிவுட்டின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உயர்ந்தார். 2,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்தார். மூன்று தேசிய விருதுகள், எட்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகளைப் பெற்றார்.

பின்னாட்களில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றார். இளைஞர்களுக்கு வழிகாட்டினார். முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர், 2020 ஜூலை 3-ல் மும்பையின் பாந்த்ரா மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்திய மாதுரி தீக்‌ஷித், ‘எனது தோழியும் குருவுமான சரோஜ் கானின் மறைவு என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. நடனத்தில் எனது முழுத் திறமையும் வெளிப்பட எனக்கு உதவிய அவருக்கு என்றென்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார்.

மூன்று வயதில் திரைத் துறைக்கு வந்து, ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அந்தத் துறையில் தனியொருத்தியாக நின்று சாதித்துக்காட்டியவர் சரோஜ் கான். உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆர்வமும் இருந்தால், எந்த இடத்திலிருந்தும் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதற்கு சரோஜ் கானின் வாழ்வே சாட்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE