இதே தேதி... முக்கியச் செய்தி: யானி - சுயம்புவாக முகிழ்த்த இசை மேதை!

By சந்தனார்

1997 மார்ச் மாதம்... தாஜ்மஹாலில் நடந்த அந்த இசை நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் கண்டவர்கள் பிரமித்துப்போயினர். காற்றில் அலையும் சிகைக்கற்றைகளுடன், பாந்தமான மீசையின் கீழ் மலர்ந்த புன்னகையுடன் பியானோவை இசைத்தபடி, அழகான இசையை வழங்கிய அந்த மனிதரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். முகலாயக் கட்டுமானக் கலையின் முத்திரைக் கட்டிடமான தாஜ்மஹாலின் பின்னணியில், வான் வரை பொங்கி வழிந்த மேற்கத்திய இசையில் கிறங்கினர். பாப், ராக் என 90-களில் துடிப்பும் துள்ளலுமாக இசை கேட்டு ரசித்த இளைஞர்களும், மெலடியாக மனதை வருடிய இசைக்கோவையை ருசித்தனர். அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் - யானி.

1954 நவம்பர் 14-ல் கிரேக்க நாட்டின் கலமாட்டா நகரில் பிறந்தவர் யானி. அவரது தந்தை சோதிரி க்றிஸ்ஸோமாலிஸ் ஒரு வங்கியாளர். தாய் ஃபெலிட்ஸாவின் அரவணைப்பில் வளர்ந்த யானி, இளம் வயதிலிருந்தே இசை மீது நாட்டம் கொண்டிருந்தார். 6 வயதில் பியானோ இசைக்கத் தொடங்கிவிட்டார். இசை கற்றுக்கொள்ள அவரை யாரிடமும் அனுப்பவில்லை அவரது பெற்றோர். அவரே இசை கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

இசைஞானி இளையராஜா போன்ற மிகப் பெரிய இசை மேதைகள் இசைக் குறிப்புகளை (notes) ஸ்கோர் ஷீட்டில் எழுதுவார்கள். இசை கற்றறிந்த மேதைகள் வழக்கமாகச் செய்வது அதைத்தான். ஆனால், முறைப்படி இசை கற்றுக்கொள்ளாமல் சூயம்புவாக முளைத்த யானி, தனது சொந்த பாணியில் குறுக்கெழுத்தில் இசைக்குறிப்புகளை எழுதலானார் (பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற இசை மேதையாக உயர்ந்த பின்னரும், அதே பாணியைத்தான் கடைப்பிடித்தார். அவரது பிரத்யேக நுட்பங்களைப் புரிந்துகொண்டவர்கள்தான் அதைப் புரிந்துகொண்டு வழக்கமான இசைக்குறிப்புகளாக மாற்றி இசைக் கலைஞர்களுக்கு வழங்குவார்கள்).

1972-ல் அவரது குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு மின்னெசொட்டா பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்றார். கூடவே, ராக் இசைக் குழு ஒன்றில் சேர்ந்துகொண்டார். பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தார்.

ஒருகட்டத்தில் இசை தான் தனது வாழ்வின் முக்கிய அம்சம் என உணர்ந்தவர், இளநிலைப் படிப்பை முடித்ததும் முழுமையாக ஒரு வருடத்தை இசைக்கென ஒதுக்க முடிவெடுத்தார். குடும்பத்தினரும் ஒத்துழைத்தனர். அந்த ஒரு வருடத்தில் மனிதர் அத்தனை மகிழ்ச்சியாக உணர்ந்தார். இனி இசை மட்டும்தான் என்று தீர்மானித்துக்கொண்டார்.

சமேலியன் எனும் ராக் இசைக் குழுவில் சேர்ந்தார். அந்தக் குழுவின் நிறுவனரும் டிரம்ஸ் இசைக்கலைஞருமான சார்லி ஆடம்ஸுடனான நட்பு அவரது இசைப் பயணத்துக்கு மேலும் வலு சேர்த்தது.

சிறு வயதிலிருந்தே பீத்தோவன், சாப்பின், மொஸார்ட், பாஹ் என மேற்கத்திய செவ்வியல் இசை மேதைகளின் இசைக்கோவைகளைக் கேட்டு வளர்ந்த யானி, கூடவே ராக் இசையையும் கேட்டு ரசித்து உள்வாங்கிக்கொண்டார். புகழ்பெற்ற பியானோ இசைக்கோவைகளில் மூழ்கித் திளைத்தார். எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதில் நல்ல தேர்ச்சி இருந்தது.

ஆசியா, லத்தீன் அமெரிக்கா, மத்தியக் கிழக்கு என வெவ்வேறு பிராந்திய இசை வகைகளின் நுட்பங்களைக் கிரகித்துக்கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமாக அவருக்குள் முகிழ்த்த இசையை மேம்படுத்தி வழங்கினார். 1980-ல் அவரது முதல் ஆல்பமான ‘ஆப்டிமிஸ்டிக்’ வெளியானது. 1987-ல் தனக்கென ஒரு இசைக்குழுவை உருவாக்கினார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.

சில திரைப்படங்களுக்கும் இசையமைத்தார். ஆனால், அவற்றின் மூலம் எல்லாம் கிடைக்காத புகழ், அவரது மேடை இசைக் கச்சேரிகள் மூலம் கிடைத்தது. தனது தாய்நாடான கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் உள்ள, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அக்ரோபோலிஸ் அரங்கில் அவர் நடத்திய ‘நாஸ்டால்ஜியா’ எனும் இசை நிகழ்ச்சி அவரது புகழை உலகமெங்கும் பரப்பியது. அந்நிகழ்ச்சியின் காணொலிக் காட்சி அடங்கிய சிடி, விற்பனையில் சாதனை படைத்தது. மைக்கேல் ஜாக்ஸனின் ‘த்ரில்லர்’ ஆல்பத்துக்குப் பின்னர் அதிக அளவில் விற்பனையான இசைக் காணொலி சிடி எனும் பெருமை அதற்குக் கிடைத்தது.

அதன் பின்னர், இந்தியாவில் தாஜ்மஹால், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஃபார்பிடன் சிட்டி என அவர் அடுத்தடுத்து நடத்திய இசை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றவை.

உலகமெங்கும் உள்ள மேற்கத்திய செவ்வியல் இசை ரசிகர்களையும், நவீன இசை வடிவங்களை ஆராதிப்பவர்களையும் ஒருசேரக் கவர்ந்தவர் யானி. உலகின் கடைக்கோடி ரசிகருக்கும் விருந்து படைக்கும் இசை வடிவம் அவருடையது. ஜெர்ரி கோல்ட்ஸ்மித், ஜான் வில்லியம்ஸ் என பல ஹாலிவுட் இசையமைப்பாளர்களின் பரம ரசிகரான யானி, பல இசையமைப்பாளர்களின் கற்பனைக்குத் தாக்கம் தந்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படமான ‘ரோஜா’வில் இடம்பெற்ற ‘புது வெள்ளை மழை’ பாடலில், யானியின் ‘தி கொயட் மேன்’ இசைக்கோவையின் தாக்கத்தைக் காணலாம். குறிப்பாக, ‘நதிநீர் நீயானால் அலை நானாவேன்’ எனும் வரியின் மெட்டு யானிக்குச் செய்யப்பட்ட அர்ப்பணம் என்று வைத்துக்கொள்ளலாம்.

இன்று யானிக்குப் பிறந்தநாள். அவரது இசைக்கோவைகளைக் கடந்து வராத இசை ரசிகர்கள் இருக்க முடியாது.

ஃபார்பிடன் சிட்டியில் சீனப் புல்லாங்குழலைப் பிரதானமாக வைத்து அவர் இசைக்கும் ‘நைட்டிங்கேல்’ இசைக்கோவையைக் கேட்டுப்பாருங்கள். அடர்ந்த வனத்துக்குள், எங்கோ ஒரு மரத்தின் உச்சியிலிலிருந்து பாடும் பறவையை மனதுக்குள் உணர முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE