இதே தேதி... முக்கியச் செய்தி: தொலைநோக்குச் சிந்தனையாளர் சி.எஸ்!

By சந்தனார்

எளிமை, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வார்கள். அப்படியான தலைவர்களில் ஒருவர் சி.சுப்பிரமணியம். பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து தமிழக அமைச்சராகவும் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்தவர். மத்தியிலும் மாநிலத்திலும் நிகழ்ந்த மறக்க முடியாத மாற்றங்கள் பலவற்றுக்கு அச்சாரமாக இருந்தவர், ஆளுநராகப் பணியாற்றிய காலத்தில் அந்தப் பதவிக்கு கெளரவம் சேர்த்தவர் என பல சிறப்புகளைக் கொண்டவர் சி.சுப்பிரமணியம்.

1910 ஜனவரி 30-ல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைப்பாளையத்தில் பிறந்தவர் சி.சுப்பிரமணியம். பொள்ளாச்சியில் பள்ளிக் கல்வியைத் தொடங்கிய அவர், சென்னை சென்று பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் பயின்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு போராடியவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர். கோவையில் குற்றவியல் வழக்கறிஞராக இயங்கிவந்தார்.

சி.சுப்பிரமணியம் முன்னெடுத்த நடவடிக்கைகளால் கவரப்பட்ட ராஜாஜி, 1951-ல் அவரை அரசியலுக்கு அழைத்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சி.எஸ், அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தின் அடிப்படை அம்சங்களைக் கற்றறிந்தார். 1952 முதல் 1962 வரை ராஜாஜி, காமராஜர் என இரண்டு சிறந்த முதல்வர்களின் கீழ், கல்வித் துறை, சட்டத் துறை, நிதித் துறை அமைச்சர் பதவிகளை வகித்தார். மேலவைத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். பின்னர் தேசிய அரசியலில் கால் பதித்தார். 1962-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் வென்று நாடாளுமன்றம் சென்றார். பிரதமர் நேரு அமைச்சரவையில் எஃகு மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றினார்.

பசுமைப் புரட்சியின் பங்காளர்

1964 ஜூன் மாதம், அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவரை அழைத்தார். அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டு சற்றே ஏமாற்றமடைந்தார் சி.எஸ். ஆம், வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் சாஸ்திரி. சி.எஸ்ஸின் முகத்தில் தென்பட்ட அதிருப்தியைப் புரிந்துகொண்டவர், அந்தத் துறைகளை ஏற்க பலரும் முன்வராதது குறித்து அவரிடம் எடுத்துச் சொன்னார். சி.எஸ் சம்மதித்தார். உண்மையில் அந்தத் தருணம், இந்தியாவின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.

1997 ஜூலை 8-ல் அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் சதுரானன் மிஸ்ராவுடன் சி.எஸ்ஸும் எம்.சுவாமிநாதனும்

ஆம்! விவசாயத்திலும் உணவு உற்பத்தியிலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய பசுமைப் புரட்சி நிகழ்ந்தது சி.எஸ் அந்தத் துறைகளின் அமைச்சராக இருந்தபோதுதான். தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு ஆளுமையான எம்.எஸ்.சுவாமிநாதன் முன்வைத்த பசுமைப் புரட்சி திட்டத்தை சி.எஸ் அமல்படுத்தினார். அதற்குப் பல்வேறு தடங்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானியும் தாவர நோயியல் அறிஞருமான நார்மன் எர்னஸ்ட் போர்லாகுடன் இணைந்துதான் இந்தத் திட்டத்தை உருவாக்கினார் எம்.எஸ்.சுவாமிநாதன். இதற்காக, மெக்சிகோவிலிருந்து கோதுமை விதைகளையும், அமெரிக்காவிலிருந்து விவசாயத் தொழில்நுட்பத்தையும் ரசாயன உரங்களையும் இறக்குமதி செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டபோது, இந்திய நிலவியல் அமைப்புக்கு இதெல்லாம் ஒத்துவருமா என விஞ்ஞானிகள் உட்பட பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சி.எஸ் துணை நின்றார். இருவருக்கும் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் உறுதியான ஆதரவு கிடைத்தது. அவருக்குப் பின்னர் பிரதமரான இந்திரா காந்தியும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கினார்.

பசுமைப் புரட்சிக்கு முன்பு பெருமளவிலான தானியங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதிசெய்துவந்தது இந்தியா. இப்படியான ஒரு சூழலில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் தவிர்க்க இந்தத் திட்டம் என்பதைப் பிற்பாடு பலரும் உணர்ந்துகொண்டனர். எனினும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்த சர்ச்சைகள் இன்றும் தொடரவே செய்கின்றன. ஆனால், அப்படி ஒரு முடிவைத் துணிச்சலாக எடுத்து இந்தியாவின் முகத்தையே மாற்றினார் சி.எஸ். குறிப்பாக, மெக்சிகோ கோதுமை விதை குறித்து தனது அமைச்சரவை சகாக்களே சந்தேகம் கிளப்பியபோது, டெல்லியில் தனது இல்லம் அருகே இருந்த ஐந்து ஏக்கர் புல்வெளியில் கோதுமையைப் பயிரிடச் செய்தார்.

தான் கொண்டுவந்த திட்டங்களில் முழு ஈடுபாடு காட்டினார். சென்னை ஐஐடி உருவாக்கத்தில் சி.எஸ்ஸின் பங்கு முக்கியமானது. அதே போல், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் உருவானதன் பின்னணியில் இருந்தவரும் சி.எஸ் தான். அவ்வளவு பெரிய இடத்தில் குடியிருப்புகளைக் கட்டுவதை விட்டுவிட்டு கிரிக்கெட் மைதானம் கட்டுவதா என்று காமராஜர் கேள்வி எழுப்பினார். எனினும், கிரிக்கெட்டில் ஈடுபாடு கொண்டவரான சி.எஸ் காமராஜரைச் சமாதானப்படுத்து மைதானம் உருவாக வழிவகுத்தார். இன்றைக்கு சென்னைக்குப் பெருமை சேர்க்கும் இடமாக அந்த மைதானம் விளங்குகிறது.

சி.எஸ் குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவரது மகன் எஸ்.எஸ்.ராஜசேகர், அவரைப் பற்றிய பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். சி.எஸ் காதல் திருமணம் செய்தவர். அவரது மனைவி சகுந்தலா, குடும்பப் பொறுப்பை மிக நேர்த்தியாக நிர்வகித்தவர்; தன் கணவரின் நீண்டகால அரசியல் வாழ்க்கைக்கும், தேசக் கட்டுமானத்தில் அவரது ஈடுபாட்டுக்கும் எந்தக் குறுக்கீடும் வராமல் பார்த்துக்கொண்டவர்.

இந்திரா காந்தியின் தீவிர ஆதரவாளராக சி.எஸ் இருந்தார். 1975-ல் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியபோது அதை ஆதரித்தார். எனினும், பிரம்மானந்த ரெட்டி தலைமையில் பின்னாட்களில் உருவான அதிருப்திக் குழுவில் அவரும் ஐக்கியமானார்.

1990-ல் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அவர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்ல, ஆளுநர் மாளிகையின் செலவுகளைக் குறைக்க அதிரடி நடவடிக்கையையும் சி.எஸ் எடுத்தார். எதுவும் வீணாகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சி.எஸ், தன்னைச் சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு பாதி கிளாஸில் தண்ணீர் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, மின்சார விளக்குகள், மின்விசிறி ஆகியவற்றை அவரே ஆஃப் செய்து வைத்துவிடுவார். இந்த முயற்சிகளின் காரணமாக. 2 கோடி ரூபாயாக ஆளுநர் மாளிகையின் செலவுக் கணக்கு 75 லட்சமாகக் குறைந்தது.

ஊழலுக்கு எதிரான உறுதி, எளிமை, தொலைநோக்குப் பார்வை என இயங்கிய சி.எஸ்ஸுக்கு 1998-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 2000 நவம்பர் 7-ல் சென்னையில் தனது 90-வது வயதில் சி.எஸ் காலமானார். “பசுமைப் புரட்சி திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், இந்திய விவசாயிகள் 4,000 ஆண்டுகளில் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தை நான்கே ஆண்டுகளில் சாத்தியமாக்கியவர் சி.எஸ்” என எம்.எஸ்.சுவாமிநாதன் புகழாரம் சூட்டியிருந்தார். அந்த வார்த்தைகளே சி.எஸ்ஸின் அடையாளமாக நிலைத்திருக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE