இதே தேதி... முக்கியச் செய்தி: இயற்கை விவசாயத்தை ஆதரிப்பவர்களால் நன்மை மட்டுமே விளைகிறதா?

By சந்தனார்

10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஆமிர் கான் நடத்திய ‘சத்யமேவ ஜயதே’ நிகழ்ச்சியில், பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்த விவாதம் நடந்தது. அதில் விவசாயிகள், மருத்துவர்கள், கள ஆய்வாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். பூச்சிக்கொல்லித் தயாரிப்பில் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான யுனைட்டட் பாஸ்பரஸ் நிறுவனத்தின் தலைவரான ரஜ்ஜூ ஷ்ராஃப் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, பூச்சிக்கொல்லிகளால் எந்த ஆபத்தும் இல்லை என வாதிட்டார்.

பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாவிட்டால் பயிர் விளைச்சல் குறைந்து, விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனக் கூறினார். பூச்சிக்கொல்லி பயன்பாடு பரவலான பின்னர் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 'சத்யமேவ ஜயதே' குழுவினர் பஞ்சாப் விவசாயிகள் சிலரிடம் கருத்து கேட்டிருந்தனர். அந்தத் தொகுப்பு அந்நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்த ரஜ்ஜூ ஷ்ராஃப், அவர்களெல்லாம் கேமராவுக்காகப் பொய் சொல்பவர்கள் என்றார்.

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா, “இன்று நாம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்கிறோம். அவற்றின் விலையும் உயர்ந்திருக்கிறது. அதையெல்லாம் நாமே அதிகம் உற்பத்தி செய்திருக்க முடியும். அரிசி, கோதுமை ஆகியவை மட்டுமே அதிக விளைச்சலைக் கண்டிருக்கின்றன. மற்ற பயிர்களை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்” என்று சுட்டிக்காட்டினார். கடன் பிரச்சினையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு முக்கியக் காரணம், பூச்சிக்கொல்லி, உரம் போன்றவற்றை வாங்கவே கடன் வாங்க வேண்டியிருப்பதால்தான் என்றும் வாதிட்டார்.

வந்தனா சிவாவின் இந்த வாதங்கள் வலுவானவை. ஒவ்வொரு நாடும், பிரதேசமும் மாறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கும் நிலையில் விவசாய முறையும் அதற்கேற்ப பிரத்யேகத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனும் கருத்து கொண்டவர். இயற்கை விவசாயத்தின் அவசியத்தைப் பரப்ப தொடர் பயணங்களை மேற்கொள்பவர். மரபணு மாற்றுப் பயிர்களின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைச் செய்துவருபவர்.

1952 நவம்பர் 5-ல் டேராடூனில் பிறந்தவர் வந்தனா சிவா. அவரது தந்தை வனத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தாய் ஒரு விவசாயி. இதனால் இயல்பிலேயே இயற்கை மீதும் விவசாயம் மீதும் வந்தனா சிவாவுக்கு ஆர்வம் பிறந்தது. நைனிடாலிலும், டேராடூனிலும் பள்ளிக் கல்வி பயின்ற வந்தனா, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். பின்னர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டவர், கனடாவுக்குச் சென்று குவெல்ப் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு 'ஒளியின் கால இடைவெளியின் கருத்தியல் மாற்றங்கள்' எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதினார். வெஸ்டர்ன் ஓன்டேரியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற வந்தனாவின் பார்வை இயற்கை மீது திரும்பியதற்குக் காரணம் உண்டு. கனடாவிலிருந்து டேராடூன் திரும்பிய அவர், தன் சிறுபிராயத்தில் மிகவும் நேசித்த வனப்பகுதி அழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். அங்கு ஆப்பிள் தோட்டத்துக்காக அங்குள்ள ஓர் ஓடையிலிருந்த நீர் வெளியேற்றப்பட்டிருந்ததையும் கண்டார். இதையடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவரது கவனம் திசைதிரும்பியது. 1982-ல் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சூழலியல் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவந்தார். 1984-ல் போபாலில் இயங்கிவந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு விபத்து பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆபத்து குறித்த கூடுதல் விழிப்புணர்வை அவருக்கு ஊட்டியது. அதன் பின்னர், ‘போபால் போன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது... வேப்ப மரங்களை நடுங்கள்’ எனும் முழக்கத்தை முன்னெடுத்தார்.

1991-ல் ‘நவ்தான்ய’ எனும் அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் பயிர் பாதுகாப்பு இயக்கத்தை முன்னெடுத்தார். அறிவுசார் சொத்துரிமை, பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான விழிப்புணர்வு எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றத் தொடங்கினார்.

1988-ல் அவர் எழுதிய ‘ஸ்டேயிங் அலைவ்’ எனும் புத்தகம், சூழலியல் சீர்கேடுகளால் இந்தியாவின் கிராமப்புறப் பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்தும், அந்தப் பாதிப்புகளுக்கு எதிராக அவர்கள் முன்னெடுக்கும் பணிகள் குறித்தும் பேசியது.

பரவலான கவனத்தை ஈர்த்த அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து ‘சாயில் நாட் ஆயில்’, ‘எர்த் டெமாக்ரஸி: ஜஸ்டிஸ்’, ‘வாட்டர் வார்ஸ்’ என்பன உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். சுற்றுச்சூழல் குறித்த பல ஆவணப்படங்களில் தோன்றி கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார். பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு விவசாயம், சுற்றுச்சூழல் குறித்து ஆலோசனை வழங்கிவருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்ட ரேச்சல் கார்ஸன், கவுரா தேவி, வங்காரி மத்தாய், மேதா பட்கர் போன்ற பெண் ஆளுமைகளின் வரிசையில் வந்தனா சிவாவும் இடம்பிடிக்கிறார்.

இலங்கை உணவு நெருக்கடி

அதேசமயம், பல்வேறு விமர்சனங்களும் அவர் மீது உண்டு. அதில் மிக முக்கியமான விமர்சனம். இலங்கையின் வேளாண் துறையில் ஏற்பட்ட கடும் சரிவுக்குக் காரணமாக இருந்தவர் என்பதுதான். ஆம்! இயற்கை விவசாயத்தைப் பெரிதும் நம்பிய அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இயற்கை விவசாயத்தை முழுமையாகப் பின்பற்றும் முதல் நாடாக இலங்கையைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார். ரசாயன உரங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தார். அவற்றை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டது.

முன் தயாரிப்பு எதுவும் இல்லாமல் அவசரகதியில் அமல்படுத்தப்பட்ட இந்தத் தடை இலங்கையின் வேளாண் விளைச்சலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியுடன், உணவு நெருக்கடியும் சேர்ந்துகொள்ள இது வழிவகுத்தது. இதற்குப் பிரதான காரணமாக வந்தனா சிவா தான் குற்றம்சாட்டப்படுகிறார். அவரது நவ்தான்ய நிறுவனம், இலங்கை அரசுக்கு அளித்த ஆலோசனை அப்படியே செயல்படுத்தப்பட்டதால்தான் இந்தப் பின்னடைவு ஏற்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன. எனினும், ஆலோசனை சொல்வதுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பணி முடிந்துவிடுகிறது; அரசுதான் அதன் சாதக பாதகங்களை அலசி பொறுப்புடன் முன்னின்று அதைச் செயல்படுத்த வேண்டும் என்றும் வாதங்கள் ஒலிக்கின்றன.

இலங்கையின் நெல் பயிர்கள் 94 சதவீதம் ரசாயன உரங்களைச் சாந்திருப்பவை. இலங்கையின் மற்ற முக்கிய விளைபொருட்களான ரப்பர், தேயிலை ஆகியவை 89 சதவீதம் ரசாயன உரத்தைச் சார்ந்திருப்பவை. இலங்கையின் உணவு உற்பத்தியில் 80 சதவீதம், சிறு விவசாயிகளின் விளைநிலங்களிலிருந்து கிடைக்கிறது. இப்படியான சூழலில், இயற்கை விவசாயத்தின் மூலம் விளைச்சல் குறைவாக இருப்பதால், அதைச் சரிகட்ட அதிகமான நிலங்களில் பயிரிட வேண்டிய தேவையும், விளைநிலங்களை விஸ்தரிக்க வேண்டிய கட்டாயமும் இலங்கைக்கு ஏற்பட்டது. இலங்கை மட்டுமல்ல, இந்தியாவில் 100 சதவீதம் இயற்கை விவசாயத்துக்கு மாறிய முதல் மாநிலமாகக் கருதப்படும் சிக்கிம், தற்போது இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டுவருகிறது.

பொதுவாகவே, இயற்கை விவசாயம் சற்றே செலவு பிடிக்கும் விஷயமாகக் கருதப்படுகிறது. இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் விளைபொருட்களின் விலையும் சற்றே கூடுதலாகவே இருக்கிறது. வெளி மாநிலங்களில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் விளைபொருட்கள் சிக்கிமுக்கு அனுப்பப்படுவது தொடர்கிறது. அவற்றின் விலை ஒப்பீட்டளவில் குறைவு என்பதால், சிக்கிமின் இயற்கை விவசாயிகள் போதிய விற்பனை இல்லாமல் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியால் விளைந்த நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம் என வந்தனா சிவா போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கும் கருத்துகள் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. அதேசமயம், இதில் அரசு, விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்தால்தான், ரசாயனக் கலப்பில்லாத இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE