சிறகை விரி உலகை அறி-74: அறிவியலும் நம்பிக்கையும் அருங்காட்சியகத்தில்!

By சூ.ம.ஜெயசீலன்

வாழ்வின் இறுதி நிமிடங்களில் நம்பிக்கை அள்ளித் தந்த மனிதர்கள் உண்டு. சுருக்கம் விழாத முகங்களில் சுருங்கிக் கிடக்கும் கவலைகளும், புன்னகை மொட்டு கருகிக் கிடக்கும் உதடுகளும், கனிவு கரைந்து ஒளி வடிந்த கண்களுமாக முடிந்தவர்களும் உண்டு.

மரணத்தைப் பக்குவத்துடன் ஏற்றுக்கொண்டவர்களும், புலம்பலுடன் மூச்சு நிறுத்தியவர்களும் வாழ்ந்த பூமியில், மரணத்துக்குப் பிறகும் கம்பீரமாக வாழ ஆசைப்பட்ட அபூர்வ மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒருங்கிணைந்த சீனாவை உருவாக்கி ஆட்சி செய்ததுடன், மறுவுலகிலும் பேரரசராகவே ஆட்சி செலுத்த விரும்பிய ச்சின் ஷி ஹுவாங், 98 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் டெரகோட்டா ராணுவத்தை பூமிக்கடியில் புதைத்து வைத்தார்.அதையொத்த ஒரு நம்பிக்கையை பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வாசித்தேன்.

இரும்பு தலைக்கவசம்

நித்திய பயணத்துக்கான துணை

இறப்பு சடங்குகள், அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இறந்தவர்களோடு புதைக்கப்பட்டவை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்த தகவல்களுடன் அமைந்துள்ள காட்சிக்கூடத்துக்குள் சென்றேன். ‘வாள் வீரர்’ எனும் தலைப்பில் படங்களுடன் பதாகை ஒன்று சுவரில் தொங்கியது. படத்தின் கீழே, ‘புதைக்கும்போது கிர்க்பர்ன் வாள் (Kirkburn) மற்றும் அதன் உறைகள் எப்படி இருந்திருக்கும் என்பதன் விளக்கப்படம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அருகில், ‘இந்த வாளுடன் புதைக்கப்பட்ட இளைஞர், போர் வீரராக இருந்திருக்கலாம் என முதலில் நினைத்தனர். தொடர்ந்து நடந்த ஆய்வில், வாளில் உள்ள வேலைப்பாடு வீரரின் தரவரிசையைச் சொல்வதற்கு அல்லது, அதற்கு இணையாக, மறுவுலகில் வாழும் உயர்ந்த சிந்தனையும் நற்பண்புகளும் நிறைந்த மனிதரைக் குறித்துக்காட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகு பலமுறை வாள் பழுது நீக்கப்பட்டுள்ளது. புதைக்கப்பட்ட மனிதர், மிகவும் மதிப்புக்குரியவராக அல்லது பலசாலியாக இருந்திருக்க வேண்டும். எனவே, வாழும் மனிதர்களின் காணிக்கையாக அவரது இறுதிப் பயணத்துக்கு வழங்கப்பட்டிருக்கலாம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஆஸ்ட்ரோலேப்

வானை அளப்போம்

அடுத்த அறையில், ‘வானத்தை அறிதல்’ என்கிற தலைப்பின் கீழ் ஆஸ்ட்ரோலேப் படத்தைப் பார்த்தேன். தற்போது வானியல் மற்றும் ஜோதிடவியல் என நாம் அழைக்கிற, நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு, இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இஸ்லாமிய காலத்துக்கு முந்தைய ஆதாரங்கள், அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை வைத்து 700-ம் ஆண்டுகளிலிலிருந்து அறிவியலாளர்களும், சிந்தனையாளர்களும் வானியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டனர். நேரத்தைக் கணிக்கவும், சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் இருக்கும் இடங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கவும் அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தினர். இதற்காக அவர்கள் பயன்படுத்திய அந்தக் கால கணினி, ஆஸ்ட்ரோலேப். அருங்காட்சியகத்தில் உள்ள ஆஸ்ட்ரோலேப் கருவியில், அப்துல்-கரீம்-அல்-அஸ்துர்லாபி (ஆஸ்ட்ரோலபிஸ்ட்) என்று கையொப்பம் இடப்பட்டுள்ளது. அரச புரவலர்கள் மூவரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மத்தியகால அறிவியலுக்கும், அதற்கு கிடைத்த ஆதரவுக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது.

சாத்தான் மீது கல்லெறிதல்

ஓர் அறையில் படங்கள் இருந்தன. சிறு வயதில் தாளில் மை தெளித்து இரண்டாக மடக்கி இரண்டு பக்கமும் உள்ள படங்களை ரசிப்போமே அதைத்தான் அப்படங்கள் முதலில் நினைவுபடுத்தின. இரண்டாவதாக, உளவியலில் படித்த ரோசார்க் (Rorschach) சோதனையை நினைபடுத்தின. ரோசார்க் என்பது, மை படிந்த தாள்போல இருக்கும் பட அட்டைகள். படங்களைப் பார்த்து கதை சொல்ல வேண்டும். ஒருவர் உடல் அல்லது மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய இக்கதைகள் உதவும்.

ஆனால், சுவரில் இருந்த 21 படங்களும், 1978-ல் பிறந்த இத்ரிஸ் கான் என்பவரின் கற்பனையில் உருவானவை. அருகில் இருந்த குறிப்பை வாசித்தேன்.

‘புனித நகரமான மெக்காவிற்கு வருடாந்திர ஹஜ் பயணம் மேற்கொள்கிறவர்கள் செய்யும் சடங்கை மையமாக வைத்து, ‘சாத்தானின் மீது கல் எறிதல்’ என்று இப்படங்களுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, திருப்பயணிகள் மெக்காவுக்கு வெளியே முஸ்தலிஃபாவில் கூழாங்கற்களைச் சேகரித்து மினா நகரத்துக்குச் சென்று, மூன்று தூண்களின் மீது கல்லெறிகிறார்கள். இதற்கு ஜமாரத் என்று பெயர்.

திருப்பயணி ஒருவர் கல் எறிவதையும் அது சுவரில் படுவதையும் கற்பனை செய்வது மிகவும் அழகான அனுபவம். மனித வார்த்தைகளையும், வேண்டுதல்களையும் சுமந்து செல்கிற கற்கள் சுவரில் பட்டு மனித மொழியாக தெறிக்கிறன. அந்த வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்பதை, என் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் படங்களாக உருவாக்கியுள்ளேன். பெரும்பாலும், வாசித்து தெரிந்துகொள்ள இயலாது. பார்வையாளர்களாகிய நீங்கள், படத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட, ரசியுங்கள். அதுவே என் விருப்பம்’ என்கிறது அந்தக் குறிப்பு. வாசித்து, அழகை ரசித்து அடுத்த அறைக்குச் சென்றேன்.

ஓவியம் வரையும் மாணவிகள்

பள்ளி மாணவிகள் தரையில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு பொருளையும் நொடியில் பார்த்துக் கடந்த ஆயிரமாயிரம் கண்களுக்கு மத்தியில், ஒரே பொருளைக் கூர்ந்து கவனித்து வரைந்துகொண்டிருந்தார்கள்.

இரும்பு தலைக்கவசம்

மற்றோர் அறையில், இரும்புத் தலைக்கவசத்துக்குக் கீழே, ‘கப்பலில் அடக்கம் நடந்த சுட்டோன் ஹு’ என்கிற குறிப்பை வாசித்தேன்.

‘இங்கிருப்பவை அனைத்தும், ஆங்லோ-சாக்சன் பகுதியைச் சேர்ந்த சுட்டோன் ஹு என்னும் இடத்திலிருந்து கிடைத்தவை. ஏறக்குறைய கி.பி.600-ம் ஆண்டுகளில், 27 மீட்டர் நீளமுள்ள கப்பலின் நடுவில், மரத்தால் ஓர் அறை உருவாக்கி, இறந்த சுல்தான் ஹு உடலை அதில் வைத்து, உயரமான மண் மேடு அமைத்து அடக்கம் செய்துள்ளனர். இதுவரை கிடைத்ததிலேயே, ஐரோப்பாவின் மத்திய காலத்தின் தொடக்கத்தைச் சேர்ந்த வளமையான கல்லறை இதுதான். மிகவும் புகழ்மிக்க நபருக்கு, ஒருவேளை ஆங்கிலோ-சாக்சன் அரசர் ஈஸ்ட் ஆஞ்சிலா (East Angila) என்பருக்கு, கட்டப்பட்ட கல்லறையாக இருக்கலாம். இங்கிலாந்து, ஆங்கிலோ-சாக்சன் பகுதியில் கிடைத்த 4 முழுமையான இரும்பு தலைக்கவசங்களில் இதுவும் ஒன்று’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

தலைக்கவசத்தைக் கற்பனை செய்யுங்களேன்: (1) இரும்பாலான தலைக் கவசம். (2) கண், வாய் பகுதியை விட்டுவிட்டு முகத்தை முழுமையாக மூடுகிற இரும்புத் தகடு. (3) நெற்றிக்கு மேல் பகுதியில் மட்டும் இரும்புத்தகடு தொட்டுக்கொண்டிருக்கிறது.

கடிகாரக் களஞ்சியம்

கடிகாரம் என்பது நேரம் பார்ப்பதற்கானது என்பது மறைந்து, சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும், இதயத் துடிப்பு தொடங்கி வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் முக்கிய பொருளாகவும் மாறிவிட்டது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில், கி.பி. 1500 முதல் தற்போதுவரை கடிகார கண்டுபிடிப்பில் நிகழ்ந்துள்ள 500 ஆண்டு கால வளர்ச்சிப் படிநிலைகளைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். 1500 - 1600, 1600களின் மத்தியில், 1660, 1675, 1700, என பகுதி பகுதியாகப் பிரித்து, அந்தந்த கால கடிகாரங்களை காட்சிக்கு வைத்து, ஒவ்வொன்றைக் குறித்த தவகல்களையும் ஏறக்குறைய ஐம்பதைம்பது வார்த்தைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

லண்டனில் கடிகாரம்

கடிகாரம் செய்கிறவர்கள் லண்டனுக்குள் வந்த துயரத்தை அப்போது வாசித்தேன். ‘1580-களில் சமயம் சார்ந்த பெரும் துன்புறுத்தல்களை புராட்டஸ்டன்ட் சபையினர் சந்தித்தனர். அச்சூழலில், கடிகாரம் செய்யத் தெரிந்த புராட்டஸ்டன்ட் மக்கள் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் நாடுகளை விட்டு வெளியேறி கணிசமான எண்ணிக்கையில் லண்டன் மற்றும் ஜெனிவாவில் குடியேறினர். திறமைசாலிகளான அவர்கள், தாங்கள் வந்த நாட்டில் கடிகாரம் தயாரிக்கத் தொடங்கினார்கள். ஏறக்குறைய 1680-களில், லண்டனின் முக்கிய தொழில்களுள் ஒன்றாக கடிகாரத் தொழில் வளர்ந்தது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சதுரங்கப் பலகை

சதுரங்கப் பலகை

1831-ல் ஸ்காட்லாந்தின் மேற்குத் தீவுகளில் உள்ள லூயிஸ் தீவில், தந்தங்களால் செதுக்கப்பட்ட கடற்குதிரைகள் கிடைத்தன. அதில், 78 சதுரங்க காய்கள், பெரிய அளவிலான விளையாட்டு நாணயங்கள் 14 (gaming counters) மற்றும் கலைநுட்பம் மிகுந்த பெல்ட் கொக்கி ஒன்று ஆகியவை இருந்தன. 11 சதுரங்கக் காய்கள் ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளன. மீதமுள்ளவை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன. கண்டுபிடிக்கப்பட்டபோது சில சதுரங்க காய்கள் சிவப்பு கறையுடன் இருந்தன. இதன்மூலம், தற்போது உள்ளதுபோல கருப்பு வெள்ளை நிறங்கள் இல்லாமல், மத்திய காலத்தின் தொடக்கத்தில் சிவப்பு மற்றும் நிறம் ஏதுமில்லா தந்தத்தை வைத்து சதுரங்களம் விளையாடியுள்ளது தெரியவந்தது.

அருங்காட்சியக அறைகளைப் பார்த்த பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் சதுக்கத்தில் அமர்ந்தேன். சிற்றுண்டி சாப்பிட்டேன். புத்தகக் கடையில், எரிக் சாலைன் எழுதிய ‘Fifty animals that changed the course of history’ புத்தகம் வாங்கினேன். வெளியில் வந்தபோது, மழைச் சாரலின் குளுமையில் கலந்தேன்.

(பாதை விரியும்)

கடிகாரங்கள்

முதல் கடிகாரம்

கடிகாரம் முதன் முதலில் 1490-1510-க்கு இடைப்பட்ட காலத்தில், வடக்கு இத்தாலி அல்லது தெற்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. ஆனாலும், நியூரம்பெர்க்கின் பீட்டர் ஹென்லின் ஆரம்பகாலத் தயாரிப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். கடிகாரமானது, தொடக்கத்தில் சிறிய மேஜைக் கடிகாரம்போல இருந்தது. அதிலிருந்த கயிறு அல்லது சங்கிலியால் பலரும் பார்க்கும்படி கடிகாரத்தைக் கழுத்தில் அணிந்திருந்தார்கள். 1500-களின் தொடக்கத்தில், ஆக்ஸ்பர்க், நியூரம்பெர்க், மற்றும் மியூனிக் ஆகிய ஜெர்மன் நகரங்கள் கடிகாரத் தயாரிப்பு மையங்களாக திகழந்தன. 1550-வாக்கில் இந்தத் தொழில் பிரான்ஸ், ஃபிளாண்டர்ஸ் மற்றும் தெற்கு நெதர்லாந்து பகுதிகளில் பரவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE