ஒரு ரஜினி ரசிகனான என்னை கமல் ரசிகனாக மாற்றிய காலகட்டம் எண்பதுகளின் முதல் சில வருடங்கள் எனலாம். ரஜினி போல நெற்றியில் விழும் முடியை தூக்கி வாரி சீவத்துவங்கியது நான் பிளஸ் டூ சேர்ந்த பின்னர்தான். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஏக் துஜே கே லியே’, ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘சலங்கை ஒலி’ என அதற்கு காரணமான படங்களைப் பட்டியலிடலாம். எல்லாமே துயர நாயகக் காவியங்கள். ஒரு வகையில் காதல் தோல்வி திரைப்படங்கள் எனலாம்.
சிவாஜி கணேசன் செய்துவந்த பணியை கமல் எடுத்தாளத் தொடங்கிய வருடங்கள் அவை. காதலுக்காக உருகிக் கண்ணீர்விடும் நாயகன் பாத்திரங்கள் அவரைத் தேடிவந்தன. காலங்காலமாக அதைச் செய்துவந்த சிவாஜியோ பொருத்தமில்லாத படங்களில் மஞ்சுளா, ஶ்ரீபிரியா, ஶ்ரீதேவி என்று டூயட் ஆடிக்கொண்டிருந்தார். வயதான சிங்கம் தயிர் சாதம் தின்றுகொண்டிருந்த நேரமது. அந்த நேரத்தில்தான் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, கே. விஸ்வநாத் என அனைவரும் கமலை மனதில் வைத்துக்கொண்டு கதைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். காதல் என்ற சிந்தனையே கிளர்ச்சியை தரும் அந்தப் பருவத்தில் ஒரு நளினமான நாயகன் தொடர்ந்து காதல் சித்ரவதை அனுபவித்து வந்தால், அவர் ஆகர்சம் ஆகலாமா போவார்?
வகுப்புத் தோழன் மணி குண்டன் (பட்டப்பெயர்) 11.30 காட்சி பார்த்துவிட்டு தாமதமாய் கடைசி வகுப்பிற்கு வந்தான். உதட்டைப் பிதுக்கி “படம் வேஸ்ட்” என்றான். நாகேஸ்வர ராவ் போல எல்லாம் முடியுமா கமலுக்கு என்று நையாண்டி செய்தான். ஓடாது என்று ஆருடம் சொன்னான். ஆனால், கமல், ஶ்ரீதேவி இருவரும் அவ்வளவு அழகாகத் தோன்றும் போஸ்டர் மனதைக் கொள்ளை கொண்டது. குண்டன் சொன்னதை நான் நம்பவில்லை. அவன் ரஜினி ரசிகன். அவன் செய்யும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க மறுநாளே படத்தைப் பார்க்கத் திட்டமிட்டோம். ‘வாழ்வே மாயம்’ நாங்கள் பார்த்ததற்குப் பிறகும் 200 நாட்கள் ஓடியது.
கேசினோவில் படம் பார்த்தோம். முதல் பாதியில் காட்சிக்குக் காட்சி வசனங்களுக்குக் கை தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. பொய்யாக காலில் கட்டுப் போட்டுக்கொண்டு மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் கமல், ஶ்ரீதேவி வந்ததை ஓரக்கண்ணில் கண்டும் காணாதது போல பேசும் வசனம் ஒன்று போதும்: “இரண்டு கால் இருக்கறப்பவே வரமாட்டா... ஒரு கால் இருக்கறப்பவா வருவா? ஒருக்காலும் வரமாட்டா!”
இதே காட்சியைப் பல வருடங்கள் கழித்து மீண்டும் ‘சிங்காரவேல’னில் நாம் பார்த்தோம். அதே போல, ‘தேவி ஶ்ரீதேவி’ என்று கோயிலில் அடக்க ஒடுக்கமாய் பாடியவர் குஷ்பூவிடம் பாடும்போது, ‘ஓ லங்கா ஶ்ரீ லங்கா கொப்பர தேங்கா’ என்று விரசமாய் பாடுவார். கதைகளில் எந்த ஒற்றுமை இல்லாவிட்டாலும் சிங்காரத் தோற்றத்துடன் கமல் ஒரு பெண்ணைத் தன் காதல் வலையில் சிக்கவைக்க எடுக்கும் முயற்சிகள் என்ற அம்சம் ‘வாழ்வே மாய’த்திலிருந்து எடுத்து கையாளப்பட்டதுதான்.
ஶ்ரீதேவியைத் துரத்தித் துரத்தி பாட்டுப் பாடி காதலிக்கும் பணக்கார இளைஞன் வேடம் கமலுக்கு. அவள் காதலைப் பெற்று, திருமணம் ஏற்பாடும் நேரத்தில் தனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டு, தன் காதலைத் தியாகம் செய்யும் பாத்திரம். தெலுங்கில் நாகேஸ்வர ராவ் செய்த பாத்திரம் அது. ’தேவதாஸ்’ பாதிப்பில் வந்த படம்தான் ‘பிரேமாபிஷேகம்’. ஆனால் தமிழில் கமலின் இளமை ததும்பும் நடிப்பும், கங்கை அமரின் அசலான இசையும் படத்திற்கு ஒரு புத்துணர்வு தந்தன. வாலியின் தத்துவப் பாடல் வரிகளும் படத்திற்குப் பெரிய பலம். ‘கருவோடு வந்தது தெருவோடு போனது... மெய் என்று மேனியை யார் சொன்னது?’ என்று ஜேசுதாஸ் குரலில் கிளைமாக்ஸில் ‘வாழ்வே மாயம்...’ பாடல் ஒலிக்கையில் அரங்கமே துக்கத்தில் உறைந்து போயிருக்கும்.
காதலின் அத்தனை உணர்ச்சிகளையும் காண்பிக்க வாய்ப்பிருந்தது கமலுக்கு. கவர்ச்சி, காதல், ஏக்கம், பரிதவிப்பு, துள்ளல், காத்திருப்பு, குழப்பம், நிறைவேற்றம், துக்கம், தடுமாற்றம், தியாகம் என அனைத்தையும் நிறைவாய் செய்திருப்பார். தவிர ஆடல், பாடல், விமானம் ஓட்டுதல், பாராசூட் மூலம் குதித்தல் போன்ற சாகசங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது.
வாழ்வே மாயம் அவ்வளவு பெரிய காவியமா? நிச்சயம் இல்லை.
பல பிற்போக்குத்தனங்களும் தவறான வசனங்களும் உள்ள படம்தான். ஆனால் படம் வந்த காலத்தில் அது பலரைப் போல என்னையும் தீவிரமாகப் பாதித்தது.
தான் இறந்து விடப்போகிறோம் என்று தெரிந்தபின், காதலி தன்னை வெறுக்கச் செய்வது போல குடிகாரனாகவும், பெண் பித்தனாகவும் நடித்து, அவளை விலகச் செய்தது... அந்த வயதில் தாங்க முடியாத சோகத்தைத் தந்தது. குறிப்பாக ‘வந்தனம்... என் வந்தனம்’ என்ற பாடல் காட்சியைச் சொல்லலாம்.
சுய சோகத்தை ரசிக்கும் மனோபாவத்தை எனக்கு இந்தப் படம் தந்தது எனச் சொல்லலாம். டிராஜெடி வகைப் படங்களை ரசிக்கத் தயாரானேன். அந்தக் காலகட்டத்தில் பார்த்த எல்லா படங்களும் இந்த உணர்வைத் தொடர்ந்து தந்தன. ’நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கதாநாயகி நோய்வாய்ப்பட்டு இறக்க, அவள் நினைவில் இசையுடன் வாழ்கிறான் நாயகன். ‘மூன்றாம் பிறை’யில் தன்னைக் காதலித்த பெண் தன்னை அடையாளம் காண இயலாமல் மாறி அந்நியமாக விலகுகிறாள். ரயில் நிலையத்தில் அவள் நினைவுகளை மீட்க குரங்கு போல குட்டிக்கரணம் அடித்தும், அந்த வலி தெரியாமல் செல்கிறாள் நாயகி. ‘ஏக் துஜே கே லியே’வில் காதலர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பின்னர் வந்த ‘சலங்கை ஒலி’யில் ஒரு தோல்வியுற்ற கலைஞன் தான் சாவதற்குள் தன் கலையை ஒரு வாரிசிடம் ஒப்படைக்க நினைக்கிறான். அவள் தன் முன்னாள் காதலியின் மகள் என்பதால் காலத்தை எதிர்த்து தன் கலையைத் தந்து மரித்துப் போகிறான்.
பின்னோக்கி யோசித்தால் ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்திலும் கமலுக்கு காதல் தோல்வி தான். ‘பதினாறு வயதினிலே’ படத்திலும் காதலியின் மானம் காக்க கொலை செய்து ஜெயிலுக்குப் போகும் பாத்திரம்தான். மொத்ததில் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு சிறப்பாக வாழும் யோகம் அந்தக் காலகட்டத்தில் எந்த படத்திலும் அவருக்கு அமையவில்லை. அந்த சோகத்தில் அந்தத் தலைமுறை இளைஞர்கள் நாங்கள் பங்கு கொண்டோம்.
காதல் அரும்பாத பருவத்திலேயே எனக்கு கமலின் படங்கள் - குறிப்பாக ‘வாழ்வே மாயம்’ - இந்தக் காதல் துயர் உணர்வுகளைத் தந்தன. எல்லாவற்றையும் வெல்லும் நாயகனைவிட எல்லாவற்றுக்கும் போராடித் தோற்கும் நாயகர்கள் பிடிக்க ஆரம்பித்தனர்.
திரையில் தோன்றும் நாயகர்களுக்காக ரசிகர்கள் அழுவதில்லை. தங்கள் துயருக்குத் திரை நாயகர்கள் மூலம் வடிகால் தேடுகிறார்கள். இதை பிறகொரு இரவு காட்சியில் பீளமேடு சாந்தியில் ‘வசந்த மாளிகை’ பார்த்தபோது நடந்த சம்பவம் உறுதிசெய்தது. நண்பன் ராமு உடன் இருந்தான். ‘யாருக்காக... இது யாருக்காக’ பாடல் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ஹிஸ்டீரிக்கல் வெறித்தனத்துடன் சிவாஜி ‘விஷம்’ என்று ஒட்டப்பட்ட குப்பியிலிருந்த நீல திரவத்தைக் குடிப்பார். டி.எம்.எஸ் குரலில் உரக்க தன் துயரைக் கொட்டுவார்: ‘பெண்கள் காட்டும் அன்பு என்பது. நம்மை பித்தன் ஆக்கி அலைய வைப்பது...’
அந்த வரி முடிவதற்குள் பக்கத்து அமர்ந்திருந்திருந்தவர் சீட்டின் மேல் ஏறி நின்று உணர்ச்சிவசப்பட்டவாறு கை தட்டினார். நிச்சயம் அவர் சிவாஜியின் சோகத்தை மட்டும் கொண்டாடவில்லை!
கமல் துயர நாயகனாக வெற்றி பெற்று எல்லாத் தரப்பு மக்களிடமும் சென்றடையச் செய்த படம், ‘வாழ்வே மாயம்’. இதைவிட மற்ற படங்கள் சிறப்பானவை என்று வாதிடலாம். ஆனால் என் கண்களுக்குக் கமல் என்ற ’handsome hero’ வும் அவர் செய்த காதல் விளையாட்டுகளும் அந்த வயதில் இந்தப் படத்தை முன்னிறுத்தியது. காதியில் சென்று ஜிப்பா வாங்கினேன். தாடி வளர்க்க ஆரம்பித்தேன். கமலை நாயக வழிபாடு செய்யத்தொடங்கிய காலம் அது.
’வாழ்வே மாய’த்தில் ஶ்ரீதேவி, ஶ்ரீபிரியா இருவரின் பங்களிப்பும் படத்தில் அபாரமானது. ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் மொழி மாற்று படத் தயாரிப்பின் முன்னோடியான பாலாஜி எடுத்த படம் இது. ஒரு சாதாரண கமர்ஷியல் படத்தில் நகைச்சுவையையும் சோகத்தையும் எப்படி சமமாகக் குழைத்துத் தருவது என்பதற்கு இந்தப் படம் நல்ல உதாரணம்.
வெற்றி நாயகர்களின் படங்கள் வெளிவரும் காலத்தில் கொண்டாடப்படும் தோல்வி நாயகர்களின் படங்கள் காலத்தை வென்று என்றும் கொண்டாடப்படும்!
(திரை விரியும்...)