மற்றவை வெண் திரையில் - 8: ருத்ரைய்யா... அறம் சார்ந்த சினம் கொண்ட கலைஞர்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

அந்த வீட்டில் புத்தகங்கள் நிறைந்திருந்தன. எங்கும் புது புத்தகங்களின் வாசம். மங்கேஷ் தெருவில் ஒரு நெருக்கமான வீடு அது. பாலன் தாத்தா இல்லை. துலுஜா பாட்டி இருந்தார். பாலன் தாத்தா (கே. பாலதண்டாயுதம்) ஒரு பெரிய கம்யூனிஸ்ட் தலைவர் என்று அந்த வயதில் எனக்குத் தெரியாது. அம்மாவிற்குத் தாய் மாமா என்பதால் பாலு மாமா, பாலு மாமா என்று வீட்டில் பேசிக் கேட்டதுண்டு.

பத்து வயதுகூட நிரம்பாத வயதில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எம்.பி குவார்ட்டர்ஸில் பாலன் தாத்தாவுடன் தங்கியது பசுமையான நினைவு. இரவு எத்தனை தாமதமாக வந்தாலும் காத்திருந்து அவரிடம் விடுகதை போடுவேன். அடுத்த குடியிருப்பு கல்யாணசுந்தரம் தாத்தாவுடையது (அவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்). அவர் கொஞ்சம் சிடு சிடு. பாலன் தாத்தா என் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்வார். சென்னை திரும்பி வந்த சில நாட்களிலேயே பாலன் தாத்தா விமான விபத்தில் இறந்த செய்தி வந்தது.

வெறுமையான அந்த வீட்டில்தான் சுஜாதா எனக்கு அறிமுகமானார். அக்கா என்று அழைத்தேன். அத்தை முறை என்றார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் என்னை சமமாக நடத்தியது எனக்கு ஒரு ஈர்ப்பை தந்தது. என் சினிமா ஆசை தெரிந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி - “நீ ‘அவள் அப்படித்தான்’ பார்த்தாயா? அருமையான படம்!”

ருத்ரைய்யா தயாரித்து இயக்கிய அந்தப் படத்தைப் பார்க்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. படம் வெளியானபோது எனக்கு 13 வயது. ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘தப்புத்தாளங்கள்’, ‘தாய் மீது சத்தியம்’ என ஒரு டஜன் படங்களுடன் தீபாவளி ரிலீஸாக வந்தது. பத்திரிகை விமர்சனங்களில் படத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதைவிட பெரும் அநீதிகளும் அவமானங்களும் ஏமாற்றங்களும் அவருக்குக் காத்திருக்கின்றன என அப்போது தெரியவில்லை.

ருத்ரைய்யாவை நான் சந்தித்தது 2001-ல். ருத்ரைய்யா என் மகன் படித்த பள்ளியின் முதல்வரான ஸ்ரீதேவியின் கணவர். ஒரு பெரும் கதாநாயகனைச் சந்திக்கும் பரவச நிலையில் அவர் வீட்டிற்குச் சென்றேன். என் உளவியல் பின்னணியும் அன்று இண்டியன் எக்ஸ்பிரஸில் நான் எழுதி வந்ததும் அவரை என்னை சற்று நிமிர்ந்து பார்க்க வைத்தது. சினிமா பற்றி பேச ஆரம்பித்ததும் முதலில் அவரிடமிருந்து ஊக்கமான பதில் வரவில்லை.

ருத்ரைய்யா

நான் இயக்கிய தொலைக்காட்சி படத்தின் கதையைச் சொன்னபோது விரும்பிக் கேட்டார். “ரொம்ப நல்லாயிருக்கு” என்றார். “என் புதுக் கதையை கேட்கிறீர்களா?” என்று என்னை மொட்டை மாடிக்கு அழைத்தார். ரசித்து புகைத்தவாறு தன் புதிய கதை ஒன்றை முழுவதுமாகச் சொன்னார். என் மேல் அவர் காட்டிய நம்பிக்கையும் பிரியமும் என்னை தொட்டது. பின் தைரியமாக ‘அவள் அப்படித்தான்’ பட உருவாக்கம் பற்றி கேட்டேன். ‘அவள் அப்படித்தான்’ ஆரம்பித்தது, ‘கிராமத்து அத்தியாயம்’ ஏன் தோற்றது, ‘ராஜா என்னை மன்னித்து விடு’ படம் எப்படி நின்று போனது என்பது வரை அனைத்தும் சொன்னார். “கண்டிப்பா மீண்டும் படம் பண்ணுவீங்க” என்று சொல்லிவிட்டு படியிறங்கிய போது சேமியர்ஸ் ரோட்டின் போக்குவரத்து குறைந்து போயிருந்தது.

‘அவள் அப்படித்தான்’ மட்டுமே ருத்ரைய்யாவின் அடையாளம் ஆகிவிட்டது. இன்னமும் நிறைய படங்கள் செய்திருக்க வேண்டியவர். நிராகரிப்புகளும் தோல்விகளுமாய் வாழ்ந்து மறைந்தார் ருத்ரைய்யா. அவர் மறைவுச் செய்தி வந்தபோது அவரை சில ஆண்டுகள் சந்திக்காமல் தவறவிட்ட குற்ற உணர்ச்சி மேலிட்டது.

குடும்பத்துடன் ருத்ரைய்யா

‘அவள் அப்படித்தான்’ மஞ்சுவைப் போல அவரும் நிறைய சிக்கல்கள் கொண்டிருந்தார். நல்ல வளர்ப்பும், அருமையான வாழ்க்கைத் துணையும், அன்பான குழந்தைகளும் அவருக்கு வாய்த்திருந்தன. அவருக்கு யார் மீதும் வருத்தமோ கோபமோ இருந்ததில்லை. இருந்தும் ஒரு நிஜமான கலைஞன் தன்னை வெளிப்படுத்த முடியாமல் முப்பது வருடங்களுக்கு மேல் முடங்கிக் கிடப்பது போன்ற பெருஞ்சோகம் எதுவுமில்லை.

அதன் பிறகு பல முறை சந்தித்தேன். ‘அவள் அப்படித்தான்’ படத்தை இந்தியில் செய்வது, ‘விக்ரம்’ படத்துக்கான கதை, இலங்கை பின்னணியில் உள்ள கதை என பல கதைகள் சொன்னார். தவிர, அனந்து, சாருஹாசன், மிருணாள் சென், வண்ணநிலவன், இளையராஜா பற்றியெல்லாம் நிறைய பகிர்ந்திருக்கிறார். கமலைவிட ரஜினியைச் சார்ந்து அவரை வைத்து சில வித்தியாசமான படங்கள் செய்திருக்கலாமே என்று கேட்டேன் ஒரு முறை. அதற்கு ஒரு சிரிப்பு சிரித்தார். கமல் மேல் அவர் வைத்திருந்த உரிமை மற்றும் விசுவாசம் அசைக்க முடியாதது என்று தெரிந்துகொண்டேன்.

சினிமாவை கலையாக மட்டுமே பாவித்தவர் தொழிலாக எண்ணி சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும் சொல்லலாம். விநியோகம், தயாரிப்பு எனக் கிடைத்த வாய்ப்புகளை உதறி கடைசி வரை இயக்குநராகவே பணியாற்ற விரும்பியவர். பொருளாதார வெற்றி பெற்ற பல சினிமாக்காரர்களின் மறு பக்கத்தைப் பார்த்தவர். பல துரோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். வாழ்க்கை அவரை இன்னமும் கருணையாக நடத்தியிருக்கலாம்.

‘அவள் அப்படித்தான்’ காலத்தை முந்திய படைப்பு. பெண்ணியம் பேசும் மஞ்சு பல உடைந்த உறவுகளால் ரணப்பட்டவள். காதல் மற்றும் வாழ்க்கை பற்றிய அவநம்பிக்கையால் அருணை ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிறாள். அவனையும் இழக்கிறாள். மஞ்சுவை புரிந்துகொள்வதில் சிக்கல் இருந்ததைப் போல ‘அவள் அப்படித்தான்’ படத்தையும் புரிந்துகொள்ள அன்று பார்வையாளர்களுக்குச் சிக்கல் இருந்தது. மஞ்சுவிற்கு என்னதான் பிரச்சினை? அருணை ஏற்றுக்கொண்டு நன்றாக வாழ்ந்திருக்கலாமே என்று கேட்டவர்கள் பலர்.

கசப்பான கடந்த கால அனுபவங்கள்தான் மஞ்சுவை வாழ்வின் மீதும், காதலின் மீதும், திருமணத்தின் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. காதல் என்று சொல்லி வந்தவன் அப்பா அம்மாவை காரணம் காட்டி விலகிச் செல்கிறான். அடுத்தவன், மனம் உடைந்த நிலையில் அவளுக்காகப் பிரார்த்தித்துவிட்டு, ஊக்கமளித்து, இசை பாடி படுக்கைக்கு இட்டுச் செல்கிறான். பின் அவளை பாதிரியாரிடம் அடைக்கலம் விடுகையில், “அவள் எனக்கு தங்கை மாதிரி” என்று கூறுகிறான். “ஒரு விபச்சாரின்னு சொல்லியிருந்தால்கூட பொறுத்திருப்பேன். தங்கைன்னு சொல்லிட்டானே!” என்று மஞ்சு குமறுகிறாள்.

பாலியல் ரீதியிலான மன வன்முறைக்குத் தொடர்ந்து ஆளாகிறாள். சபல புத்தி மேலதிகாரி ஐயர் (ரஜினிகாந்த்) படுக்கைக்கு அழைக்கவே குறியாக இருக்கிறார். அலுவலகப் பையன்கூட அக்கா என்று அழைத்துக்கொண்டே கை வைக்கிறான்.

இந்த உணர்வுகள் சில தீவிர மனப்போக்குகளை அவளுள் மாற்றி அமைக்கிறது. பெண்ணியம் பற்றி படம் எடுக்கும் அருணின் உறவு ஆதரவாக இருந்தாலும், எல்லா மனக்கசப்பைக் கொட்டும் ஒரு வடிகாலாகிறது அந்த நட்பு. உணர்வு மேலிட, ஒரு உச்ச கட்ட பேயாட்டம் போல அருணிடம் அவள் நடந்துகொள்ளும் இடம் மஞ்சுவின் மனதை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. Catharsis போல அவள் தன்னை முழுவதும் வெளிப்படும் தருணம் அது.

பெண்ணியம் புரிந்துகொள்ள முயல்வதும், மஞ்சுவை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலும், பரிதாபம் இல்லாத காதலிலும் அருண் மஞ்சுவிற்கு பொருத்தமானவனாய் தெரிகிறான். மிகுந்த பிரயத்தனத்துடன் அவள் அருணை நோக்கி வருகையில் அது பெரும் தாமதமாகிறது. ஆனால் அந்த வலியையும் ஏற்றுக்கொண்டு, “நான் இப்படித்தான்” என திடமாய் தனியாய் நிற்கிறாள்.

கதாநாயகியை ஒரு மன நோயாளியாகக் காட்டாமல், பரிதாபத்திற்கு ஆளாக்காமல் சித்தரித்ததே ருத்ரைய்யாவின் நேர்மையைக் காட்டுகிறது. கற்பு, காதல், குடும்பம் பற்றிய புனிதக் கற்பிதங்களை அசைத்துப் பார்த்தது படம். அன்றைய தமிழ்ச் சூழல் அதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை.

மஞ்சு ஏன் எனக்குத் தனித்துத் தெரிகிறாள் என்றால் அதற்கு பல காரணங்கள். அவள் பாலியல் வன்முறையை கற்பு கெட்டதாக, புனிதம் போனதாக நினைக்கவில்லை. யார் காலிலும் மண்டியிடவில்லை. சுய பரிதாபம் கொள்ளவில்லை. அவளின் உடைந்து உறவுகளும் உணர்வுகளும் அவளை அறிவு சார் பாதையில் திருப்புகின்றன. யோசிக்கிறாள். பெண்ணியம் பற்றி பேசுகிறாள். ஆண் துணையின்றி உறுதியாக வாழ முற்படுகிறாள். இருந்தும் காதல் உணர்வுகள் இறுகி அமில வார்த்தைகள் தெளிக்கும் அளவு மென்மையற்றுப் போகிறாள்.

வாழ்வு தந்த அனுபவங்கள் வாயிலாக உலகைப் பார்க்கிறாள். இருந்தும் அவற்றைத் துறந்த ஒரு சுதந்திரப் பார்வை கொள்ள விரும்புகிறாள். நம்பிக்கை கொள்ள தயக்கம் இருந்தாலும் அருணின் காதலை ஏற்க முடிவு செய்வது அவள் தன் உள்மனப் போராட்டங்களிலிருந்து வெற்றி கொள்கிறாள் என்பதுதான். ஆனால் கால தாமதம் அவள் காதலைக் காவு வாங்குகிறது.

எல்லா சினிமாத்தனத்தையும் மூட்டை கட்டி தூக்கி எறிந்துவிட்ட படைப்பு அது. கமல் டான்ஸ் ஆடவில்லை. ரஜினி ஸ்டைல் பண்ணவில்லை. படத்தில் டூயட் இல்லை. காமெடி இல்லை. வர்த்தகக் கூறுகள் சிலவற்றில் சமரசம் செய்திருந்தால் பெரு வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம் அது. மஞ்சுவைப் போல ருத்ரைய்யாவும் சமரசம் செய்யவில்லை.

அறம் சார்ந்த சினத்துடன் தான் என்றுமே இருந்திருக்கிறார். எந்த சமரசமும் செய்யவில்லை. நம்பிக்கையுடன் கடைசி வரை போராடிக் களைத்து மரித்த கலைஞன் ருத்ரைய்யா. அவர் வாழ்வின் அடையாளமாய் அவர் விட்டுச் சென்றது ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை மட்டும்தான்.

சுஜாதா அத்தை கம்யூனிஸ களப்பணிகள் செய்து முடித்து தற்போது ஊட்டி அருகே குடி போய்விட்டார். துலுஜா பாட்டி சென்ற ஆண்டு தான் காலமானார். போக் ரோட்டிலிருந்த பாலன் இல்லம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்) என்ற பெயரில் கம்பீரமாக இருந்த இடத்தில் இன்று ஒரு வர்த்தகக் கட்டிடம் உள்ளது. சிவப்பு வர்ணம் வெளிப்பூச்சில் தெரிந்தது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.

‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பிறகு எனக்கு காணக் கிடைக்கவில்லை.

(திரை விரியும்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE