சிறகை விரி உலகை அறி-70: போர்ச்சுகலின் காலப் பெட்டகம்

By சூ.ம.ஜெயசீலன்

முதல் கவிதை, முதல் மேடை, முதல் புத்தகம் எனும் தனித்த அனுபவங்கள் நினைவுச் சரங்களில் எந்நாளும் பூத்திருக்கும். வானவில் வண்ணமாக நெஞ்சில் கலந்திருக்கும். ஆழ்கடல் அதிசயமென ரகசிய அலையடிக்கும்.

நான் பணம் செலுத்தி வாங்கிய முதல் புத்தகத்துக்கும், லிஸ்பன் நகரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால், அத்தொடர்பின் வேர் தேடி புறப்பட்டேன்.

ட்ராம்

லிஸ்பன் நகரத்தின் முக்கிய அடையாளம் மின்சார ட்ராம் வண்டிகள். குன்றுகளும் மலைகளும் நிறைந்த லிஸ்பனின் சுற்றுலாத் தலங்களை, 5 வெவ்வேறு தடங்களில் செல்லும் ட்ராம்கள் இணைக்கின்றன. அருகலை (Wi-Fi) வசதியுள்ளது. வண்டி எண் 28, மரத்தால் ஆனது.

ட்ராம் வண்டி

காற்று துடைக்காத வியர்வையுடன் முதன்முறையாக ட்ராம் வண்டியில் ஏறினேன். எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன் சென்ற உணர்வு. சுத்தமான இருக்கைகள், நேர்த்தியான கைப்பிடிகள், நிறைவான வெளிச்சம், பாதுகாக்க கதவுகள், பல்வேறு நாட்டுப் பயணிகள். அனைத்தையும் வியந்தேன். நிறுத்தத்தில் இறங்கி வெயிலில் நடந்தேன். ஜான் தே பிரிட்டோ கோயில் வாசலில் நின்றேன்.

லிஸ்பன், புனித அருளானந்தர் கோயில்

அருளானந்தர்

லிஸ்பனில் 1647-ல் உயர்குடியில் பிறந்தவர் ஜான் தே பிரிட்டோ. பிறந்தவுடனேயே சாகக்கிடந்து பிழைத்தார். 11 வயதில் மறுபடியும் உடல்நலக் குறைவு. “மகனின் உயிரைக் காப்பாற்றினால், இயேசு சபை துறவிகள் அணியும் அங்கியை ஓராண்டு அணிய வைக்கிறேன்” என்று தாய் நேர்ச்சை வைத்தார். மகன் பிழைத்தார். சில ஆண்டுகள் கழித்து, இயேசு சபையில் சேர்ந்தார் பிரிட்டோ. 1673-ல் இந்தியா வந்தார். அருள்தந்தையாக அருட்பொழிவு பெற்றார். இராமநாதபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய மறவ நாட்டில் இயேசுவை அறிவித்தார். இந்திய துறவிகள் போல ஆடை அணிந்தார். தன் பெயரை அருளானந்தர் என தமிழில் மாற்றினார்.

அந்நாட்களில், அரசர் சேதுபதியின் கீழ் தடியத்தேவர் என்றொரு சிற்றரசர் இருந்தார். அவருக்கு ஐந்து மனைவிகள். திடீரென கொடிய நோய் தாக்கியது. மருத்துவம் பலனளிக்கவில்லை. அருளானந்தரை அணுகினார். நலம் பெற்றார். கிறிஸ்தவராக மாற விரும்பினார். ‘கிறிஸ்தவராக வேண்டுமென்றால், ஒருவருக்கு ஒரு மனைவி எனும் கொள்கையுடன் வாழ வேண்டுமே?’ என்று கேட்டார் அருளானந்தர். முதல் மனைவியை வைத்துக்கொண்டு மற்ற நான்கு பேரையும் அவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பினார் தடியத்தேவர். அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் கடலாயி. இவர், அரசர் சேதுபதியின் தங்கை மகள். கொதித்தெழுந்த சேதுபதி, வீரர்களை அனுப்பி அருளானந்தரைக் கைது செய்தார். குதிரையின் பின்னால் அருளானந்தரைக் கட்டி பல்வேறு கிராமங்கள் வழியாக இழுத்துச் சென்றார்கள். ஓரியூரில் தலையை வெட்டிக் கொலை செய்தார்கள்.

முதல் புத்தகமும் முதல் கட்டுரையும்

நான் பிறந்த ஊரிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஓரியூர். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஓரியூருக்குச் செல்வது வழக்கம். நானும் நண்பர்களும் நடந்தே செல்வோம். அங்குதான் முதன் முதலாக, 1996-ல், ஒரு புத்தகம் வாங்கினேன். பெயர், ‘ஓரியூரின் ஒளி விளக்கு’. விலை 12 ரூபாய்.

அந்த நாட்களில், காலை 10 மணிக்குத்தான் செய்தித்தாள் எங்கள் ஊருக்குள் வரும். தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வருகையில் கடையில் அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பதும், விடுமுறை நாட்களில், “செய்தித்தாள் வந்துவிட்டதா?” என பலமுறை சென்று விசாரிப்பதும் என் பொழுதுபோக்கு. நூலக அனுபவமோ, இலக்கிய உலகம் குறித்தத் தகவல்களோ ஏதும் இல்லை. ஒரு நாளிதழில் சிறு கட்டுரைகள் வெளியாகும். 100 ரூபாய், 75 ரூபாய் என அதற்குச் சன்மானமும் வழங்கப்படும். தினமும் அக்கட்டுரைகளை வாசித்த எனக்கும், எழுதி அனுப்ப ஆசை வந்தது. அருளானந்தரைப் பற்றி எழுதினேன். அதுதான் என் வாழ்வில் நான் எழுதிய முதல் கட்டுரை. ஆனாலும், பல்வேறு வரிகளை அப்படியே புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியிருந்ததால், நாளிதழுக்கு அனுப்பவே இல்லை. இப்போதும் என்னிடமே உள்ளது.

எளிமையான கோயில்

நான் சென்றபோது, புனித அருளானந்தர் கோயில் பூட்டியிருந்தது. அவ்வழியே வந்தவரிடம் விசாரித்தேன். “அருள்தந்தை வெளியூர் சென்றுள்ளார்கள். கோயில் பொறுப்பாளர் இந்நேரம் வந்திருக்க வேண்டும். என்ன ஆனது என்று தெரியவில்லை” என்றார். “அருளானந்தர் பிறந்த இடம், வாழ்ந்த வீடு என்று ஏதாவது பாதுகாக்கப்படுகிறதா?” என்று கேட்டேன். “தெரியவில்லை” என்றார். நன்றி சொல்லிவிட்டு, சாலைக்கு மறுபக்கத்தில் இருந்த குளத்தோடு சேர்த்து கோயிலைப் படமெடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

பெலாம் கோபுரம் முன்பாக...

பெலாம் கோபுரம்

ட்ராம் வண்டியில், ஜெரோனிமஸ் துறவுமடம் வந்தேன். அங்கிருந்து, தாகுஸ் நதிக்கரையில் உள்ள பெலாம் கோபுரத்துக்கு 10 நிமிடம் நடந்தேன். அரசர் முதலாம் மனுவேல் காலத்தில் 1514-1520-ம் ஆண்டுகளில் இக்கோபுரம் கட்டப்பட்டது. கடல் வழியில் லிஸ்பனுக்கு நுழைவாயிலாகவும், நதி வழியாக வரும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் அரணாகவும், காலனி நாடுகளிலிருந்து கொண்டுவந்த பொருட்களை இறக்கும் தளமாகவும் விளங்கியது இக்கோபுரம்.

உச்சியிலிருந்து ஜெரோமினஸ் துறவுமடம்

உயரம் 98 அடி. தரைத்தளத்தில் 16 ஜன்னல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் கடலையும், நதியையும் நோக்கிய பீரங்கிகள் இருக்கின்றன.

1. ஆளுநருக்கான அறை, 2. அரசருக்கான அறை, 3. அதிகாரிகளை அரசர் சந்திப்பதற்கான அறை, 4. கோயில், 5. மொட்டைமாடி என கீழிருந்து மேலாக 5 மாடிகள் உள்ளன.

இக்கோபுரத்தின் முக்கியத்துவம் குறைந்த பிறகு, 1589-ல் சிறைச்சாலையாக, 1655-ல் சுங்க அலுவலகமாக, 1810-ல் அஞ்சலகமாக, 1865-ல் கலங்கரைவிளக்கமாக விளங்கியது. யுனெஸ்கோ புராதன சின்னமாகத் திகழ்கிறது.

நான் சென்றபோது கடல் நீர் சூழ்ந்திருந்தது. நடைபாதையில் நடந்து, நுழைவுச் சீட்டு வாங்கி உயரே சென்றேன். நிறைய கோபுரங்கள் இருக்கின்றன. அதன் வழியாக நகரத்தின் அழகையும், துறைமுகத்தில் கப்பல்களையும் ரசித்தேன்.

நாடு பிடித்தவர்களின் நினைவாக!

பெலாம் கோபுரத்திலிருந்து நேர் கோட்டில், புதிய நாடுகளைக் கண்டுபிடித்ததன் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது (Padrao Dos Descobrimentos). ‘போர்ச்சுக்கீசு உலக கண்காட்சி’க்காக 1940-ல் தற்காலிகமாக சிறிய அளவில் உருவாக்கப்பட்ட வடிவம் இது. மாலுமியும் இளவரசருமான ஹென்றி இறந்த 500-ம் ஆண்டு நினைவாக 1960-ல் இதைப் பெரிதாகக் கட்டினார்கள். 56 மீட்டர் உயரம். 20 மீட்டர் அகலம். 46 மீட்டர் நீளம்.

மனிதர்களே இயக்குகின்ற கப்பல் புறப்படுவதுபோல் உள்ளது. கப்பல் முனையில் ஹென்றியின் சிலை. இரண்டு பக்கங்களிலும், இளவரசரை நோக்கி மாலுமிகள், வரைபடவியலாளர்கள், வீரர்கள், குடியேறப் போகிறவர்கள், மதப் போதகர்கள், குறிப்பு எழுதுகிறவர்கள், ஓவியர்கள் என 32 பேர்களின் சிலைகள். போர்ச்சுக்கீசு கடல் காலனியாக்க பயணத்தில் முக்கிய பங்காற்றியவர்களின் பிரதிநிதிகளாக இச்சிலைகள் அமைந்துள்ளன.

நுழைவுச்சீட்டு வாங்கி உச்சிவரை சென்றேன். முகப்பில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸை மேலிருந்து பார்த்தேன். கப்பல் சுக்கான் வடிவம், அற்புதமான ஓவியமாகத் தெரிந்தது. ஜெரோனிமஸ் துறவுமடத்தையும் முழுமையாகக் கண்டு களித்தேன்.

பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு நண்பருக்காகக் காத்திருந்தேன். பவுலோ வந்தார். Pasteis de Belem கடைக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைப் பார்த்துக்கொண்டே சான்டரெய்ம் சென்றோம். சான்ராவின் பெற்றோரைச் சந்தித்தோம்.

பயணப் புத்தகம்... தமிழில்

தமிழ்ப் புத்தகம்

இரவு சாப்பிட்ட பிறகு பையை அடுக்கினேன். தமிழ்ப் புத்தகம் கண்ணில் பட்டது. சந்தியாகோ தே கம்பொஸ்தெல்லா சென்றிருந்தபோது, “தமிழ் பேசுகிறவர், இக்கோயிலுக்கு திருப்பயண பாதையில் நடந்து வந்திருக்கிறார். அந்த அனுபவத்தை எழுதி புத்தகமாக அனுப்பியுள்ளார். இங்கே யாருக்கும் தமிழ் தெரியாது. நீங்கள் கொண்டுபோய் வாசியுங்கள்” என்று பிலிப்பைன்ஸ் அருள்தந்தை ஒருவர் என்னிடம் கொடுத்தார். நாஞ்சில் பதிப்பக வெளியீடு. தலைப்பு, “புனித யாக்கோபின் வழியில்: சந்தியாகோ திருப்பயணம்.” ஆசிரியர், தே நிர்மலா.

வாசித்துக்கொண்டிருந்தபோது, “புறப்படலாமா?” நண்பர் அழைத்தார். “இதோ வந்துவிட்டேன்” என்று அறையிலிருந்து வெளியே வந்தேன். நண்பர்களுடன் செல்ஃபி எடுத்தேன். தொடர்வண்டி நிலையத்தில் என்னை வழியனுப்பினார்கள். விமான நிலையத்துக்குச் சென்றேன். மறுநாள் காலை, லிஸ்பனில் இருந்து புறப்பட்டு அயர்லாந்து நாட்டின் டப்ளினில் இறங்கி, அங்கிருந்து ஐஸ்லாந்து செல்ல வேண்டும்.

திட்டமிடல் பிழை

இன்னும் 4 நாட்களுக்கு ஐரோப்பிய விசா இருந்தாலும், நான் முன்னமே வெளியேறுவதாக நினைத்த லிஸ்பன் குடியேற்ற அதிகாரி, அதற்கான முத்திரையைக் கடவுச்சீட்டில் பதிந்தார். பரிசோதனைகள் முடிந்தன. விமானம் ஏறும் இடத்துக்குச் சென்றேன். பயணிகளை ஒவ்வொருவராக அனுப்பினார்கள். என் முறை வந்தபோது, “அயர்லாந்து நாட்டு ட்ரான்சிட் விசா வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். என்னிடம் இல்லை. “விமானம் ஏற இயலாது” என்று திருப்பி அனுப்பினார்கள். குடியேற்ற அதிகாரியிடம் சென்று, “பயணம் செல்ல இயலவில்லை. மறுபடியும் நாட்டுக்குள் செல்ல வேண்டும்” என்றேன். கடவுச்சீட்டில் சற்றுமுன் பதிக்கப்பட்ட முத்திரையை அடித்தார். உள்ளே அனுமதித்தார்.

நண்பர்களின் உடனிருப்பு

ஐஸ்லாந்து நாட்டுடன் சுற்றுலாவை முடித்துக்கொண்டு, ஒரு கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்ல வேண்டும். இப்போது என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. விமான நிலையத்தில் தரையில் அமர்ந்துவிட்டேன். இலவச அருகலையைப் பயன்படுத்தி, நேரடியாக அமெரிக்கா செல்வதற்கு விமான பயணச் சீட்டு தேடினேன். கையில் இருந்த பணம் போதவில்லை. கிரடிட் கார்டில் இருந்த பணமும் போதவில்லை குழப்பம். நண்பர் ஒருவரை திறன்பேசியில் அழைத்தேன். “ஒரு கூட்டத்தில் உரையாற்றத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். சரியாக 30 நிமிடங்கள் கழித்து அழைக்கிறேன்” என்றார். அதற்குள் மற்றொரு நண்பரை அழைத்தேன். உடனடியாக, அவரின் கிரடிட் கார்டு தகவல்களை என்னுடன் பகிர்ந்தார். பயணச்சீட்டு வாங்கினேன். 10 நிமிடத்தில் முதல் நண்பர் என்னைக் கூப்பிட்டார். “என்னால், கூட்டத்தைத் தொடர இயலவில்லை. நண்பர் ஒருவர் சிக்கலில் இருக்கிறார் என்று சொல்லி பாதியில் நிறுத்திவிட்டேன்” என்றார். நல்ல நண்பர்கள் நான் பெற்ற பாக்கியம்.

நாடு கண்டுபித்ததன் நினைவுச் சின்னம்

விமான நிலையத்திலேயே இருந்தேன். மாலையில் அழைத்த பவுலோ, “ஐஸ்லாந்து சென்றுவிட்டீர்களா? என்று கேட்டார். நடந்ததை விளக்கினேன். “கவலைப்படாதீர்கள். இன்னொரு நாள் போர்ட் வைன் குடிக்கும் வாய்ப்பு வாய்த்துள்ளது” என்று சொல்லி புன்னகைத்தார். விமான நிலையம் வந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

மறுநாள் புறப்பட்டு அமெரிக்கா சென்றேன். கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, இந்தியா திரும்பினேன். நண்பர் ஒருவர், “அமெரிக்காவில் எந்தெந்த இடங்களுக்குச் சென்றீர்கள்?” என்று கேட்டார், “மினியாபோலிஸ், கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூ ஆர்லியன்ஸ், அட்லான்டா” என்றேன். “அப்படியென்றால், நீங்கள் அமெரிக்காவைப் பார்க்கவில்லை. அங்கே உள்ள கிராமங்களைத்தான் பார்த்திருக்கிறீர்கள்”.... சத்தமாகச் சிரித்தார். புன்னகையில் முகம் மலர்ந்தேன்.

(பாதை விரியும்)

சுக்கான் - டைல்ஸ் வடிவம்

ட்ரான்சிட் விசா

ஒரு நாட்டுக்கு நாம் பயணிக்கும்போது, வழியில் வேறொரு நாட்டில் இறங்கி மற்றொரு விமானத்தில் பயணிக்க நேரிடலாம். அப்படி இறங்கிச் செல்வதற்கு, சில நாடுகள் விசா எடுக்கச் சொல்கின்றன. அதற்கு, ட்ரான்சிட் விசா என்று பெயர். பெரும்பாலும் 48 அல்லது 96 மணி நேரத்துக்கு ட்ரான்சிட் அனுமதி கொடுப்பார்கள். திட்டமிடலின்போது, இதையும் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்வது நல்லது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE