போர்கள் வெறுமனே உயிரிழப்புகள், உடைமை இழப்புகள், பொருளாதார இழப்புகள் போன்றவற்றுடன் நின்றுவிடுவதில்லை. குறிப்பாகப் போரில் ஒரு நாட்டுக்கு ஏற்படும் தோல்வியைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி எதிரி நாடுகள் கொடுக்கும் அழுத்தத்தால் அந்நாட்டின் எதிர்காலமே திசைமாறிவிடும். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் முடிவில் அப்படியான விளைவுகளைப் பல நாடுகள் எதிர்கொண்டன. அப்படித்தான் கொரியாவும் வடக்கு மற்றும் தெற்கு என வல்லரசு நாடுகளால் பிரிக்கப்பட்டது. இன்றைக்கு வட கொரியாவுக்கு ரஷ்யாவின் ஆதரவும், தென் கொரியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவும் நீடிப்பதன் பின்னணியில் வலிநிறைந்த வரலாறு ஒன்று இருக்கிறது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனி தலைமையிலான அச்சு நாடுகளில் இடம்பெற்றிருந்த ஜப்பான், அமெரிக்காவுக்குப் பெரும் குடைச்சல் கொடுத்தது. 1941 டிசம்பர் 7-ல் ஹவாய் தீவில் இருந்த ‘பேர்ல் ஹார்பர்’ துறைமுகத்தில் ஜப்பான் விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா ஆத்திரமடைந்தது. அதுவரை போரில் நேரடியாக இறங்காமல், நடுநிலை வகித்த அமெரிக்கா மறுநாளே ஆவேசத்துடன் யுத்தத்தைத் தொடங்கியது. ஜப்பான் மீது பல தாக்குதல்களை நடத்தியது. ஒருகட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசிப் பேரழிவை ஏற்படுத்தியது.
அணுகுண்டு தாக்குதல்கள் ஜப்பானுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி, அந்நாட்டின் சோவியத் ஒன்றியம் போர் தொடுத்தது, ஜெர்மனி மற்றும் அச்சு நாடுகளின் படைகள் ஸ்டாலின்கிராடு யுத்தத்தில் சந்தித்தப் பெரும் தோல்வி உள்ளிட்ட காரணிகளால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. 1945 ஆகஸ்ட் 15-ல் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் ‘எதிர்காலம்’ குறித்து முடிவெடுக்க நேச நாடுகள் தீர்மானித்தன. 1945 டிசம்பர் 16 முதல் 26 வரை மாஸ்கோவில் நடந்த மாநாட்டில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம் ஆகிய மூன்றே நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அதன்படி, கொரியாவில் ஜப்பானின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதாவது, ஜப்பானுக்கு ‘தண்டனை’ கொடுப்பது எனும் பெயரில், அதன் ஆதிக்கத்தில் இருந்த கொரியாவைப் பிடுங்கி, அதை இரண்டாகப் பிரித்தனர். வட கொரியா சோவியத் ஒன்றியத்துக்குக் கையளிக்கப்பட்டது. தென் கொரியாவை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. இவை படிப்படியான நடவடிக்கைகள் மூலம் மெல்ல அமலுக்கு வந்தன.
1945 ஆகஸ்ட் 24-ல் சோவியத் ஒன்றியப் படைகள் பியோங்யாங் (இன்றைய வட கொரியாவின் தலைநகர்) நகருக்குள் நுழைந்தன. அக்டோபர் 3 முதல் அங்கு சோவியத் தலைமையிலான அரசு ஆளத் தொடங்கியது. 1946-ல், முதல் இடைக்கால அரசை வட கொரியா அமைத்தது. அடுத்த ஆண்டில் இரண்டாவது இடைக்கால அரசு அமைந்தது. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (டிபிஆர்கே) எனும் அரசு முறைப்படியாக வட கொரியாவை ஆளத் தொடங்கியது. அதன் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றவர் கிம் இல் சுங். அவர்தான் இன்றைய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா.
மறுபுறம், 1945 செப்டம்பர் 8 முதல் அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்ட ‘கொரியாவில் அமெரிக்க ராணுவ அரசு’ (யுஎஸ்ஏஎம்ஜிஐகே) அரசு ஆட்சி நிர்வாகத்தைத் தொடங்கியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அங்கு ஆட்சி செய்த யுஎஸ்ஏஎம்ஜிஐகே அரசு, 1948 ஆகஸ்ட் 15-ல் விலகிக்கொண்டது. அதன் பின்னர்தான் முதல் கொரியக் குடியரசு அரசு தென் கொரியாவை ஆளத் தொடங்கியது.
அமெரிக்கா - சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான பனிப்போர் காலத்தில், இரண்டு கொரியாக்களையும் இரு வல்லரசு நாடுகளும் பயன்படுத்திக்கொண்டன. பல தசாப்தங்களாக வட கொரியாவுக்கு ரஷ்யா ஆதரவளித்தது. எனினும், இன்றைக்கு ரஷ்யர்கள் வட கொரிய அரசை அவ்வளவாக விரும்புவதில்லை. சீனா ஓரளவு ஆதரவு வழங்குகிறது.
மறுபுறம், தென் கொரியாவுக்கான ஆதரவை அமெரிக்கா தொடர்ந்து வழங்கிவருகிறது. இரு நாடுகளும் இணைந்து அவ்வப்போது நடத்தும் ராணுவ ஒத்திகைகள், அவற்றுக்கு எதிராக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அனல் கக்கும் நிகழ்வுகள், அணு ஆயுத மிரட்டல்கள் ஆகியவற்றின் பின்னணியில் இரண்டாம் உலகப்போர் காலத்து ‘கொரியப் பிரிவினை’யின் தாக்கம் இருக்கிறது.