இந்தியப் பெருங்கடலில் மிரட்டும் சீன டிராகன்!

By வெ.சந்திரமோகன்

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி, கடல்சார் பாதுகாப்புக்காக ‘டோர்னியர் 228’ எனும் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. 2018-ல் கடல்சார் கண்காணிப்புக்காக இது போன்ற இரண்டு டோர்னியர் விமானங்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது இந்தியா. மேலும் ஒரு விமானம் தேவை என இலங்கை வேண்டுகோள் விடுத்ததன் பேரில் இதை இந்தியா பரிசளித்தது.

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, “ஜவாஹர்லால் நேரு காட்டிய வழியை இந்தியா உள்வாங்கி இன்றைக்கு ஓர் உலக சக்தியாக மாறிவருகிறது. வளர்ந்துவரும் இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று நன்றியுணர்வும் நட்புணர்வுமாகப் பேசினார்.

அதற்கு மறுநாள்தான், இந்தியாவின் ஆட்சேபங்களையும் அதிருப்தியையும் ஓரங்கட்டிவிட்டு சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலின் வருகை ஏற்படுத்தியிருக்கும் சலனம் இந்தியப் பெருங்கடலையும் தாண்டி உலகின் பல்வேறு முனைகளில் எதிரொலித்திருக்கிறது. என்ன பிரச்சினை?

கப்பல் சரிதம்

சீனாவின் ‘யுவான் வாங்’ வரிசையைச் சேர்ந்த கப்பல்களின் 5-வது கப்பலான ‘யுவான் வாங் 5’ இந்த வரிசையிலேயே அதிகமான அதி நவீன சாதனங்களைக் கொண்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஹைடெக் ரேடியோ ஆன்டெனா, ரேடார் போன்ற கருவிகள் மூலம் எந்தச் செயற்கைக்கோளையும் கண்காணிக்க முடியும். நமது ஏவுதளத்தையும் கண்காணிக்க முடியும். 750 கிலோ மீட்டர் சுற்றளவில் கண்காணிக்கும் திறன் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள துறைமுகங்களும், விமானப் படைத் தளங்களும் அதன் கண்காணிப்பு வளையத்துக்குள் வரும். இந்தியாவின் பெரும்பாலான விண்வெளித் திட்டங்கள், ஏவுதளங்கள் தென்னிந்தியாவில்தான் இருக்கின்றன. எனவே, இலங்கையில் இருந்தபடி இவற்றையெல்லாம் கண்காணிக்க முடியும். மோசமான வானிலையிலும் இந்தக் கப்பலின் சாதனங்கள் சிறப்பாகச் செயல்படும் என்பது கொசுறுத் தகவல்.

எச்சரிக்கை அடைந்த இந்தியா

எரிபொருள் நிரப்புவதற்காக என்றே காரணம் சொல்லப்பட்டாலும், செயற்கைக்கோள்களையும் ஏவுகணைகளையும் கண்காணிப்பதற்காக சீன ராணுவம் பயன்படுத்தும் விண்வெளி ஆய்வு மற்றும் உளவுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகையை இந்தியா எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தங்கள் சொந்த செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பதுதான் இந்தக் கப்பலின் பணி என சீனா சொல்கிறது. சீனாவின் நோக்கம் உண்மை என்றால், இந்தக் கப்பலை இயக்கும் பொறுப்பு சீன விண்வெளி முகமையிடம்தான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், இதை இயக்குவது சீன ராணுவம் என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் நாட்களின் இக்கப்பலின் கண்காணிப்பு சாதனம் அணைத்து வைக்கப்பட்டிருக்கும் என இலங்கை கூறுகிறது. ஆனால், நவீனத் தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கப்பலின் செயல்பாட்டை அத்தனை எளிதாகக் கணித்துவிட முடியாது என்பதால் இந்தியா விழிப்புடனேயே இருக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் ரசிக்கவில்லை. இதுதொடர்பாக, இலங்கையிலும் கம்போடியாவிலும் நடந்த கூட்டங்களில் தங்கள் கவலையை இரு நாடுகளும் முன்வைத்திருக்கின்றன.

திரைமறைவுச் சிக்கல்கள்

ஆரம்பத்தில் அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானத்தில் பெரும் தொகையை முதலீடு செய்தது சீனா. பின்னர் இலங்கையால் அந்தப் பணிகளை முன்னெடுக்க முடியாததால் 99 ஆண்டுகளுக்கு இந்தத் துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டுவிட்டது. இன்றைக்கு சீனாவின் கட்டுப்பாட்டில்தான் துறைமுகம் இருக்கிறது. இந்தத் துறைமுகம் குறித்த இன்னொரு தகவலும் இந்தியாவின் எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆம், இதைத் தங்கள் கடற்படைத் தளமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு இலங்கையிடம் சீனா வலியுறுத்தும் எனும் ஊகங்கள் உண்டு. இந்தக் கருத்தை அமெரிக்கா பகிரங்கமாகவே பதிவுசெய்திருக்கிறது.

இதற்கு முன்பு, இலங்கை துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்தபோது இந்தியா அதை ஆட்சேபித்தது. அதேசமயம், அந்த நீர்மூழ்கிக் கப்பல்களை ஒப்பிட ‘யுவான் வாங் 5’ கப்பலால் பெரிய அச்சுறுத்தல்கள் இல்லை என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள். சர்வதேச கடல் சட்டங்களை முறையாகப் பின்பற்றுவதாகவும், எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இக்கப்பல் இருக்காது என்றும் சீனா விளக்கமளித்திருக்கிறது.

ஆனால், ஏற்கெனவே லடாக் எல்லையில் அச்சுறுத்தலாக இருந்துவரும் சீனாவின் ஒவ்வொரு செயலையும் இந்தியா மிகுந்த கவனத்துடன் அணுகுகிறது. எனவே, யுவான் வாங் 5 கப்பலின் வருகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தனது ஆட்சேபத்தை இந்தியா பதிவுசெய்துவிட்டது.

“இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விஷயத்தையும் கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கிறது” என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் அரிந்தம் பக்சி தெரிவித்திருந்தார்.

இவ்விஷயத்தில் ஆரம்பம் முதலே மேலாதிக்க மனப்பான்மையில் இருக்கும் சீனா, ‘பாதுகாப்பு காரணங்கள் எனும் பெயரில் இலங்கைக்குச் சில நாடுகள் அழுத்தம் கொடுப்பது முற்றிலும் நியாயமற்றது’ என ஆட்சேபம் தெரிவித்தது.

ஏற்கெனவே சீனத் தயாரிப்பு செயலிகள் மூலம் இந்தியாவில் உளவு வேலை நடந்ததாகப் புகார்கள் உண்டு. எனவே, சீனா குறித்த ஜாக்கிரதை உணர்வு இந்தியாவுக்கு அதிகம். இத்தனைக்குப் பிறகும் இந்தக் கப்பலின் வருகை குறித்த இந்தியாவின் ஆட்சேபத்தையும் நியாயமான கவலைகளையும் இலங்கை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இதே துறைமுகத்தில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைக் கப்பல்களும் வந்து சென்றதை இலங்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்தியா 4 பில்லியன் டாலர் கடனுதவி வழங்கி கைகொடுத்திருக்கிறது. ஆரம்பம் முதலே இலங்கைக்கு இந்தியா செய்திருக்கும் உதவிகள் மகத்தானவை. இலங்கை ஐநா சபையில் உறுப்பினராகச் சேர்வதற்கு இந்தியாதான் உதவி செய்தது. எனவே, இது ஒரு வகையில் இலங்கைக்கு தர்மசங்கடமான விஷயம்தான். மறுபுறம் இலங்கையின் உட்கட்டமைப்புக்கு இந்தியா கணிசமான தொகையை வழங்கியிருந்தாலும், துறைமுகம், விமான நிலையம் போன்ற பெரிய கட்டுமானங்களில் சீனா கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறது.

‘ஒன் ரோடு ஒன் பெல்ட்’ திட்டத்தின் மூலம் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தொடங்கி பல்வேறு நாடுகளில் சீனா தனது கால் தடத்தைப் பதித்திருக்கிறது. சொல்லப்போனால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் சீனாவின் கடன் வலையில் சிக்கித் தவிக்க இது ஒரு முக்கியக் காரணியாகவும் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டி, பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிக்குத் தகுதி பெற சீனாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியம்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதில் இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிடமிருந்தும் உதவி பெற்றுவரும் நிலையில், இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றே இலங்கை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இலங்கை அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ‘இது வழக்கத்துக்கு மாறானது அல்ல’ எனும் கருத்தை ஆரம்பம் முதலே அந்நாடு பதிவுசெய்து வந்திருக்கிறது. அதேசமயம், சம்பிரதாயத்துக்கு இந்தியாவின் ஆட்சேபம் குறித்து சீனாவிடமும் பேசியிருந்தது. சீனா அதையெல்லாம் தன் பாணியில் கடந்துவந்துவிட்டது.

“இதில் எந்த விசேஷமும் இல்லை. இதுபோன்ற கப்பல்கள் இலங்கைக்கு வந்துசெல்வது இது முதல் முறை அல்ல” என்று இலங்கைக்கான சீனத் தூதர் சி ஸென்ஹாங் சாவகாசமாகக் கூறியிருக்கிறார். இவ்விஷயத்தில் இந்தியா முன்வைத்த ஆட்சேபத்தையும் சீனா அலட்சியமாகவே கையாண்டது. இதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சி ஸென்ஹாங், “அதெல்லாம் எனக்குத் தெரியாது. வாழ்க்கையென்றால் அப்படித்தானே இருக்கும்!” என்று தத்துவார்த்தமாகப் பேசினார்.

அதேசமயம், ஆகஸ்ட் 11-ம் தேதியே வந்திருக்க வேண்டிய கப்பல், இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, 5 நாட்கள் தாமதமாகி 16-ம் தேதி இலங்கைக்கு வந்தது. ஆகஸ்ட் 22-ம் தேதி வரை அங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இனி என்ன?

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கடல்வழி முடக்கப்படும் எனும் அச்சமும் எழுந்திருக்கிறது. வங்கதேசத்துக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கியிருக்கும் சீனா, அங்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தளத்தையும் உருவாக்கியிருக்கிறது. பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியிருப்பதன் மூலம் அரபிக் கடலில் தனது பலத்தை அதிகரித்துக்கொண்டிருக்கிறது சீனா.

தைவான் பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா மீது காட்டமாக இருக்கும் சீனாவுக்கு ஐரோப்பிய நாடுகளுடனும் கசப்பு இருக்கிறது. இதனால், ஆப்பிரிக்காவில் உள்ள கனிம வளம் மிக்க நாடுகள் பக்கம் அதன் கவனம் திரும்பியிருக்கிறது. இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ் நாடுகள் அங்கம் வகிக்கும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு அமைப்பில் இந்தியாவும் ஓர் உறுப்பினர். ஏற்கெனவே தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்க நடவடிக்கைகள் புருனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குப் பிரச்சினை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், சீனாவின் ஒவ்வொரு நகர்வும் இந்தியாவால் உற்றுக் கவனிக்கப்படுகிறது. இமயமலையில் இம்சை கொடுக்கும் சீனா, இலங்கையிலிருந்தும் தொந்தரவு கொடுத்துவிடக்கூடாது என்று உஷாராக இருக்கிறது இந்தியா.

அமெரிக்கா துணையிருப்பதால் சமாளித்துவிடலாம் என்றே சொல்லாம். பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியைப் பெற, சீனாவைவிட அமெரிக்காவின் சகாயம் மிகவும் அவசியம் என்பதால், அத்தனை எளிதில் இலங்கையும் சீனா இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்ல முடியாது. ஆகஸ்ட் 22-ல் யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டையிலிருந்து கிளம்பிவிடும். அதன் பின்னர்தான் அது ஏதேனும் விஷமத்தில் ஈடுபட்டிருக்கிறதா எனத் தெரியவரும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE