வைரமுத்து கதை; தயாரித்து இசையமைத்த இளையராஜா!

By வி. ராம்ஜி

‘வெற்றிப் படமாக்குவாக்குவதும் தோல்விப் படமாக்குவதும் எங்களின் கைகளில் இல்லை. ரசிகர்களாகிய நீங்கள்தான் அதைத் தீர்மானிக்கிறீர்கள்’ என்று திரையுலகினர் சொல்வார்கள். ஒருவகையில் அது உண்மைதான். ஒரு படத்தை வெற்றிகரமாக ஓடச்செய்வதும் ரசிகர்கள்தான்; தியேட்டரைவிட்டே ஓடச்செய்வதும் ரசிகர்கள்தான். அதிலும் சில வித்தியாச அனுபவங்களை நாமேகூட உணர முடியும். சில படங்களை தோல்விப் படமாக்கியிருப்போம். பிறகொரு சந்தர்ப்பத்தில் அந்தப் படத்தைக் கொண்டாடுவோம். அல்லது சில படங்களைத் தோல்விப் படமாக்கி அந்தப் பாடல்களை மட்டும் நம் நினைவுகளில் சுமந்தபடி இருப்போம். படத்தின் பெயரும் நினைவிருக்கும்; அந்தப் படத்தின் பாடல்களும் இனித்திருக்கும். அப்படியொரு படம்தான் - ‘ஆனந்தக்கும்மி’.

‘இளமைக்காலங்கள்’ பற்றி எழுதும்போது, ‘ஆனந்தக்கும்மி’யை நோக்கியும் மனம் தடதடத்தது. ‘இளமைக்காலங்கள்’ மிகப்பெரிய வெற்றிப்படம். ‘ஆனந்தக்கும்மி’ மிகப்பெரிய அளவில் தோல்வியைத் தழுவிய படம். ‘ஆனந்தக்கும்மி’யில் நடித்த நாயகன், நாயகி உட்பட பலரும் புதுமுகங்கள். படமும்கூட, வழக்கமான கிராமமாக இல்லாமல், திருச்சி பக்கமுள்ள கிராமங்களிலும் துறையூரிலும் துறையூர் பக்கமுள்ள கிராமங்களிலுமாக எடுத்திருப்பார்கள். புதுக்கோட்டை பக்கமும் படமாக்கியிருப்பார்கள்.

இயக்குநர் பாலகிருஷ்ணன் அதற்கு முன்னதாக படமேதும் இயக்கினாரா, இதையடுத்து படம் இயக்கினாரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், ‘ஆனந்தக்கும்மி’ நம் மனதில் இன்னமும் நிரந்தர இடம் பிடித்திருப்பதற்குக் காரணம்... பாடல்கள்.

படத்தின் கதையே சற்று வித்தியாசமானதுதான். நாயகனும் நாயகியும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் படித்து, விளையாடிச் சுற்றுபவர்கள். நாயகிக்கு அப்பா இல்லை. அந்த ஊர்ப் பண்ணையாரின் மகன் நாயகன். பண்ணையாரின் தயவால்தான் அந்தக் குடும்பம் வாழ்கிறது. வாலிபப் பருவம் வந்தவுடன் இருவருக்கும் காதல் துளிர்க்கிறது. ஆனால், இரண்டு குடும்பமும் தடுக்கிறது. காரணம்... பணமோ சாதியோ அந்தஸ்தோ ஆள் அம்பு சேனையோ அல்ல. நாயகனின் அப்பாவுக்கும் நாயகியின் அம்மாவுக்கும் இருக்கிற அந்த உறவுதான்... இவர்களைச் சேரவிடாமல் தடுக்கச் சொல்கிறது. ‘நீங்க செஞ்ச தப்புக்கு நாங்க எங்களையும் எங்க காதலையும் பலிகொடுக்கணுமா?’ என்று காதலர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.

ஊருக்குள்ளும் இந்த விஷயம் பரவுகிறது. இறுதியில், ‘நாமதான் தைரியமா ஒண்ணாச் சேர்ந்து வாழ முடியல. நம்ம பசங்களாவது வாழட்டுமே...’ என்று ‘ஊரைவிட்டு எங்காவது போய் வாழுங்கள்’ என்று கடிதம் எழுதிவிட்டு, நாயகனின் அப்பாவும் நாயகியின் அம்மாவும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நாயகனும் நாயகியும் பெட்டி படுக்கையோடு ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். ‘உங்களை நோக்கி வருகிறார்கள்’ என்ற வாசகத்துடன் படம் முடியும்.

இந்தப் படத்தைத் தயாரித்தவர் நம் இசைஞானி தான். ‘இளையராஜா பிக்சர்ஸ்’ என்கிற பெயரில் இந்தப் படத்தை அவர் தயாரித்தார். தம்புராவை ‘லோகோ’வாக்கி, தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைப் போடுவார் இளையராஜா. தயாரிப்பு என்று அவரின் மனைவியான ‘ஜீவா இளையராஜா’ என்று டைட்டிலில் வரும்.

பஞ்சு அருணாசலம், வைரமுத்து, கங்கை அமரன் முதலானோர் பாடல்களை எழுதினார்கள். இந்தப் படத்தின் கதையை எழுதியவர் யார் தெரியுமா? கவிஞர் வைரமுத்துதான் இந்தப் படத்துக்குக் கதை எழுதினார்.

புதுமுக நடிகர்களின் நடிப்பில் முழுமையின்மை, லாங்ஷாட், குளோஸப் ஷாட் வைப்பதில் உண்டான முரண்கள், அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களிடமிருந்தும் அவரவருக்குரிய பணியை செம்மையாக வாங்க முடியாத நிலை என பல குறைகள் இப்படத்தைத் தோல்வியடையச் செய்தன. ஆனாலும் படத்தில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களும் நம்மைக் கட்டிப்போட்டன.

'ஆனந்தக்கும்மியடி’ என்றொரு பாடல். எஸ்.பி.ஷைலஜா பாடியிருப்பார். ’தர்மப்பிரபு அவன்டா அவன்டா’ என்று டைட்டில் பாடலைப் பாடியிருப்பார் இளையராஜா. ’தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி’ என்ற பாடலில் எஸ்பிபி, இசை நதியில் நீந்தி விளையாடியிருப்பார். எஸ்.ஜானகியும் ஷைலஜாவும் இணைந்து ‘ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது’ என்ற பாடலைப் பாடியிருப்பார்கள். இசை தரும் உரிமையிலும் இவர்கள் குரல் தரும் இனிமையிலும் நாம் உருகித்தான் போவோம்.

’ஓ வெண்ணிலாவே வா ஓடி வா’ என்ற பாடல், எஸ்பிபி-க்கே உண்டான பாடல். ’ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ’ என்ற பாடல் நம் மனதை மெளனமாக்கும். எஸ்பிபி, இளையராஜா, கங்கை அமரன் என்று பலரும் சேர்ந்து பாடியிருக்கிற ‘மச்சான் மாட்டிக்கிட்டாரு கொடியை நாட்டிக்கிட்டாரு’ என்ற பாடலைக் கேட்டால் மனசு லேசாகும். கவுண்டமணியும் செந்திலும் நடித்திருப்பார்கள். கவுண்டமணியைக் கலாய்க்கும் பாட்டு இது.

’திண்டாடுதே ரெண்டு கிளியே கண்ணீரு ஒண்ணாச் சேந்து ஆறாப் போகுதே என்ன தலைவிதியோ இது என்ன விடுகதையோ’ என்கிற பாடலை இளையராஜாவின் குரலில், நாமே திண்டாட்ட மனத்துடன் தவிப்போம். கண்ணீர் நம் கன்னங்களிலும் வழியும். இப்படியாக, அத்தனைப் பாடல்களும் நம்முடைய மனமென்கிற எஃப்.எம்மில் இடைவிடாமல் ஒலிபரப்பாகிக்கொண்டே இருக்கின்றன.

படம் தோல்விப்படமாக இருக்கலாம். ‘ஆனந்தக்கும்மி’ டைட்டிலும் இளையராஜாவின் இசையில் மலர்ந்த அந்தப் பாடல்களும் நமக்குள் இன்றைக்கும் இனிமையைப் பரப்பிக்கொண்டே இருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE