உள்ளூர் வணிக வாகனங்களுக்கு கப்பலூர் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க திட்டம்

By KU BUREAU

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதால், மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட பல்வேறு சங்கங்கள் இணைந்த போராட்டக்குழு திட்டமிட்டுள்ளது.

திருமங்கலம் அருகே 4 வழிச் சாலையில் உள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்குள் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, இப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இதுவரை கோரிக்கை நிறைவேறவில்லை. மாறாக, அவ்வப்போது புதிதாக பல்வேறு கட்டணங்கள், கட்டுப்பாடுகளை சுங்கச்சாவடி நிர்வாகம் விதித்து வருகிறது.

இதற்கு எதிராக திருமங்கலம் நகர் வணிகர்கள், வாகன உரிமையாளர்கள், கப்பலூர் சிட்கோ தொழிலதிபர் கள், வாடகை வாகனங்களை இயக்குவோர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்த போராட்டக் குழு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

உள்ளூர் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் பயணித்த நிலையில், சுங்கச்சாவடி கெடுபிடி காரணமாக மாதாந்திர கட்டணமாக ரூ.340 வசூலிக்கப்படுகிறது. தற்போது இதற்குப் பதிலாக, மற்ற வாகனங்களைப் போல் கட்டணம் வசூலிக்கும் முயற்சி நடக்கிறது.

இந்த சூழலில் வரும் 10-ம் தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர சலுகைக் கட்டணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 50 சதவீதக் கட்டணத்தில் அனுமதிக்க சுங்கச் சாவடி திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. இது போராட்டக் குழு வினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போராட்டக் குழு அமைப்பாளர் ராஜா கூறுகையில், சுங்கச்சாவடி நிர்வாகம் 50 சதவீத கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வருகிறது. இதை அந்த நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. அப்படி வசூலித்தால் திருமங்கலம் பகுதியில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கும்.

இதனால் பொது மக்களுக்குத்தான் பொருளாதார இழப்பு. சிட்கோவில் பல நிறுவ னங்கள் மூடப்படும் சூழல் ஏற்படும். இதுகுறித்து போராட்டக் குழு ஆலோசித்து உரிய போராட்ட அறிவிப்பை வெளியிடும். மறியல், முற்றுகை என பெரிய அளவில் போராடுவோம். சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சுங்கச்சாவடி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும், என்றார்.

சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கூறுகையில், உள்ளூரைச் சேர்ந்த சொந்த வாகனங்க ளுக்கு தற்போதுள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வணிக வாகனங்களுக்கு தற்போதுள்ள சலுகையால், சுங்கச்சாவடிக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் வெளியூர் வணிக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கும் கட்டணத்தில், 50 சதவீதம் உள்ளூர் வணிக வாகனங்களுக்கு வசூலிக்கும் திட்டம் உள்ளது. இந்த புதிய திட்டம் எந்த தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியிட்டே புதிய கட்டணம் வசூலிக்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE