‘அபூர்வ’ நாயகன் ரஜினி!

By வி. ராம்ஜி

திட்டமிட்டு உச்சத்தை அடைவது ஒருவகை. திட்டமிடாமலே உச்ச இடத்துக்குச் செல்வது என்பது மற்றொரு வகை. பொதுவாகவே, நமக்கு வேகம் ரொம்பவே பிடிக்கும். அது காற்றாகட்டும், வண்டியாகட்டும்... வேகம் என்பது ஒரு அதிசயம். அப்படியொரு வேகத்தை அவரிடமிருந்துதான் முதன்முதலாகப் பார்த்தார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். புறப்படும்போது இருந்த அதே வேகத்துடன் இன்றைக்கும் நம்மை அசத்திக்கொண்டிருக்கிறார். அவர்... ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!

‘பேரைக் கேட்டதுமே ச்சும்மா அதிருதில்லே...’ - இது ‘சிவாஜி’ படம் வந்த பின்னர் பிரபலமான வசனம். ஆனால். ரஜினியின் பெயரைக் கேட்டதுமே, அந்தக் காலத்திலேயே... அதாவது ஆரம்ப காலத்திலேயே அதிர்ந்துதான் போனார்கள் ரசிகர்கள்.

கே.பாலசந்தர் தீர்க்கதரிசிதான். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் இழுத்துக்கொள்ளும் காந்தம் என்று ரஜினியைப் பார்த்த மாத்திரத்திலேயே அறிந்திருக்கிறார். சிவாஜி ராவ் எனும் காந்தம், பாலசந்தரை ஈர்த்ததால் ஆன பலன்... நமக்கெல்லாம் ‘ரஜினிகாந்த்’ எனும் சூப்பர் ஸ்டார் கிடைத்தார்.

அபூர்வ ராகங்கள்

’பைரவி வீடு இதானே...’ என்று அழுக்குக் கோட்டும் கலைந்த முடியும் அடர்த்தி தாடியும் கண்களில் மரணக் களையுமாக வந்து, கதவைத் திறந்த ரஜினியைத்தான், ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில், முதன்முதலாகப் பார்த்தார்கள் ரசிகர்கள். அந்த ‘பாண்டியன்’ பெரிய அளவில் அப்போது கவனம் ஈர்க்கவில்லை. அதேபோல், ‘பாக்ஸ் ஆபீஸ்’ எனும் கதவைத்தான் திறக்கிறோம் என ரஜினியேகூட அப்போது அறிந்திருக்கவில்லை.

குருநாதருடன் சிஷ்யர்கள்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ‘இவன்கிட்ட என்னமோ இருக்குய்யா. எங்கேயோ போகப்போறான் பாரு’ என்று கணித்தார். ‘மூன்று முடிச்சு’ படத்தின் நாயகனாக்கினார். அந்தப் பொல்லாத கேரக்டரில் வெளுத்து வாங்கியிருப்பார் ரஜினி. தலையை அடிக்கடி கோதிவிடுவது, தன் சிறிய கண்களால், கூர்மையாகப் பார்ப்பது, பரபரவென வேகமாக நடப்பது, சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிப்பது, அதை அப்படி இப்படி செய்து பற்றவைப்பது, அவரின் தமிழ் உச்சரிப்பு என சகலத்தையும் நேரில் பார்த்த பாலசந்தர், அவற்றையே திரையிலும் பண்ணவைத்தார்.

‘அவர்கள்’ படத்தின் ராமனாதன் கதாபாத்திரத்தில் ரஜினி ஒரு சைக்கோ கணவனாக, சாடிஸ்ட் மனிதராக நடித்திருப்பார். ‘ராமனாதன் மட்டும் கைல கிடைச்சா அவன் அவ்ளோதான்’ என்று படம் பார்த்த ஆண்களும் பெண்களும் சபதமே எடுத்தார்கள். அந்த அளவுக்கு மிரளச் செய்தார் ரஜினி.

16 வயதினிலே

’காயத்ரி’ படத்தில் மனைவியையே நீலப்படம் எடுத்து வீடியோவை விற்கும் மோசமான பாத்திரம். ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்திலோ, நண்பனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் பாத்திரம். ரஜினியால் பரட்டையாக வந்து மயிலைச் சீரழிக்கவும் முடிந்தது.

அதே ஸ்ரீதேவிக்கு அண்ணனாக ‘கவிக்குயில்’ படத்திலும் அட்வைஸராகவும் பாதுகாவலனாக ‘ப்ரியா’ படத்திலும் காதலனாக ‘தர்மயுத்தம்’ முதலான படங்களிலும் என எதுமாதிரியும் நடிக்க முடிந்தது. , ‘நான் அடிமை இல்லை’ படத்தில் ஸ்ரீதேவியின் காதல் கணவராக, சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத புகைப்படக் கலைஞனாக நடித்தார். அவற்றையெல்லாம் ஏற்று ரசித்தார்கள் ரசிகர்கள்.

முதலாளியே உலகம் என்று வாழ்ந்து, பின்னர் அந்த முதலாளியின் கெட்ட குணத்தால் பாதிக்கப்பட்டு அவரைக் கொல்லத் துடிக்கும் வேடத்தில் ரஜினி நடித்த ‘பைரவி’ அவரது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனை. ரஜினியின் வசூல் எகிறத் தொடங்கியது அப்போதுதான்.

பைரவி

‘ஆடு புலி ஆட்டம்’ படத்தில், கமலின் பெயர் மதன் என்றிருக்க, ரஜினியின் பெயர் ரஜினி என்றே அமைக்கப்பட்டிருக்கும். பின்னாளில், ‘இன்ஸ்பெக்டர் ரஜினி’ என்று தெலுங்கு டப்பிங் படங்கள் வரும் அளவுக்கு, ‘ரஜினி’ எனும் மூன்றெழுத்து, தமிழ்த் திரையுலகையும் ரசிகப் பெருமக்களையும் ஆக்கிரமித்தது.

கே.பாலாஜியின் ‘பில்லா’, ரஜினியை அடுத்த கட்டத்துக்குக் கைப்பிடித்து, கைத்துக்கி கொண்டு சேர்த்தது. அதில் அவரது ஸ்டைல் கண்டு ரசிகர்கள் மிரண்டு போனார்கள். கோட் - சூட்டில் ஜம்மென்று ரஜினி பில்லாவாக இருந்ததை இன்றைக்கும் மறக்கவில்லை ரசிகர்கள்.

பில்லா

‘நினைத்தாலே இனிக்கும்‘ படத்தில், அன்பரே...’ என்று ஒலித்து அலைக்கழிக்கும் கேசட்டையும் டேப் ரெக்கார்டரையும் சுமந்து திரியும் ரஜினியைக் கண்டு மகிழ்ந்த ரசிகர்கள், ‘முள்ளும் மலரும்’ படத்தில் அவதூறாகப் பேசியவனை அடித்து துவம்சம் செய்துவிட்டு, முடியைக் கோதிவிட்டபடி விறுவிறுவென நடந்துகொண்டே கைலியைக் கட்டுகிற லாவகத்தைக் கண்டு அசந்துபோயினர். நம் தெருக்களில் பார்த்த ஆவேசக்காரனாகவும் அன்பாளனாகவும் அவரைப் பார்த்து ‘அட...’ போட்டுக்கொண்டார்கள்.

கமலுடன் நடித்தால் இரண்டாமிடம். சிவகுமாரிடம் நடித்தார். அங்கேயும் இரண்டாமிடம். விஜயகுமாருடன் நடித்தார். அப்போதும் இரண்டாமிடம். ஜெய்கணேஷுடன் நடித்தார். அப்போதும் இரண்டாமிடம். ஆனால், இவர்களையெல்லாம் கடந்து, இவற்றையெல்லாம் கடந்து, ரஜினிகாந்த் கொஞ்சம்கொஞ்சமாக உச்ச நடிகராக உயர்ந்தார்.

எம்ஜிஆர் சிகரெட் பிடிப்பது போலவோ, மது அருந்துவது போலவோ நடிக்கமாட்டார். படத்தில் கெட்ட எம்ஜிஆர் இருந்தால் நல்ல எம்ஜிஆரும் இருப்பார். ஆனால், சிகரெட் பிடித்துக்கொண்டுதான் கைத்தட்டல்களை அள்ளினார் ரஜினி. மது அருந்திவிட்டு ஆட்டம் போட்டுத்தான் நம்மையெல்லாம் கிறங்கடித்தார்.

முள்ளும் மலரும்

கே.பாலசந்தரின் இயக்கத்தில் ‘தில்லுமுல்லு’வும் பண்ணினார். ‘தப்புத்தாளங்கள்’ படமும் செய்தார். மகேந்திரன் இயக்கத்தில், ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ என மூன்று படங்களுமே யதார்த்த ரஜினியின் எளிய அவதாரங்கள்.

ஒருபக்கம், ஏவி.எம்., இன்னொரு பக்கம் பஞ்சு அருணாசலம். மற்றொரு பக்கம் கவிதாலயா. இந்தப் பக்கம் பார்த்தால், சுரேஷ் சினி ஆர்ட்ஸ் கே.பாலாஜி. நடுவே எஸ்.பி.முத்துராமன் எனும் கமர்ஷியல் இயக்குநர். மற்றொரு பக்கம் தேவர் பிலிம்ஸின் படங்கள். முக்தா பிலிம்ஸின் படங்கள். இந்த இடத்தில்தான், ரஜினியின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்தது.

அண்ணாமலை

ரஜினி படம் என்றாலே வியாபாரமானது. ரஜினி படம் எடுக்கும் தயாரிப்பாளர் தொடங்கி, தியேட்டர் கேண்டீன் காரர்கள் வரைக்கும் லாபம் கொட்டியது. ‘முரட்டுக்காளை’ , ‘போக்கிரி ராஜா’ படங்களுக்குப் பின்னர் ரஜினியின் ‘ஆடியன்ஸ்’ அதிமானார்கள்.

சுஜாதா, ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அம்பிகா, ராதா, அமலா, நக்மா என அவருடன் நடிக்காத நாயகிகளே இல்லை. நடுவே, ‘ரஜினியின் ஆட்டத்தில் நானும் இருப்பேன்’ என்று இயக்குநர் ராஜசேகர் வந்தார். அவரால், கலகலவென ‘தம்பிக்கு எந்த ஊரு’ம் கொடுக்க முடிந்தது. அந்தப் பாம்பு, இன்று வரை படமெடுத்துக்கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கலகலப்பு, கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் ஆக்‌ஷன் என்கிற ஃபார்முலாவைக் கொண்டு, ‘படிக்காதவன்’, ‘தர்மதுரை’ என்று எடுத்ததெல்லாம் மாஸ் கலெக்‌ஷன் காட்டிற்று.

எம்ஜிஆர் - சிவாஜிக்குப் பிறகு கமல் - ரஜினி என்றானது. பின்னர், ரஜினி - கமல் என்றானது. இன்று வரை ரஜினி - கமல் ஆட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ‘நான் செஞ்சதையெல்லாம் கமல் செஞ்சிருக்கார். ஆனா கமல் தொட்டதையெல்லாம் நான் பண்ணினதில்ல. என்னால அப்படிலாம் பண்ணமுடியாது’ என்று ரஜினியே மனம் திறந்து சொன்னார். இருவரும் தங்களுக்கென தனிப்பாதையைப் போட்டுக்கொண்டார்கள்.

கமலும் ரஜினியும் இணைந்து நடித்த பல படங்கள் இருவருக்குமே பேரைச் சேர்த்தன. இருவரும் தனித்தனியே படங்கள் பண்ண, அவற்றில் பலவும் வெற்றிபெற்றன. தன் 100-வது படமாக தன் குருவின் சரிதம் படமாக வேண்டும் என ரஜினி நினைத்தது அவரின் குரு பக்தி; இறை பக்தி. இன்றைக்கும் கையில் செப்புக் காப்பு அணிவதற்கும் ராகவேந்திர வழிபாடு செய்வதற்கு மிகப்பெரிய கூட்டம் இருப்பதற்கும் ரஜினியே காரணம். தன் எல்லாப் படங்களிலும் ராகவேந்தர் உருவம் பொறித்த செப்புக் காப்பு அணிந்து நடித்திருப்பார் ரஜினி.

கே.பாக்யராஜுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’, எஸ்பிஎ்ம் இயக்கத்தில் கார்த்திக்குடன் ‘நல்லவனுக்கு நல்லவன்’, பிரபுவுடன் இணைந்து ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, பாலசந்தரின் சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘அண்ணாமலை’ என ரஜினி அடைந்ததெல்லாம் இமயமலை உயரம்.

நேரம் கிடைத்தால்... அல்லது நேரம் ஒதுக்கி இமயமலைக்குச் செல்லும் ரஜினியின் ஆன்மிகப் பயணமும் திரைப்பயணமும் உச்சத்திலேயே இருப்பதுதான் ரஜினி எனும் அதிசய நடிகரின் வாழ்க்கைப் பயணம்.

‘பாட்ஷா’வும் பாலகுமாரனின் வசனங்களும் விழாவில் அவர் பேசிய பேச்சும் ரஜினியின் திரைவாழ்வை, ‘பாட்ஷாவுக்கு முன் பாட்ஷாவுக்குப் பின்’ என கோடு போட்டு எல்லைகள் வைத்துக்காட்டின. எல்லைகளே இல்லாமல் இன்னும் ரஜினி வெற்றியை ருசித்தார்.

பாட்ஷா

நடுவே, இந்திப் பக்கம் போனார். அங்கேயும் அவரின் வேகம் கண்டு, மிரண்டுபோனார்கள். ‘பிளட் ஸ்டோன்’ எனும் ஆங்கிலப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

எம்எஸ்வி, இளையராஜா, சங்கர் - கணேஷ், தேவா, அம்சலேகா என்று ரஜினியின் பாடல்களை ஹிட்டாக்கிக் கொடுத்தவர்கள் பலருண்டு. எஸ்.பி.பி.யின் குரலுடன் ரஜினியின் ஆரம்பப்பாடல் இருந்தால், சும்மா கிழி கிழி என்று கூத்தாடினார்கள் ரசிகர்கள். ஏ.ஆர்.ரஹ்மான். அனிருத் என பலரும் ரஜினியின் மேஜிக்கை உள்வாங்கி பாடல்களைக் கொடுத்து இன்னும் அசத்த, இந்தக் காலத்திலும் ரஜினி வேல்யூ எகிறிக்கொண்டே இருக்கிறது.

ரஜினி அரசியல் வசனம் பேசினால், இன்னும் விசில் பறந்தது. ‘அரசியலுக்கு வருவாரா மாட்டாரா’ என்று கேள்வி எழுந்தன. ‘வருவார்’ என்று ஒருபிரிவினரும் ‘வரமாட்டார்’ என்று இன்னொரு பிரிவினருமாக ரஜினி ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்தினார்கள். அரசியல் தொடர்பான அவரது நிலைப்பாடுகளும் பேச்சுக்களும் அவருக்குச் சற்றே பின்னடைவைத் தந்தது தனிக்கதை!

படையப்பா

’முத்து’ ஜப்பானுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ‘அருணாசலம்’ ‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்’ என்று திரும்பத்திரும்பச் சொன்னார்கள் ரசிகர்கள். ‘படையப்பா’ பட்டையைக் கிளப்பியது. ஷங்கரின் ‘சிவாஜி’ ரஜினியை இன்னொரு அவதாரமெடுக்க வைத்தது. அந்த வகிடெடுத்த பழைய ரஜினிதான் ஷங்கருக்கு மிகவும் பிடிக்கும் போல! அது சரி... அந்தப் பழைய ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது?!

கமல் நடிக்க வேண்டிய ‘ரோபோ’ ரஜினிக்குப் போனது. ‘எந்திரன்’, ‘2.0’ என்று ரஜினி இந்திய அளவில் வசூல் சக்கரவர்த்தியானார். எம்ஜிஆரே தொடாத வசூல் ராஜாவின் சாதனை இது என்று பத்திரிகைகளும் ஊடகங்களும் கொண்டாடின.

100-வது படமான ‘ராகவேந்திரர்’ ஓடாதது பற்றி கவலைப்படாத ரஜினி, மீண்டும் இமயமலைப் பயணத்தின் மூலம் கிடைத்த மற்றொரு குருவான ‘மகா அவதார் பாபாஜி’யின் அருளையும் புகழையும் சொல்லுவிதமாக, ‘பாபா’ பண்னினார். நஷ்டத்தை ஏற்றார். விநியோகஸ்தர்களை அழைத்து நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக பணமும் கொடுத்தார். இதுவும் ரஜினி ஸ்டைல்தான்.

சந்திரமுகி

எப்போதும், எல்லா படங்களிலும் பயன்படுத்தும் விதமாக ‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ எனும் டைட்டில், ‘அண்ணாமலை’யில் தொடங்கி இன்று வரை வந்துகொண்டிருக்கிறது. தமிழ்த்திரையுலகில், ஒரு நடிகரின் பெயர் டைட்டிலில் போடும்போது, டெம்ப்ளேட்டாக இப்படி ஒரு டைட்டில் வருவது எந்த நடிகருக்கும் வாய்க்காதது.

இந்தப் பட்டமும் சும்மா ஒன்றும் கிடைத்துவிடவில்லை. மிகப்பெரிய அசுர உழைப்புக்குக் கிடைத்த பலன் இது. தனித்துவமான ஸ்டைலுக்கும் அவரின் வேகமான நடைக்கும் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டுதான் என்றாலும் அவரின் தேன்மிட்டாய் பேச்சுக்கும் முக்கியமாய் அந்தக் கண்களுக்குமாய் கிடைத்த பரிசு... சூப்பர் ஸ்டார் பட்டம்!

1975 ஆகஸ்ட் 15-ம் தேதி ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியானது. அந்த பாண்டியன் பெயர், பின்னாளில், அலெக்ஸ் பாண்டியன் என்றாகி ‘மூன்று முகம்’ படத்தில் கலக்கியெடுத்தது. ‘பாண்டியன்’ என்ற பெயரிலே படம் வந்து பாடல்கள் ஹிட்டாகின.

ரஜினி நமக்குக் கிடைத்து, தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்து, இந்தியத் திரையுலகிற்கு கிடைத்து, 47 ஆண்டுகளாகின்றன. ‘ஜெயிலர்’ படத்தில் தலைவர் என்ன மேஜிக் செய்வார் என்று நகம் கடித்துக் காத்துக்கொண்டிருக்கிறான் ரசிகன். இன்னும் அடுத்தடுத்து படங்கள் வந்தாலும் அதற்கும் கால் கடுக்க நின்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். ஏனென்றால், தமிழ்த்திரையுலகில் ரஜினி அதிசய நாயகன்... அபூர்வ நாயகன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE