நெகட்டிவ் க்ரூப் ரத்தம்: பிரச்சினையும் தீர்வுகளும்!

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

"டாக்டர்... என்னோட ப்ளட் க்ரூப் ‘பி நெகட்டிவ்’. அவரோட க்ரூப் ‘ஓ பாசிட்டிவ். இதனால குழந்தைக்குப் பாதிப்பு வரும்னு சிலர் பயமுறுத்தறாங்க. அது உண்மையா? அப்படின்னா என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்க எடுக்கணும்..?”

- கருத்தரித்த பெண்களில் நெகட்டிவ் ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கேட்கும் முதல் கேள்வியே இதுவாகத்தான் இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஏன் ரத்த வகைகள் அதிகம் பேசப்படுகின்றன? அதிலும் பாசிட்டிவ் - நெகட்டிவ் வகைகளில் வேறுபாடுகள் இருந்தால் உண்மையிலேயே அது குழந்தையைப் பாதிக்குமா? அதற்கான தீர்வுகள் என்ன? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு ரத்தம் பற்றிய பொதுவான தகவல்களைச் சற்று நினைவுபடுத்திக்கொள்வோம்.

நம் உடலில் ஓடும் ரத்தத்தில் A, B, O, AB என நான்கு க்ரூப்கள் உள்ளன. இந்த நான்கு வகைகளிலும் ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் D ஆன்டிஜென் எனும் உபபொருள் இருந்தால் அதை Rh பாசிட்டிவ் என்றும் அப்படி D ஆன்டிஜென் இல்லாதவற்றை Rh நெகட்டிவ் என்றும் இரு பிரிவுகளாகப் பிரித்து, மொத்தம் நான்கு வகையும் எட்டுப் பிரிவுகளுமாக நமது ரத்தம் வகைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் நன்கறிவோம். பாசிட்டிவ் , நெகட்டிவ் என ரத்தத்தின் இந்த இரு வகைகளில் இவ்வுலகின் பெரும்பகுதி மக்கள் (85 சதவீதம்) பாசிட்டிவ் வகையைச் சார்ந்தவர்கள்தான் என்றாலும், குறைவான எண்ணிக்கையில் உள்ள நெகட்டிவ் வகையினர் இரு சமயங்களில் அதிக கவனம் பெறுகின்றனர்:

1. ரத்ததானம் அளிக்கும்போது அரிதான வகை என்பதாலும்...

2. கர்ப்பம் தரிக்கும்போது குழந்தையின் நலன் கருதியும்...

ஆக, கர்ப்பிணிகளிலும் இந்த Rh நெகட்டிவ் உள்ள தாய்தான் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர். பொதுவாக இருவரும் நெகட்டிவ் வகை என்றாலோ, அல்லது தாய் பாசிட்டிவ், தந்தை நெகட்டிவ் வகை என்றாலோ பிரச்சினைகள் எதுவும் இருப்பதில்லை. ஆனால், தாய் Rh நெகட்டிவாகவும் தந்தை Rh பாசிட்டிவாகவும் இருக்கும்பட்சத்தில்தான் அதிக கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் தாயின் ரத்தம் Rh நெகட்டிவாக இருந்தாலும், பிறக்கும் குழந்தை Rh பாசிட்டிவாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதால். அதாவது நெகட்டிவ் வகை அம்மாவின் கருவறைக்குள் பாசிட்டிவ் வகைக் குழந்தை இங்கு வளர்கிறது.

தாயின் கருவறைக்குள்ளேயே குழந்தை இருந்தாலும், குழந்தைக்கு தேவையான அனைத்தும் தாயிடமிருந்து தொப்புள்கொடி வழியாக மட்டுமே செல்வதால், தாயின் ரத்தமும் சேயின் ரத்தமும் ஒன்றாக எப்போதும் கலக்க வாய்ப்பில்லை என்பதால் பெரும்பாலும் இதனால் சிக்கல்களும் இருப்பதில்லை. ஆனால், தாய்க்கு கருச்சிதைவு ஏற்படும்போதோ அல்லது கருப்பைக்குள் மேற்கொள்ளப்படும் சில தேவையான பரிசோதனைகளின்போதோ (amniocentesis/ chorion villus sampling) அல்லது பிரசவத்தின்போதோ இந்த தாய் சேய் ரத்தங்கள் ஒன்றாகக் கலக்க வாய்ப்புகள் நேரும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. இந்த சமயத்தில், தாயின் நெகட்டிவ் ரத்தத்துடன் (Rh-ve) அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத பாசிட்டிவ் ரத்தம் (Rh+ve) கலக்க முயலும்போது, பாசிட்டிவ்விற்கு எதிராக ‘ஆன்டிபாடிகள்’ தாயின் உடலில் உருவாகிறது.

இந்த ஆன்டிபாடிகள் தாய் வழியாக குழந்தையின் உடலுக்குச் செல்லும்போது, அது குழந்தையின் பாசிட்டிவ் ரத்தத்திற்கு எதிராக இருப்பதால், குழந்தையின் உடலில் எதிர்வினைகளை ஏற்படுத்தி குழந்தையை பாதிக்கிறது. இதையே Rh பொருந்தாமை என்று அழைக்கும் மருத்துவர்கள், இந்தப் பொருந்தாமையால் குழந்தை வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படலாம் என்பதுடன்... சமயங்களில் அடுத்தடுத்த குழந்தை இழப்பையும்கூட இது ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.

உண்மையில் தாயின் ரத்தம் Rh நெகட்டிவாக இருக்கையில், 0.1 ml அளவு Rh+ve ரத்தம் கலக்கும் வாய்ப்பிருந்தால்கூட அது தாயின் உடலில் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, ஆர்ஹெச் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆனால், இப்படி ஆரம்பத்தில் உருவாகும் உடனடி IgM ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடியைத் தாண்டாது என்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு உடனடி பாதகங்கள் எதுவும் இருப்பதில்லை.

அதுவே, 6 - 12 வாரங்களுக்குப் பிறகு தாயிடம் உருவாகும் IgG வகையான ஆன்டிபாடிகள் அப்படி இருப்பதில்லை. அவை, நஞ்சுக்கொடியை எளிதாகக் கடந்து, வளரும் குழந்தையின் சிவப்பணுக்கள் வரை சென்று நேரடியாகத் தாக்குவதால் குழந்தைக்கு hemolysis எனும் ரத்தச்சிதைவு ஏற்படுகிறது. இந்த ரத்தச்சிதைவின் காரணமாக, வளரும் குழந்தைக்குக் கருவிலேயே ரத்த சோகை, காமாலை, மஜ்ஜைத் தூண்டல், இருதய பாதிப்பு, நரம்புகள் பாதிப்பு, hydrops எனும் உடலெங்கும் நீர்த்தேக்கம் எனத் தொடங்கி, வயிற்றுக்குள்ளேயே உயிரிழப்பு வரை பல்வேறு பாதிப்புகளை இந்த Rh பொருந்தாமை ஏற்படுத்திவிடுகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், முதல் பிரசவத்தின்போது பிறக்கும் குழந்தைக்கு இந்த Rh பொருந்தாமை ஆன்டிபாடிகளால் பாதிப்பு பெரிதளவில் இருக்காதென்றாலும், அதே தாய் மீண்டும் கருவுறும்போது, அதே அளவு ரத்தம் கலந்தாலும், நினைவுத்திறன் காரணமாக IgG ஆன்டிபாடிகள் பெருமளவு உற்பத்தியாவதால் இரண்டாவது குழந்தைக்கு மேற்சொன்ன பாதிப்புகளையெல்லாம் இவை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

கேட்க சற்றே அச்சமூட்டுவதாக இருந்தாலும், இந்த பாதிப்புகளைத் தவிர்க்க நம்மிடம் வழியுள்ளது என்பதுதான் இதிலுள்ள மிகப்பெரிய ஆறுதல். 1937-ம் ஆண்டு, கார்ல் லேண்ட்ஸ்டீனர் ரத்த வகைகளைக் கண்டறிந்தபோதே அதன் பாசிட்டிவ் நெகட்டிவ் பிரிவுகளும் கண்டறியப்பட்டன என்பதுடன் ஆர்ஹெச் பொருந்தாமையும் அதைத் தவிர்க்கும் முறைகளையும் அப்போதே தீவிரமாகத் தேடப்பட்டன. என்றாலும், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பின் வரமாகக் கிடைத்ததுதான் Anti D எனப்படும் இம்யூனோ க்ளோப்யூலின் ஊசி மருந்து. அன்றிலிருந்து இன்றுவரை உலகெங்கும் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ள இந்த இம்யூனோ க்ளோப்யூலின் மருந்து, தாயின் ரத்தத்தில் உள்ள Rh D ஆன்டிஜென்களை அழித்தும், அதன் வீரியத்தைக் குறைத்தும் செயல்படுவதால், புதிதாக ஆன்டிபாடிகள் உற்பத்தி தடைபெறுகிறது, குழந்தையின் பாதிப்புகளும் தவிர்க்கப்படுகின்றன என்கிறது மருத்துவ உலகம்.

பொதுவாக, கர்ப்பம் உறுதியானதும் பரிசோதனையின் மூலம் தாயின் ரத்த வகையை உறுதிசெய்துகொள்ளும் மருத்துவர்கள் தாயின் ரத்த வகை நெகட்டிவ் என்று தெரிந்ததும், தந்தையின் ரத்த வகையையும் பரிசோதிக்கிறார்கள். இப்படி தாய் நெகட்டிவ், தந்தையின் ரத்தவகை பாசிட்டிவ் என்று தெரிந்தவுடன் ஆர்ஹெச் பொருந்தாமையைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஆரம்பித்துவிடும் மருத்துவர், தாய்க்கு ஆரம்ப கர்ப்ப காலத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ, அல்லது பனிக்குட நீர் பரிசோதனை, உள்வளரும் கருவிற்குச் சிகிச்சை போன்ற பிரத்யேகப் பரிசோதனைகளின்போதும், பிரசவத்திற்குப் பின்பும் Anti D இம்யூனோ க்ளோப்யூலின் ஊசியைத் தாய்க்கு வழங்குகிறார்.

அத்துடன் கருத்தரித்த ஏழு மாதங்களுக்குப் பிறகு, Coomb's பரிசோதனை எனும் பிரத்யேக ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரிசல்ட் நெகட்டிவ்… அதாவது அதுவரை தாய் சேய் ரத்தங்கள் கலந்துவிடவில்லை என்றால் முன்னெச்சரிக்கையாக Anti D இம்யூனோ க்ளோப்யூலின் ஊசி பிரசவத்திற்கு முன்பே தாய்க்கு வழங்கப்படும். அத்துடன் பிரசவத்திற்குப் பின்பு குழந்தையின் ரத்த வகையைப் பரிசோதித்து அது பாசிட்டிவாக இருந்தால், அடுத்த கர்ப்பம் பாதிக்காமலிருக்க பிரசவம் முடிந்த 72 மணிநேரத்திற்குள் மற்றொரு முறையும் அதே ஊசி தாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த 72 மணிநேரத்திற்குள் வழங்கப்படும் ஊசியானது மீண்டும் ஒருமுறை நிகழக்கூடிய ஆன்டிஜென் ஆன்டிபாடி எதிர்வினைகளைப் பெருமளவு தவிர்க்கிறது.

அதே சமயம் Coomb's பரிசோதனை பாசிட்டிவ் என்றால், குழந்தையின் வளர்ச்சி மற்றும் இதர பாதிப்புகள் ஸ்கேனிங், டாப்ளர் ஸ்கேனிங் மூலமாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவைப்படும்போது குழந்தைக்கு கர்ப்பகாலத்திலேயே ரத்த மாற்று செய்வதும், அதேபோல பிரசவமும் முன்கூட்டியே தூண்டப்படுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இவை மட்டுமன்றி, குழந்தை பிறந்த பிறகும் குழந்தையின் ரத்த அளவு, காமாலை அளவு ஆகியன தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஃபோட்டோதெரபி, ரத்த மாற்று உள்ளிட்ட பிரத்யேக சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

ஆர்ஹெச் பொருந்தாமை எனும் சிறியதொரு பிரச்சினை பெரியதொரு பாதிப்பை அடுத்தடுத்து ஏற்படுத்தக்கூடுமென்றாலும்... தகுந்த பரிசோதனைகள், தகுந்த சிகிச்சைகள், அதைவிட முக்கியமாக அதற்கான விழிப்புணர்வு போன்றவை அந்தப் பாதிப்புகளை வரவிடாமலேயே செய்துவிடும் என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடரும்..!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE