விமானத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்தேன். சதுரங்க ஆடை உடுத்திய வானத்தைப் பார்த்தேன். வெள்ளை கட்டங்கள் ஒளிர்ந்தன. அதன் மினுமினுப்பில் கறுப்பு கட்டங்கள் கவிதை பாடின. மனதை ஒருமுகப்படுத்தும் மாயம் நிகழ்த்தின. வெயிலில் காய்ந்த கண்களின் காயம் நீக்கின. நரம்புகளுக்குள் தூக்கத்தைச் செலுத்தி கண்களை மூட வைத்தன. தன் இயல்பான வேகத்தில் மூச்சுக்காற்று இயங்கியது. தூக்கம் கலைந்தபோது, மேகத்துக்குமேலே பறந்துகொண்டிருந்தோம்.
நல்லவர்கள் சூழ் உலகு
கடந்த சில நாட்களாக, ஆங்காங்கே எனக்கு உதவியவர்களை நினைத்துப் பார்த்தேன். குறிப்பாக, நான்டெஸ் நகரில் நான் சந்தித்த மூவரின் அழகிய குணம் மனதுக்குள் மலர் சொரிந்தது.
முந்தைய நாள், லூயி லெவேயின் ஊரில் இருந்து புறப்பட்டபோது, நான்டெஸ் புறநகர் பகுதியில் இறங்கினேன். நகருக்குள் செலவதற்காக, தொடர்வண்டி நிலையம் சென்றபோது அங்கிருந்த இரண்டு நடைமேடைகளில், எனக்கான தொடர்வண்டி வரும் நடைமேடை எதுவென தெரியாததால், ஓர் இளம் பெண்ணிடம் விசாரித்தேன். “எதிரில் இருக்கும் நடைமேடைக்குப் போங்கள்” என்று சொல்லி முடிப்பதற்குள், தொடர்வண்டி வந்துகொண்டிருப்பதைக் கவனித்தவர், “அந்த வண்டியில் போகலாம். சீக்கிரம் அந்தப் பக்கம் செல்லுங்கள்” என்றார். “பயணச்சீட்டு வாங்கும் இடம் எது?” என்று கேட்டேன். “அதோ இருக்கிறது” என்றார். நான் திரும்பியதும் “பொறுங்கள்” என சொல்லிவிட்டு, விரைவாக தன் பையை திறந்து தன்னிடமிருந்த பயணச் சீட்டுகளில் ஒன்றைக் கொடுத்து, “வேகமாகச் செல்லுங்கள்” என்றார். ஓடிப்போய், வண்டியில் ஏறினேன். வண்டி புறப்பட்டுச் செல்லும்போது, திரும்பி டாட்டா காட்டி நன்றி சொன்னேன். புன்னகை பூத்தது பூ முகம்.
மற்றொரு தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி, பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று, அங்கு நின்ற இளைஞர்களிடம் முகவரியைக் காட்டினேன். விடுதிக்கு அருகில் செல்லும் நகர பேருந்தின் எண் சொன்னார்கள். அவர்களைப் பார்க்க அச்சமாகவும் இருந்தது. பேருந்து எண்கள் இருந்த பலகையைப் பார்த்து உறுதிசெய்துகொண்டு தள்ளி மற்றவர்களோடு நின்றேன். இளைஞர்கள் பக்கம் திரும்பவே இல்லை. பேருந்து வந்ததும், முன் வாசல் வழியாக வேகமாக ஏறினேன். நான் ஏறியதைக் கவனிக்காத இளைஞர்கள், என்னைக் காணாமல் அங்கும் இங்கும் விழிகளால் தேடினார்கள். உள்ளே நான் இருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்து, புன்னகையுடன் கை காட்டினார்கள். அவர்கள் நல்லவர்கள்.
விடுதிக்கு முந்தைய வீதியில் இறங்கி நடந்தேன். விடுதியின் அழைப்பு மணியை பலமுறை அழுத்தினேன். யாருமே வரவில்லை. வீதியில் சிறிய மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்த சிறுவன், என் அருகில் அவனாக வந்தான். “இந்தப் பக்கம் திறக்க மாட்டார்கள். மற்றொரு வாசல் அடுத்த திசையில் இருக்கிறது” என்றவன், பிஞ்சுக் கால்களால் எனக்கு முன்னால் வண்டி ஓட்டிச் சென்றான். பின் தொடர்ந்தேன். வாசல்வரை வந்து காட்டிவிட்டு திரும்பிச் சென்றான்.
ஞானம் பெற்ற இடம் தேடி
விமானம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தை அடைந்தது. மின்னொளி பரவிய வீதியில் பயணித்து விடுதிக்குச் சென்றேன். 3 இரவுகள் ஒரே பகுதியில் தங்க வேண்டியிருந்ததால், தனி அறையில் தங்குவதுதான் என் முதல் திட்டம். ஆனால், Backpackers விடுதியில் தங்கினால் ஏறக்குறைய 20 ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம் என்பதை அறிந்து, தனி அறை எண்ணத்தைக் கைவிட்டிருந்தேன். நான் சென்றபோது, அறையில் ஏற்கெனவே 5 பேர் இருந்தார்கள். 6-வது கட்டில் எனக்கானது. நன்கு தூங்கினேன். வெளிச்சம் விழித்திரையை வருடியபோது எழுந்தேன். 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்ரேசா மலை நகரம் நோக்கி புறப்பட்டேன்.
பாளையம்கோட்டையில் செயின்ட் சேவியர், திருச்சியில் செயின்ட் ஜோசப், சென்னையில் லயோலா கல்லூரிகள் இருப்பதை நாம் அறிவோம். அந்தந்த நகரின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இக்கல்லூரிகளை இயேசு சபை துறவிகள் நடத்துகிறார்கள். இந்தச் சபையைத் தோற்றுவித்த இஞ்ஞாசியார், மன்ரேசா குகையில்தான் ஞானம் பெற்றார்.
போர்வீரரை மனிதராக்கிய புத்தகம்
ஸ்பெயின் நாட்டில் பிறந்த இஞ்ஞாசியார் லயோலா அரண்மனையிலும், பம்பலூனா கோட்டையிலும் தன் இளமைக் காலத்தைக் கழித்தார். அவர் சிறந்த போர்வீரராகவும் திகழ்ந்தார். எதிரியுடன் போரிட்டபோது, காலில் பீரங்கி குண்டு தாக்கி காயப்பட்டார். நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தவர், தனிமையில் தவித்தார். பொழுதுபோக்குவதற்காக, ‘கிறிஸ்துவின் வாழ்க்கை’ மற்றும் ‘புனிதர்களின் வாழ்க்கை வரலாறு’ எனும் புத்தகங்களை அவருக்கு வாசிக்க கொடுத்தார்கள். புகழ், பொருள், போர், வெற்றி என்று திரிந்தவரை இரண்டு புத்தகங்களும் யோசிக்க வைத்தன. வாழ்வின் நோக்கத்தை மாற்றின. நலமடைந்த பிறகு, ஜெருசலேமுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். ஸ்பெயின் திரும்பியதும் 4,055 அடி உயரத்தில் மொன்செராட் மலை உச்சியில் உள்ள அன்னை மரியாள் கோயிலுக்குச் சென்றார்.
அன்னைக்கு போர் வாளைக் காணிக்கையாகச் செலுத்தினார். உயர்குல ஆடையை எளியவரிடம் கொடுத்தார். 1522-ல் மன்ரேசா சென்றவர் ஏறக்குறைய ஓர் ஆண்டு சிறு குகைக்குள் தங்கினார். அக்காலத்தில் அவருக்குள் நிகழ்ந்த, அவர் கண்ட, அனுபவித்த ஆன்மிக எழுச்சியை எழுதினார். அவை, ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ நூலாக வெளிவந்தது. அது சிறந்த ஆன்மிக புத்தகங்களுள் ஒன்றாக இன்றளவும் விளங்குகிறது.
நகரின் முகவரி
நகரின் நாகரிக வளர்ச்சியை ஊடறுத்து கிராமங்களைத் தழுவிச் சென்ற தொடர்வண்டி, செந்நிற பாறைகளில் ஊன்றி நிற்கும் மரங்களை அசைத்துவிட்டு விரைந்தது. வெயிலோடு விரல் நீட்டும் கிளைகளைப் பார்த்துக்கொண்டே மன்ரேசாவில் கால் வைத்தேன். சிற்றுந்தில் ஏறி மற்றோர் இடத்தில் இறங்கி மலைப்பாதையில் உயரே நடந்தேன். நகரின் பெருமையாகவும், ‘கட்டலோனியன் கோதிக்' கட்டிடக்கலையின் மாணிக்கமாகவும் திகழும் புனித மரியாள் கோயிலுக்குச் சென்றேன். தொடக்கத்தில், உரோமையர்கள் கட்டிய கோயில் இந்த இடத்தில் இருந்துள்ளது. ஆனாலும், உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பிறகு, ஏறக்குறைய 1322-ல் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கட்டிடக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு ஏற்ப சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
கோயில் தொடர்பான அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு, கோயிலுக்குள் சென்று வியந்து பார்த்தேன். இயேசு மற்றும் அன்னை மரியாவின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் ஓவியங்கள் இருந்தன. அருகில் செல்ல இயலாதவாறு, வேலி போட்டிருந்தார்கள். வேலிக்கு முன்பாக இரண்டு சிங்கங்கள் சிலைகளாகப் படுத்திருந்தன. இருபக்கமும் இருந்த தூண்களில் துவாரபாலகர் போன்ற சிற்பங்கள் இருந்தன. ‘அட!’ என்று சொல்லி தொட்டுப் பார்த்தேன். ஏனென்றால், இந்து சமய கோயில் வாயில்களின் இரு புறங்களிலும் இதற்கு முன்பு துவாரபாலகரைப் பார்த்திருக்கிறேன். முதல்முறையாகக் கிறிஸ்தவ கோயிலில் பார்த்தேன்.
குகைக்குள் ஞானம்
தனித்து விழித்திருந்து இஞ்ஞாசியார் ஜெபம் செய்த, மாற்றமிகு வாழ்வுக்காக உறுதியேற்ற குகைக்கு நடந்தே சென்றேன். குகையுடன் சேர்த்து 18-ம் நூற்றாண்டின் மத்தியில் எழுப்பப்பட்ட கோயில் முன் நின்றேன். கோயிலின் முகப்பு சுவரில் இஞ்ஞாசியார் சுரூபம் உள்ளது. வளாகத்தில் இருக்கும் உயரமான மரம் சுரூபத்தின் மேல் நிழல் நீவியது. கோயிலுக்குள் நுழைந்ததும் இடது புறம் சென்று, வலதுபுறம் முன்னோக்கி நடந்தால் குகையைப் பார்க்கலாம்.
குகைக்குள் நடந்தபோது, ஜோசப் சன்யர் (1720) செதுக்கிய மெடல் வடிவத்திலான சிற்பங்களைப் பார்த்தேன். அதில், இஞ்ஞாசியார், ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ நூல் எழுதியது, மருத்துவமனையில் நோயுற்றிருந்தது, பார்சிலோனாவில் ஜெபித்தது, உரோமைக்குச் செல்லும் வழியில் காட்சி கண்டது உள்ளிட்ட 9 முக்கிய நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. குகைக்குள் சென்று, சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு மன அமைதியுடன் திரும்பினேன்.
மலை மேலொரு பொழுது
நகருக்குள் நடந்து, மதிய உணவு சாப்பிட்ட பிறகு, மற்றொரு தொடர்வண்டி நிலையத்திலிருந்து மொன்செராட் புறப்பட்டேன். மலையின் இடுப்பைச் சுற்றி பயணிக்கும் உணர்வு. வெயிலில் கண்கூச வைத்த பாறைகளையும். தூரத்தில் சாம்பல் பூத்த வானத்தையும் பார்த்துக்கொண்டே சென்றேன். நிலையத்தில் இறங்கிய பிறகு உச்சிக்குச் செல்ல வண்டி மாற வேண்டும். இரண்டு வழிகள் உள்ளன. கம்பிவட ஊர்தி அல்லது ரேக் ரயில்வே (Rack Railway). நாம் தேர்வு செய்வதற்கு ஏற்ப அடுத்தடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும். நான் ரேக் ரயில்வேயில் பயணித்தேன். ஆலயத்துக்குள் சென்று தரிசித்தேன்.
ஸ்பெயினில் கோடைகாலம் மிகக் கொடூரமாக இருக்கும் என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான். ஆனால் முதல்நாளே, நாக்கு தள்ளிவிட்டது. கடந்த 3 வாரங்களாக அனுபவிக்காத வெப்பத்தை அனுபவித்தேன். அதனால், சுற்றிப் பார்க்கும் ஆர்வம் தடைபட்டது. இன்னும் இரண்டு நாட்கள் என்ன செய்ய காத்திருக்கிறதோ என்னும் கலக்கத்துடன், அமர்ந்து இளைப்பாறிவிட்டு பார்சிலோனா திரும்பினேன்.
(பாதை விரியும்)
பெட்டிச் செய்தி:
நல்லதோர் அனுபவம்
மொன்செராட் கோயிலுக்கு உள்ளே, நீண்ட வரிசையில் நடந்தபோது, எனக்கு முன்னே நடந்த இளைஞர்கள் சிலர், சுவரில் இருந்த புனிதர்களின் படங்களைச் சுட்டிக்காட்டி, பள்ளி நாட்களில் தாங்கள் படித்ததை நினைவுபடுத்தி பேசிக்கொண்டிருந்தார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான் சென்றுள்ளதால், இப்படி ஆர்வமாக பேசும் இளைஞர்கள் நிச்சயம் பிலிப்பைன்ஸ் நாட்டினராகத்தான் இருக்க வேண்டும், என நினைத்துக்கொண்டு, “நீங்கள் எந்த நாடு?” என்று கேட்டேன். “பிலிப்பைன்ஸ்” என்றார்கள். மகிழ்ந்தேன். “குழுவாக நிழற்படம் எடுத்துத் தரவா?” என்று கேட்டேன். சம்மதித்தார்கள். அப்போதுதானே, எனக்கும் எடுப்பார்கள். நினைத்து போலவே நடந்தது.