40 ஆண்டுகளாக நம் மனதில் நிற்கிறான் ‘சகலகலா வல்லவன்’!

By வி. ராம்ஜி

’இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று ஒரு சில படங்களைக் கேட்கலாம். ‘இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்?’ என்று வெகு சில படங்களை மட்டுமே கேட்கமுடியும். அப்படி பல முறை பார்த்துப்பார்த்து ரசித்த படங்கள் என்று தமிழ் சினிமாவில் பட்டியல் போட்டால், அதில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் இடமுண்டு. அந்தப் படம்... ‘சகலகலாவல்லவன்’.

’பாகுபலி’ க்கு முன்பு வரை பிரமாண்டம் என்றால் ஷங்கர் படங்களைக் குறிக்கும். ஆனால் எல்லாக் காலத்திற்கும் பொதுவாக பிரமாண்டம் என்றால் அது ஏவி.எம். தயாரித்த படங்களாக இருக்கும். அப்படியொரு பொருட்செலவில், மிரட்டலான சண்டைக்காட்சிகளெல்லாம் இணைத்து, பாடல்களுக்கு அதிக நவீனத்துடன் அரங்குகள் அமைத்து, முக்கியமாக... குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து பார்க்கும்படியான படத்தையும் தரும் நிறுவனம் அது. அந்த நிறுவனம் கொடுத்த பிரமாண்ட படங்களில் ஒன்றுதான் ‘சகலகலா வல்லவன்’.

பாபுவின் ஒளிப்பதிவு, விட்டலின் எடிட்டிங், பஞ்சு அருணாசலத்தின் கதை, வசனம், ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் என்று டைட்டில் வந்தால், ஒன்று பஞ்சு அருணாசலம் தயாரித்த படமாக இருக்கும். அல்லது ஏவி.எம். படமாக இருக்கும். இந்தக் கூட்டணியுடன் இளையராஜாவின் இசையும் வாலியின் பாடல்களும் இணைந்து, கமல் நடிப்பில் உருவானதுதான் ‘சகலகலா வல்லவன்’.

சினிமாவுக்கு, அதிலும் பொழுதுபோக்கு சினிமாவுக்கு ஒரு வரியைக் கொண்டு கதை எழுதிவிடலாம். தங்கையைக் கெடுத்தவனை திருத்தி தங்கையை அவனிடம் சேர்க்கிறான் நாயகன். கர்வத்துடன் திரியும் பணக்கார நாயகியின் கொட்டத்தை அடக்கி அவளைத் திருமணம் செய்துகொண்டு அவளைத் திருத்துகிறான் நாயகன். இந்த இரண்டு வரிகளையும் வைத்துக்கொண்டு, இணைத்து, குழைத்து, திரைக்கதையாக்கிக் கொடுத்திருப்பதுதான் பஞ்சு அருணாசலத்தின் வியாபார ஜாலம்.

இன்றைக்குப் பல படங்களில் அம்மா வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிற நடிகை துளசியின் அறிமுகப் படம் இது. கமலின் தங்கை வள்ளியாக அறிமுகமாகியிருப்பார். கமலின் பெயர் வேலு. அநேகமாக, இந்தப் படத்துக்குப் பிறகு ‘சிங்கார வேலன்’, ‘தேவர் மகன்’, ‘நாயகன்’ (சக்திவேலு நாயக்கர்) என பல படங்களில் ‘வேலு’ எனும் பெயர் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

கமலின் ‘சகலகலா வல்லவன்’

கிராமத்தில் வாழ்கிற கமலின் தங்கை துளசி. அந்த ஊர் பணக்கார பண்ணை புஷ்பலதா. அவரின் கணவர் வி.கே.ராமசாமி. நியாயதர்மத்துக்குக் கட்டுப்பட்டவர். இவர்களின் மகன் ரவீந்தர். மகள் அம்பிகா. கமலுக்கும் அம்பிகாவுக்கும் அடிக்கடி நடக்கும் மோதலுக்கு கமலின் தங்கை துளசியைப் பழிவாங்குவார் ரவீந்தர். நியாயம் கேட்கப் போனால், எகத்தாளம் பேசுவார். ‘என் தங்கச்சிக்கு நீதான் புருஷன். இது சத்தியம்’ என்று சவால் விடுவார். அத்துடன் இடைவேளை.

இதன் பிறகு அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருக்கும் கமலும் துளசியும் வி.கே.ராமசாமியின் குடும்பத்துக்குப் பழக்கமாவார்கள். இதில், துளசியைப் பார்த்து ரவீந்தர் ஜொள்ளுவிட, கமலைப் பார்த்து அம்பிகா அசடு வழிய... இரண்டு ஜோடிக்கும் திருமணம் நடைபெறும். குடுமிக்கார கமல்தான் அமெரிக்க கமல் என்பதையும் கிராமத்து வள்ளிதான் நாகரீக உடையுடன் வந்தவள் என்பதையும் அறிந்து ஏமாந்து, நொந்து போவார்கள்.

சகலகலா வல்லவன்

‘உன் தங்கச்சி நல்லாருக்கணும்னா, என் தங்கச்சி நல்லாருக்கணும்’ என்று கமல் சொல்ல, வெளியே துளசி மீது பாசம் பொழிந்தாலும் உள்ளே கொடுமைப்படுத்துவார் ரவீந்தர். போதாக்குறைக்கு சில்க் ஸ்மிதாவுடன் தொடர்பு வேறு. ஆனால், சில்க் ஸ்மிதாவை மடக்க, துபாய் ஷேக் போல் வேடமிட்டு கமல் வர, அப்போது சில்க் ஸ்மிதா திருந்த, ரவீந்தரும் துளசியும் இறக்கவேண்டும் என அந்த வீட்டுக்கே தீ வைக்க, நெருப்புகளுக்கு மத்தியில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் எல்லோரையும் காப்பாற்ற, இரண்டு ஜோடிகள் இணைய... வணக்கம் என்று கலகலவென நிறைவு செய்ய, சிரித்த முகத்துடன் வெளியே வந்து, ‘படம் சூப்பரப்பூ’ என்று படம் வெளியான போது, டெண்ட் கொட்டகை ரசிகன் நடந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

ஒருபக்கம் பார்த்தால், எம்ஜிஆரின் ‘பெரிய இடத்துப் பெண்’, இன்னொரு பக்கம் பார்த்தால் சிவாஜியின் ‘பட்டிக்காடா பட்டணமா’ என்றெல்லாம் சாவகாசமாக இப்போது நினைத்தாலும் படம் வெளியான சமயத்தில் எதைப்பற்றியும் யோசிக்கவிடாமல், கதையில் செண்டிமெண்ட்டையும் வசனத்தில் கைதட்டலையும் பாடல்களில் சொக்கிப்போகவைத்து, சண்டைக்காட்சிகளில் மிரளச் செய்து... என வசூலில் சாதனை செய்தது ‘சகலகலா வல்லவன்.’ எஸ்.பி.முத்துராமனின் முழு கமர்ஷியல் வித்தைகளும் நிறைந்த கலகல படம் தான் ‘சகலகலா வல்லவன்’.

கமல், அம்பிகா

கிராமத்தில், குடுமியும் வேஷ்டியுமாக இருக்கும் போது கொஞ்சம் புஷ்டியாகவும் இடைவேளைக்குப் பிறகு நுனி நாக்கு ஆங்கிலமும் குறுந்தாடியும் கொண்டு ஸ்லிம்மாகவும் இருப்பது கமலின் ரகசியம். பண்ணைக்கார புஷ்பலதாவின் ஜம்பம், மிரட்டலாக இருக்கும். வி.கே.ராமசாமி ரவுசு பண்ணியிருப்பார். சாமிக்கண்ணு வழக்கம்போல் சிறப்பாக நடித்திருப்பார்.

நாயகியாக அம்பிகா, கமலிடம் முட்டுவதும் கமலை வாய்க்காலில் தள்ளிவிடுவதும் பிறகு கமலைப் புரிந்து உணர்ந்து நெருங்குவதும் என தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருப்பார். ரவீந்தர் தன் தனித்தன்மை நடிப்பை இதிலும் கொண்டுவந்திருப்பார். சில்க் ஸ்மிதா, இதிலும் நம்மைக் கிறங்கடித்து, நம் மனதில் இடம்பிடித்திருப்பார். இரண்டு மூன்று காட்சிகளே வந்தாலும் கமலுக்கு உதவும் தேங்காய் சீனிவாசன் நடிப்பும் பிரமாதம்.

படத்தின் மொத்த மசாலாவுக்கும் வேறொரு வண்ணம் கொடுத்திருப்பார் இளையராஜா. ‘அம்மன் கோவில் கிழக்காலே’ என்று இளையராஜா டைட்டில் பாடலைப் பாடியிருப்பார். ‘கட்டவண்டி கட்டவண்டி’ என்று இரண்டு முறை பாடல்கள் வரும். இரண்டும் கலகலப்பூட்டியிருக்கும். ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’ என்று மலேசியா வாசுதேவன், தன் குரலால் விளையாடியிருப்பார். ஜூடோ ரத்தினத்தின் சண்டைக் காட்சிகள், படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தன.

கமல் அப்போது இந்திக்குப் போய்விட்டிருந்த காலம். படம் மிகப்பெரிய வெற்றியை அங்கே தந்திருந்த காலம். படத்துக்கு என்ன பெயர் சூட்டுவது என யோசிக்கும்போது, கமலைக் குறிப்பிடுவது போலவே தலைப்பு இருக்கட்டும். சகலகலாவல்லவன்’ என்று வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.

கமல், சில்க் ஸ்மிதா

கமலுக்கும் ரஜினிக்கும், மலேசியா வாசுதேவன் பாடினாலும் பொருத்தமாக இருக்கும். அதைவிட எஸ்.பி.பி. பாடினால் கனக்கச்சிதமாக இருக்கும். இந்தப் படத்தில், டைட்டில் பாடலை இளையராஜா பாடியிருப்பார் அல்லவா. ‘டைட்டிலைச் சொல்லும் பாடலாக’ ‘நான் தான் சகலகலாவல்லவன்’ என்ற பாடலை எஸ்.பி.பி. தன் குரலால் அதகளம் பண்ணியிருப்பார். ’இளமை இதோ இதோ’ என்கிற பாடல், படம் வெளியான வருடத்தில் இருந்து, இன்று வரைக்கும் ஜனவரி 1ம் தேதி தொடங்குகிற டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 'நேத்து ராத்திரி யம்மா’வும் ‘இளமை இதோ இதோ’வும் பாடாத பாட்டுக் கச்சேரிகளே இல்லை அப்போது! கோயில் திருவிழாவில், பாட்டுக் கச்சேரி வைத்தால், இந்தப் பாடல் எப்போது பாடுவார்கள் என ஆர்வத்துடன் காத்துக்கிடந்தார்கள் தமிழக மக்கள்.

அப்போதெல்லாம் ஏ, பி, சி சென்டர்கள் என விநியோகத்தையும் வசூலையும் பகுத்துப் பார்ப்பார்கள். ‘இது ஏ சென்டர் படம்’ , ‘இது பி அண்ட் சி சென்டர் படம்’ என்றெல்லாம் சொல்லுவார்கள். பொதுவாகவே, கமல் படம் என்றால், ‘ஏ அண்ட் பி செண்டர் படம்’ என்பார்கள். அந்தக் கணக்குகளை தவிடுபொடியாக்கி, ‘ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர்’ என அனைத்து ஏரியாக்களிலும் நூறு நாட்களைக் கடந்து 175 நாட்களைக் கடந்து வெள்ளிவிழாப் படமாக அமைந்து சக்கைப்போடு போட்டான் ‘சகலகலா வல்லவன்’.

1982ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது ‘சகலகலா வல்லவன்’. படம் வெளியாகி 40 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் நம் மனதில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறான் ‘சகலகலா வல்லவன்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE