மரணமில்லா தேவதை... ஸ்ரீதேவி!

By வி. ராம்ஜி

நம் மனதைக் கவருவது சுலபம்தான் என்றாலும் அந்த மனதில் தனியிடம் பிடிப்பது சாதாரணமானது அல்ல. நமக்கும் அவருக்குமான ஏதோவொரு தொடர்பு, ஒரு ஈர்ப்பு, ஒரு பந்தமென உருவாகியிருக்க வேண்டும். இத்தனைக்கும் ஒரு நடிகரையோ நடிகையையோ நாம் திரையில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனாலும் நம் வீட்டில் ஒருவரைப் போல் அவருக்கு மனதில் ஓரிடம் கொடுத்திருப்போம். அந்த நடிகையைத் தங்கள் வீட்டில் ஒருவராகத்தான் எல்லோரும் பார்த்தார்கள். இன்றுவரை அவருக்கு இணையாக வேறு எவரையும் வரித்துக்கொள்ள மனமில்லாமல்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நடிகை... ஸ்ரீதேவி.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஜொலித்தவர் ஸ்ரீதேவி. வயது முதிர்ந்தாலும் அதே கண்களும் கன்னங்களும் வருடங்கள் கழித்தும் பால்யம் காட்டின. முகத்தில் குழந்தைமையும் குரலில் முதிர்ச்சியும் கொண்டு, நம்மையெல்லாம் ஈர்த்தார். நம்மையெல்லாம் என்றால்... ஒட்டுமொத்த இந்தியாவையும் என்று அர்த்தம்!

தமிழகத்தின் தெற்கே, விருதுநகர் பக்கத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர், பின்னாளில் இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னி என்று பேரெடுப்பார் என்று எவருக்குத்தான் தெரியும்? முருகப்பெருமானின் தீவிர பக்தரான தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பா தேவர் தனது ‘துணைவன்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தினார். 1969-ம் ஆண்டில் தொடங்கிய திரைப் பயணத்தில் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து நடித்தார் ஸ்ரீதேவி. எம்ஜிஆருடன் ‘நம் நாடு’, சிவாஜியுடன் ‘பாபு’ என தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசனை ‘அரங்கேற்றம்’ மூலம் வாலிபனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ஸ்ரீதேவியையும் வாலிபப் பருவத்தில் அறிமுகப்படுத்தினார். கமல் கெளரவ வேடத்திலும் ரஜினி நாயக வேடத்திலும் கல்கத்தா விஸ்வநாதன் முக்கிய வேடத்திலும் நடித்த அந்தப் படத்தில், மிக மிக முதிர்ச்சியான, கனமான கதாபாத்திரத்தை மிக இலகுவாக வெளிப்படுத்தி நடிப்பில் பேரெடுத்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி கமலை காதலிக்க, ரஜினி ஸ்ரீதேவியை அடைய விரும்ப, ஒருகட்டத்தில் கமல் இறந்துவிட, அப்போது காப்பாற்றாமல் ரஜினி விட்டுவிட... பின்னர் கல்கத்தா விஸ்வநாதனை இரண்டாம் திருமணம் செய்துகொள்வார். கல்கத்தா விஸ்வநாதன் ரஜினியின் அப்பா. ரஜினிக்கு சித்தியாகி, ரஜினியைப் படுத்தியெடுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்ரீதேவி ‘அப்ளாஸ்’ அள்ளிக்கொண்டே போவார்.

1976-ல் வெளியான இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஸ்ரீதேவியைக் கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகர்கள். 1977-ல் ஆண்டு வெளியான ‘காயத்ரி’யில் கெட்ட ரஜினிக்கும் மனைவியாக நடித்திருப்பார். இதுவும் கனமான கதாபாத்திரம். அதேவருடத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக, ரஜினிக்குத் தங்கையாக ‘கவிக்குயில்’ படத்தில் நடித்திருப்பார்.

மூன்று முடிச்சு

இந்த வருடத்தில்தான் புதிய இயக்குநராக பாரதிராஜா நமக்குக் கிடைத்தார். கமலை சப்பாணியாக்கினார். ரஜினியை பரட்டையனாக்கினார். ஸ்ரீதேவியை ‘மயிலு’ எனும் கிராமத்துப் பெண்ணாகவே மாற்றினார். ‘16 வயதினிலே’ படம் வந்ததும், ஆகச்சிறந்த நடிகை என்று ஸ்ரீதேவியை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடியது.

அதையடுத்து, வரிசையாகப் படங்கள். ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும் சிவகுமாருக்கு நாயகியாகவும் நடித்தார். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் கமலுடன் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் சாரதா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் சிரித்தால் நாமும் சிரிப்போம். அவர் கனவு கண்டால் நாமும் கனவில் மூழ்குவோம். அவர் அழுதால் நாமும் அழுது, அவர் பதறிக் கலங்கினால் நாமும் துடித்துப் பதறி... என ஸ்ரீதேவி நமக்குள் இப்படியாகத்தான் நுழைந்தார்.

16 வயதினிலே

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுவதென்பது லேசுப்பட்ட விஷயமல்ல. அது ஸ்ரீதேவிக்கு மிகச்சுலபமாக வந்தது. விஜயகுமாருடன், ரஜினியுடன் என்று பலருடன் நடித்தாலும், ‘கல்யாண ராமன்’, ‘நீலமலர்கள்’, ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ (இதில் கமலுக்கு ஜோடி சத்யப்ரியா), ’சிகப்புக் கல் மூக்குத்தி’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘குரு’, ’மீண்டும் கோகிலா’ என வரிசையாகக் கமலுடன் நடித்தார். இத்தனைக்கும் அப்போது கமலுக்கு ஸ்ரீப்ரியாவும் ஜோடியாகத் தொடர்ந்து நடித்தார் என்றாலும் சிவாஜி - பத்மினி ஜோடி போல், எம்ஜிஆர் - சரோஜாதேவி ஜோடி போல், கமல் - ஸ்ரீதேவி ஜோடி பேசப்பட்டது. ‘எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு’ என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல் இவர் நடித்த ‘ப்ரியா’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மகேந்திரன் இயக்கத்தில் ‘ஜானி’ படத்தில் ரஜினிக்கு மீண்டும் ஜோடியானார். கதாபாத்திரத்தை உள்வாங்கி, அமைதியும் ஏக்கமுமாக, கனவுகளும் வலிகளுமாக ஸ்ரீதேவி வெளிப்படுத்திய நடிப்பை ரசித்து ரசித்து வியந்தார்கள் ரசிகர்கள். அசோக்குமாரின் ஒளிப்பதிவில், இன்னும் இன்னும் அழகாகத் தெரிந்தார் ஸ்ரீதேவி.

காயத்ரியில் ஸ்ரீதேவி

கிட்டத்தட்ட எண்பதுகளில் எல்லா முக்கிய இயக்குநர்களும் ஸ்ரீதேவியை தன் படத்தில் நடிக்க வைத்தார்கள். பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரனுக்குப் பிறகு பாலுமகேந்திரா ஸ்ரீதேவியை அழைத்து, ‘மூன்றாம் பிறை’ படத்தில் மறக்க முடியாததொரு கதாபாத்திரத்தை வழங்கினார். ஒரு விபத்தில் நினைவிழக்க, புத்தியில் சிறுவயது தங்கியிருக்க, இளம்பருவத்து நாயகியான ஸ்ரீதேவி, நடையிலும் பேச்சிலும் குரலிலும் பார்வையிலும் ஒரு சிறுமியாகவே, ‘விஜி’யாகவே வாழ்ந்து காட்டினார். எப்போதும் விஜி என்று கூப்பிடும் கமலின் குரலுக்குக் குழந்தையாகக் கட்டுப்படும் ஸ்ரீதேவி, இறுதியில் ரயில்வே ஸ்டேஷனில் ‘விஜி விஜி விஜி’ என்று அழைக்க, எதுவுமே அறியாமல், முதிர்ந்த பார்வையைப் பார்த்துக்கொண்டு, வெகு இயல்பாக கழுத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொள்வார். இருவருக்காகவும் நாம் கலங்கிப்போவோம். ’வாழ்வே மாயம்’ தேவியை யாராலும் வெறுக்கவோ மறக்காமல் இருக்கவோ முடியாது. ‘நீலவான ஓடையில்’ பாடலில் கமலும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். கொள்ளை அழகில் ஜொலித்து மயக்கினார் ஸ்ரீதேவி.

‘ராணுவ வீரன்’ படத்தில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே இருக்கும் ஸ்ரீதேவியும் நம்மை ஈர்த்திருப்பார். ‘போக்கிரி ராஜா’வில் அமைதியே உருவான முகத்துடன் வரும் ஸ்ரீதேவியும் நம்மைக் கவர்ந்திருப்பார். ‘தனிக்காட்டு ராஜா’வில் வரும் ஸ்ரீதேவியும் ’அடுத்த வாரிசு’ படத்தில் வருகிற ஸ்ரீதேவியும் நம்மை ஈர்ப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

மூன்று முடிச்சு

இதற்கு நடுவே, தமிழிலிருந்து தெலுங்குப் பக்கம் போனார். அங்கே அப்போது உள்ள டாப் ஹீரோக்களுக்கெல்லாம் இவர்தான் ஜோடி. மலையாளத்தின் பக்கம் போய், இன்னும் பலமான கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்றார். கன்னடத்திலும் ஜொலித்தார்.

அந்த எண்பதுகளில்தான் வடக்கின் பக்கமிருந்து சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது ஸ்ரீதேவிக்கு. ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் என அடுத்தடுத்த இளம் ஹீரோக்களுடனும் நாயகியானார். அவ்வளவுதான்! இந்திப் படவுலகம் ஸ்ரீதேவியை தமிழுக்குத் தரமாட்ட்டோம் என்பதில் உறுதியாக இருந்தது. இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடியது.

மீண்டும் கோகிலா

இந்தியாவின் கனவுக்கன்னி என்று முதன்முதலாக தமிழகத்தில் இருந்து அங்கே சென்ற ஹேமமாலினியைச் சொன்னார்கள். அதையடுத்து அந்த கனவுக்கன்னி அந்தஸ்து, ஸ்ரீதேவிக்குக் கிடைத்தது. இவருக்குப் பிறகு, இந்தப் பட்டத்தைச் சூடிக்கொள்ள எந்த மகராணியும் இன்னும் வரவில்லை.

‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் வறுமையும் எப்போதும் கண்களிலும் மனதிலும் தங்கியிருக்கிற சோகத்தை அப்படியே நமக்குள் கடத்தியிருப்பார். ‘மீண்டும் கோகிலா’ படத்தில் பெண்பார்க்கும் படலக் காட்சி ஒன்று போதும். பெண் பார்க்க வரும் கமலைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, ஒவ்வொரு ரசிகரும் பெண் பார்க்கும் படலத்தில் ஸ்ரீதேவியைப் பார்த்து, அந்த அழகில் ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள். ‘வியட்நாம் வீடு’ பத்மினிக்குப் பிறகு மடிசார் புடவை இத்தனை பாந்தமாக ஸ்ரீதேவிக்குத்தான் அமைந்திருக்கிறது என்று பெண்களும் பிரமித்துப்போனார்கள்.

பகலில் ஓர் இரவு

‘பகலில் ஓர் இரவு’ பார்த்துவிட்டு, ஸ்ரீதேவிக்கு நிகழ்ந்த சோகத்தைத் தங்களுக்கு நேர்ந்த துக்கமாகவே பார்த்தார்கள். ‘ஸ்ரீதேவி ஒரு கனவுக்கன்னி’ என்று ஆண் ரசிகர்கள் கிறங்கினார்களென்றால், ‘ஸ்ரீதேவிதான் பெண்களில் பேரழகு’ என்று பெண்களே சான்றிதழ் கொடுத்தார்கள். எண்பதுகளில், ‘பொண்ணு ஸ்ரீதேவி மாதிரிலாம் இருக்கணும்னு ஆசைப்படாதப்பூ’ என்று சொல்லாதவர்களே இல்லை.

இந்தியில் இந்தக் கால நடிகர்களுடனும் நடித்தார். அஜித் விஜய்யுடனும் நடித்திருக்கிறார். 2018 பிப்ரவரி 24-ம் தேதி, துபாயில் குளிக்கும் நீர்த்தொட்டியில் மூழ்கி இறந்தார். சில மரணங்களையும் சில இழப்புகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்றே நம் மனம் நம்பும். அப்படித்தான் ஸ்ரீதேவியின் மரணமும்.

மூன்றாம் பிறை

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகியாகவும் ஜொலித்த நடிகைகள் குறைவுதான். அதிலும் கனவு தேவதை எனும் மிக உயர்ந்த இடத்தை ஸ்ரீதேவிக்குப் பிறகு இன்னும் எவரும் அடையவே இல்லை. ஸ்ரீதேவி... இன்று வரைக்கும் இந்தியத் திரையுலகிலும் இந்திய ரசிகர்கள் மனதிலும் தேவதைதான். கனவு தேவதை!

1963 ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்தார் ஸ்ரீதேவி. இன்னமும் ஒரு தேவதையாக நம் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தேவதைகளுக்கு மரணமேது?!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE