ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 72

By திரை பாரதி

பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் ‘முள்ளும் மலரும்’ படத்தில் முதல் முதலாக நடித்தார் ரஜினி. அவரை வைத்து பாலுமகேந்திராவே நேரடியாக இயக்கி, ஒளிப்பதிவு செய்த ஒரே படம் ‘உன் கண்ணீல் வழிந்தால்’. ரஜினியின் வேகம், ஸ்டைல் எல்லாம் இந்தப் படத்தில் இருந்தாலும் அவரை ‘ரவி’ என்கிற உதவிக் காவல் ஆய்வாளராக பார்வையாளர்களை உணரவைத்த மாயத்தை பாலுமகேந்திரா சாதித்திருந்தார்.

ரஜினி இந்தப் படத்துக்கு முன்பு ‘மூன்று முகம்’ படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தாலும் இனிமேலும் காவல் அதிகாரியாக நடித்தாலுமே கூட ‘ரவி’ போல ஒரு யதார்த்தமான காவல் அதிகாரியாக அவரால் மீண்டும் நடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். படத்தின் நாயகி மாதவியும் ரஜினியும் இணைந்து இளையராஜாவின் இசையில் ஊட்டி மலைச் சாரலில் பாடும் ’மலரே மலரே உல்லாசம்’, ‘கண்ணில் என்ன கார் காலம்’ ஆகிய வெவ்வேறு உணர்வுகளைக் கொண்ட பாடல்களை இன்றைக்கும் மனதில் ஓட்டிப் பார்த்து ரசிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

மாதவியை நம்பவைத்த ரஜினி

ரஜினியுடனான தன்னுடைய நினைவுகளை நமக்காக இங்கே மீட்டுகிறார் மாதவி: “ஊட்டி என்றதுமே உங்களுக்கெல்லாம் குளிர்தான் ஞாபகத்துக்கு வரும். எனக்கோ ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தோட ஷூட்டிங் தான் ஞாபகத்துக்கு வரும். முதல் நாள் ஷூட்டிங். செம டிப் டாப்பாக வானத்துக்கு ஒட்டடை அடிக்கிற மாதிரி வெள்ளை வெளேரென்று கோட் சூட்டில் ஒருத்தர் வந்திருந்தார். ‘இவர் மிஸ்டர் ஜார்ஜ். ஹாலிவுட் ஆக்டிங் புரொஃபசர்’ என்று அவரை எனக்கு அறிமுகப்படுத்திய ரஜினி சார், ‘மீட் மிஸ் மாதவி... ஹீரோயின் ஆஃப் திஸ் மூவி’ என என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். ஒரு தமிழ் படத்தின் ஷூட்டிங்கில் தமிழ் நடிகர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதை நேரில் ஆய்வு செய்வதற்காக அவர் வந்திருப்பதாக யூனிட்டில் உள்ள பலரும் என் காதுபடப் பேசிக்கொண்டார்கள்.

உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில்...

இப்படியெல்லாம் கூட ஹாலிவுட்டிலிருந்து வருவார்களா என என் மனதுக்குள் உதைத்தது. அந்த டிப் டாப் மனிதரிடம் ஹாலிவுட் நடிப்பு பற்றி கேட்கலாம் என்று ஷூட்டிங் இடைவேளையில் அவர் பக்கத்தில் போனால் எஸ்கேப் ஆகிவிடுவார். இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று, எனக்கு லேசாகப் பொறி தட்டியது. அதேசமயம் ரஜினி சார் சொன்னதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

நான்காம் நாள் ஷூட்டிங் காலையில சுலக்‌ஷனா மேடமும் வந்துட்டாங்க. எனக்கு செம ரிலீஃப்! நமக்கு கம்பெனி கொடுக்க ஆள் வந்தாச்சுன்னு ஒரே குஷி. அவரோட உட்கார்ந்து செம்மையா அரட்டை அடிச்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துல அங்கே வந்தார் அந்த ஆக்டிங் புரொஃபசர். அவரைப் பார்த்ததும் சுலக்‌ஷனா, ‘என்ன சார்... சௌக்கியமா?’ன்னு கேட்டாங்க. அவரும், ‘நல்லா இருக்கேம்மா... வீட்ல எல்லாரும் சௌக்கியமா?’ன்னு கேட்டுட்டு அங்கேயிருந்து எஸ்கேப் ஆயிட்டார். எனக்கோ செம்ம ஷாக்!

நான் சுலக்‌ஷனாகிட்ட இவர் ஹாலிவுட் ஆக்டிங் புரொஃபசர் இல்லையான்னு கேட்டதும் அவங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ‘மக்கு மாதிரி இருக்காதே. தெலுங்குப் படம் பார்த்தா மட்டும்போதாது. நிறைய தமிழ்ப் படமும் பாரு. அப்பத்தான் யாரெல்லாம் பிரபலமான நடிகர்கள்ன்னு தெரிஞ்சுக்கலாம்’னு சொன்னாங்க. இவர் சத்யராஜ். தமிழில் இவர் தான் இப்ப ஹாட் வில்லன் ஆக்டர். அதெல்லாம் இருக்கட்டும்... இவரை ஆக்டிங் புரொஃபசர்ன்னு சொன்னது ரஜினி சார் தானே..?’ன்னு நச்சுன்னு கேட்டாங்க. அந்த அளவுக்கு ரஜினி சாரோட குறும்பு பாப்புலர். ஆனா, அவரோட குறும்புகள் மத்தவங்கள சந்தோசப்படுத்துமே தவிர காயப்படுத்தாது.

அதுக்கப்புறம் ‘காக்கிச் சட்டை’ ஷூட்டிங்ல நானும் சத்யராஜ் சாரும் மீட் பண்ணி நல்ல நண்பர்கள் ஆயிட்டோம். ரஜினி சார் மாதிரியே அவரும் அற்புதமான மனிதர். ரஜினி சார் கூட பல சூப்பர் ஹிட் படங்கள் நடிச்சிருந்தாலும் பாலுமகேந்திரா சார் டைரக்‌ஷன்ல ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ ரொம்ப க்யூட்டான படம். எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்தை பாலு சார் ஷூட் பண்ணும்போது ‘இவர் படம் எடுக்கிறாரா?’ன்னு எனக்கு சந்தேகமா இருக்கும். அந்த அளவுக்கு நம்மள நடிக்கவிட்டு, திருத்தி, ‘இவ்வளவு பண்ணுங்க போதும்’ன்னு சொல்லி அளவா நடிக்க வைப்பார். நமக்கு நடிக்கிற உணர்வே வராது. ரஜினி சார் பாலு சாரோட எதிர்பார்ப்பு என்னங்கிறதை தெரிஞ்சுகிட்டு சும்மா டக் டக்ன்னு பண்ணிடுவார். ஊட்டியில மறுபடியும் ரஜினிகூட நடிக்கணும்னு இப்போ தோனுது” என்கிறார் மாதவி.

ஆண்டவன் போட்ட பிச்சை!

நிஜ வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என வாழ்க்கையை இரண்டாகப் பிரித்துக் கொண்டவர் ரஜினி. அதற்கான மனநிலையை ரஜினி வெகு எளிதாக வரித்துக்கொண்டதற்கு அவரின் ஆன்மிகத் தேடல்தான் காரணம். ஸ்ரீ ராகவேந்திரா, ரமண மகரிஷி, பாபா என மகான்களின் பாதையில் இளைப்பாற விரும்பிய ரஜினி, தனக்குள் ‘நான் யார்?’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கான பதிலையும் கண்டடைந்தார். அதனால்தான் ஈகோ, தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்கள், தன்னுடைய திரை பிம்பம் ஆகியவற்றை விட்டொழித்து அன்றாட வாழ்வில் எளிய மனிதனாக இருந்துவிடும் முடிவை எடுத்துகொண்டார்.

இப்படி பிம்பம் உதறியதன் பின்னணி குறித்து ரஜினி பலமுறை மனம் திறந்து பேசியிருக்கிறார்: ''இந்த வாழ்க்கை எனக்கு ஆண்டவன் கொடுத்த பிச்சை. என்னுடைய பிராப்தம். போன ஜென்மத்துப் புண்ணியம். சினிமா நடிகன் என்பதைக் காட்டிலும் ஆன்மிகவாதி என்பதிலேயே எனக்குப் பெருமை. பணம், புகழ், பேர் வேண்டுமா ஆன்மிகம் வேண்டுமா என்று கேட்டால் என்னுடைய தேர்வு ஆன்மிகமாக இருக்கும்'' என்று சொன்னவர், சொல்லிக்க்கொண்டு இருப்பவர் ரஜினி. இந்தப் பக்குவம்தான் அவரை இப்போதும் வழிநடத்துகிறது.

“விளிம்பு நிலைக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரஜினி தன்னை சூப்பர் மேன், சூப்பர் ஸ்டாராகவே காட்டிக்கொண்டார். அவர் வளர வளர எல்லா படங்களிலும் திரைக்கதையில் நாயக பிம்பத்துக்கே பிரதான இடம் கொடுக்கப்பட்டிருக்கும்” என்று சொல்லும் விமர்சகர்களும் உண்டு. ரஜினி நடித்த படங்களின் பட்டியலே அதற்கான பதில். ஆனால், இதிலிருந்து விலகி, ரஜினி தனது நூறாவது படமாக ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தார். அதன் மூலம் தனது ஆன்மிக நாட்டத்தை தனது ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

ரஜினிக்கு முன் உச்சம் தொட்ட எம்ஜிஆர், சிவாஜி இருவரில் எம்ஜிஆருக்கு நூறாவது படம் ‘ஒளி விளக்கு’. அவர் அறிமுகமான ‘சதிலீலாவதி’ படத்தின் கதையை எழுதிய எஸ்.எஸ்.வாசன்தான், பின்னாளில் தனது ஜெமினி தயாரிப்பாக ‘ஒளி விளக்கு’ படத்தை உருவாக்கினார். அதேபோல நடிகர் திலகத்தின் பன்முக நடிப்பாற்றலுக்குக் களமாக அமைந்தது அவருடைய நூறாவது படம் ‘நவராத்திரி’.

ஸ்ரீ ராகவேந்திரா படத்தில்...

இயக்க மறுத்த எஸ்பி.முத்துராமன்!

இவர்களுடைய வரிசையில் ரஜினியும் தனது நூறாவது படத்தை முக்கியத்துவம் மிக்கதாக மாற்ற விரும்பினார். எந்தவொரு மாஸ் ஹீரோவும் செய்யத் துணியாத முயற்சி அது. ‘ஸ்ரீ ராகவேந்திரா’ படம் உருவானது பற்றி படத்தின் இயக்குநர் எஸ்பி.முத்துராமனிடம் கேட்டதும் நினைவுகளைப் பகிர்ந்தார்.

“75 படங்களைத் தாண்டி ரஜினி நடித்துக் கொண்டிருந்தபோது, ‘சுவாமி ஸ்ரீ ராகவேந்திராவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க வேண்டும், நான் நடிக்க, நீங்கள் இயக்கவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டிருப்பார். ‘நீங்கள் இப்போது மாஸ் ஹீரோ... யோசித்துச் செய்யுங்கள்’ என்று சொல்லி நான் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். ‘நல்லவனுக்கு நல்லவன்’ படப்பிடிப்பு முடியும் தருவாயில் ரஜினி என்னிடம், ‘ஸ்ரீ ராகவேந்திராதான் என்னுடைய நூறாவது படம். கே.பி. சார் தயாரிக்கிறார். நீங்கள் இயக்குகிறீர்கள்’ என்று சொன்னார்.

உடனே நான், ‘உங்களை விசிலடித்து, கைத்தட்டி ரசிக்கும் ரசிகர்களுக்கு, நீங்கள் பக்திப் படத்தைக் கொடுத்தால் அது விஷப் பரீட்சையாக அல்லவா முடியும்?’ என்றேன். அதற்கு அவர், ‘இது மனித மனதில் விஷமிருந்தால் அதைப் போக்கும் படம்’ என்று தத்துவார்த்தமாக பதில் சொன்னார். ரஜினியின் முடிவில் இருந்த உறுதியைப் புரிந்துகொண்டு, பாலசந்தர் சாரைப் பார்த்தேன். ‘நீங்கள் ஸ்ரீ ராகவேந்திரா படம் எடுத்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. உங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அதுவுமில்லாமல், எனக்கு பக்திப் படம் எடுத்த அனுபவமும் கிடையாது’ என்று கூறித் தப்பிக்கப் பார்த்தேன்.

ஆனால் கே.பி சார் என்னிடம், ‘ரஜினி தனது நூறாவது படத்தை நான்தான் தயாரிக்க வேண்டும் என்று சொன்னதே மிகப்பெரிய லாபம். வரவு செலவு ரெண்டாம்பட்சம்தான். அவரது உணர்வுக்கு மதிப்பளிப்போம்’ என்று சொன்னார். அடுத்து, ‘எந்த சப்ஜெக்டைக் கொடுத்தாலும் அதைக் கெடுக்காமல் படமெடுக்கும் ஒரே இயக்குநர் நீ. ராகவேந்திராவும் ஒரு சப்ஜெக்ட் என்று நினைத்துக் கொள். நானும் ஏ.எல்.நாராயணனும் அந்த சப்ஜெக்டை கரெக்ட் செய்து தருகிறோம்’ என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார்.

படப்பிடிப்பில் முதல் இரண்டு நாள், ரஜினியின் வேகமான நடிப்பைக் குறைத்து நடிக்கவைக்க ரொம்பச் சிரமப்பட்டேன். அதன்பிறகு மூன்று மாதமும் அவர் அந்தச் சாதுவாகவே வாழ்ந்தார். ரஜினி உட்பட படக்குழுவில் இருந்த அனைவருமே அசைவ உணவுகளை மூன்று மாதம் தவிர்த்துவிட்டே படப்பிடிப்பில் கலந்துகொண்டார்கள். ரஜினி விரதமிருந்து நடித்தார். படப்பிடிப்பை பெங்களூரு மந்த்ராலயத்தில் தொடங்கினோம். முடித்ததும் அங்கேதான்” என்கிறார் எஸ்பி.முத்துராமன்.

இந்தப் படத்தில் பல முக்கியமான நடிகர்கள் இருந்தாலும், வெள்ளி விழா படங்களை வரிசையாகத் தந்துகொண்டிருந்த நடிகர் மோகனும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ஆச்சரியம். அதுபற்றி மோகனிடம் கேட்டபோது, “நான் தீவிர ராகவேந்திரா பக்தர் என்பதை அறிந்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன், என்னை அழைத்து, ‘ராகவேந்திரரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான முகுந்தன் வேடத்தில் நடிக்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘சுவாமியின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த வாய்ப்பைத் தவறவிடமாட்டேன்’ என்று கூறி நடித்துக் கொடுத்தேன். ரஜினியுடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை. நானும் அவரும் கர்நாடகத்தின் பிள்ளைகள் என்பதில் எப்போதுமே எனக்குப் பெருமை உண்டு” என்றார் மோகன்.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE