குரங்கு அம்மை பாலியல் நோயா?

By வெ.சந்திரமோகன்

கரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் இன்னமும் முழுமையாக விடுபடாத சூழலில், குரங்கு அம்மை நோய் பரவல் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச அளவில் கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படாத நாடுகளில் இந்தத் தொற்று பரவியிருக்கிறது. மறுபுறம், இந்த நோய் பரவும் விதம் தொடங்கி, இதற்கான சிகிச்சை வரை இதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. குறிப்பாக, இந்நோய் பரவுவதற்கு, தன்பாலின உறவுப் பழக்கம் கொண்ட ஆண்கள் மட்டுமே காரணம் என்பது போல் பரவும் தகவல்கள் சமூக அளவில் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கின்றன. இதன் பின்னணி என்ன? பிரச்சினை என்ன?

ஏன் பதற்றம்?

இன்றைய தேதிக்கு 78 நாடுகளில் பரவியிருக்கிறது குரங்கு அம்மை. 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். இதில் 70 சதவீதம் பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 25 சதவீதம் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதுவரை குரங்கு அம்மை பாதிப்புக்கு உயிரிழந்த 5 பேரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். எனினும், சமீபத்தில் தொடங்கியிருக்கும் தொற்றுப் பரவலுக்கு முன்பாகவே அவர்கள் இறந்துவிட்டனர். இறப்பு விகிதமும் மிக மிகக் குறைவு. இந்தியாவில் தொற்றுக்குள்ளாகியிருக்கும் 4 பேரில் மூவர், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திரும்பியவர்கள். டெல்லியைச் சேர்ந்த ஒருவர் மட்டும்தான், சமீப நாட்களில் வெளிநாடுகளுக்குச் சென்றிராதவர். அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையே, இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கும் குரங்கம்மை வைரஸுக்கும் ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் வைரஸுக்கும் தொடர்பு இல்லை என சிஎஸ்ஐஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கேரளத்தில் தொற்றுக்குள்ளாகியிருக்கும் இருவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தபோது அவர்கள் ஏ.2 வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஐரோப்பாவில் பரவிவரும் பி.1 (B.1) அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டது. அதேசமயம், அமெரிக்காவிலும் தாய்லாந்திலும் இந்த ஏ.2(A.2) திரிபு பரவலாகக் காணப்படுகிறது. ஏ.2 வேகமாகப் பரவக்கூடியது என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 4 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், கேரளத்தைச் சேர்ந்த இருவரது மாதிரிகள்தான் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.

பெருந்தொற்றாக மாறுமா?

ஒரு நபரிடமிருந்து எத்தனை பேருக்குத் தொற்று ஏற்படலாம் என்பதைக் கணிக்கும் ஆர்-எண்(R Number) அடிப்படையில் பார்க்கும்போது இந்த வைரஸால் அதிகம் பேருக்குத் தொற்று ஏற்படாது என்பது உறுதியாகிறது. ஆர்என்ஏ வைரஸ்களான ஹெச்ஐவி, கரோனா வைரஸ் ஆகியவை வேகமாக உருமாற்றம் அடையும் தன்மை கொண்டவை. ஆனால், குரங்கம்மை ஒரு டிஎன்ஏ வைரஸ். எனவே, அத்தனை வேகமாக உருமாற்றம் அடையாது. இதுவரையிலான ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறக்கூடியது என்பதற்கான சான்றுகள் இல்லை என்றே மருத்துவ நிபுணர்கள் உறுதியாகச் சொல்கின்றனர்.

கரோனா தொற்று சுவாசத்தின் மூலம் பரவக்கூடியது. ஆனால், குரங்கு அம்மை பெரும்பாலும் பாலியல் உறவு மூலம்தான் பரவுகிறது. தொற்றுக்குள்ளானவருடன் தோலுடன் தோல் உறவு கொள்பவர்களுக்கு இது பரவிவிடும். தொற்றுக்குள்ளானவர் பயன்படுத்திய உடைகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றைத் தொடுபவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அதேசமயம், குரங்கு அம்மை நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுவிடாது. குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவரிடம் நோய் அறிகுறிகள் வெளிப்பட்ட பின்னர்தான், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு அந்த வைரஸ் பரவும் என்பது சாதகமான இன்னொரு அம்சம்.

புரிதலின்மை

பெரும்பாலும் தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களே அதிக அளவில் தொற்றுக்குள்ளாகிறார்கள் என்றாலும், அவர்கள் மூலம்தான் இந்நோய் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கோவில் ஒரு கர்ப்பிணிக்கும் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில், காடுகளின் அருகில் வசிப்பவர்களுக்கு மத்தியில், வெளவால், குரங்கு போன்ற வன விலங்குகளின் மாமிசம் (Bush meat) உண்ணும் வழக்கம் உண்டு. ஏழ்மையின் காரணமாக வன விலங்குகளை வேட்டையாடி உணவாகக் கொள்பவர்கள் உண்டு. காடுகளில் இறந்துகிடக்கும் விலங்குகளின் மாமிசத்தை உட்கொள்ளும் பழக்கமும் உண்டு. வனவிலங்குகளிடமிருந்து இப்படியான நோய்கள் பரவ இவையெல்லாம் முக்கியக் காரணிகள்.

ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மை பரவுவதும் இது முதல் முறை அல்ல. 2003-ல் அமெரிக்காவில் 70 பேர் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளாகினர். ஆப்பிரிக்க நாடான கானாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரை நாய்களிடமிருந்து (prairie dogs) அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவியதாகக் கருதப்படுகிறது. இவை எலி இனத்தைச் சேர்ந்தவை; செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுபவை.

எனினும், தன்பாலின உறவு பழக்கம் கொண்ட ஆண்கள், அறிமுகமில்லா ஆண்களுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பிறப்புறுப்பு அருகில் கொப்புளங்கள் இருக்கும் என்பதால் உடலுறவு மூலம் பரவுவது எளிது. என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதேசமயம், ஹெச்ஐவி கிருமி பாலியல் உறவால் பரவுகிறதா என்பதை உறுதிசெய்யவே சில ஆண்டுகள் பிடித்தன. கூடவே, பல்வேறு வழிகளில் ஹெச்ஐவி பரவியதும் உறுதிசெய்யப்பட்டது. எனவே, குரங்கு அம்மை பாலியல் நோயா என்பதை உறுதிசெய்ய இன்னும் ஆய்வுகள் தேவை என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

முத்திரை குத்த வேண்டாம்

கரோனா வைரஸின் மரபணுவைவிட 7 மடங்கு பெரியது குரங்கு அம்மை வைரஸின் மரபணு. ஹெச்ஐவி வைரஸின் மரபணுவை ஒப்பிட 20 மடங்கு பெரியது. எனினும், அந்த வைரஸ்களை ஒப்பிட அதிக ஆபத்தான நோயை இது உருவாக்குவதில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். குரங்கு அம்மை வைரஸ், பெரியம்மையுடன் தொடர்புடையது என்பதால் பெரியம்மை நோய்த் தடுப்பூசியைத்தான் தற்போது பல நாடுகளில் பயன்படுத்து கின்றனர். எனினும், பல ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்ட தடுப்பூசியால் இப்போது பலன் ஏற்படுமா என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.

தன்பாலின உறவாளர்களால்தான் குரங்கு அம்மை பரவுகிறது என முத்திரை குத்திவிட வேண்டாம் எனும் குரல்களும் எழுந்திருக்கின்றன. 1980-களில் எய்ட்ஸ் நோய் தொடர்பான தவறான புரிதல்களால் பல தற்கொலைகள், படுகொலைகள் நடந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, குரங்கு அம்மை பாலியல் சார்ந்த நோய் என ஒரேயடியாக முத்திரை குத்திவிட்டால், தொற்றுக்குள்ளானவர்கள் அதை வெளியில் சொல்லத் தயங்குவார்கள் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. இது வேறு வகையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். 1970-ல் காங்கோ நாட்டில் முதன்முறையாகக் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது 9 மாதக் குழந்தையிடம்தான் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

குரங்கு அம்மையால் கடந்த 50 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருப்பவை ஆப்பிரிக்க நாடுகள்தான் என்பதாலோ என்னவோ, இத்தனை ஆண்டுகளாக இது குறித்த முழுமையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. பிரத்யேகமான தடுப்பூசிகளோ, மருந்துகளோ தயாரிக்கப்படவில்லை. இன்றைக்கு, கரோனா பெருந்தொற்று கற்பித்த பாடங்கள் நம் கையில் இருக்கின்றன. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு குரங்கு அம்மைக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என நம்புவோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE