சிறகை விரி உலகை அறி - 61: விரல்கள் சொல்லும் வரலாறு

By சூ.ம.ஜெயசீலன்

மரங்கள் விரைந்தோடுவதாக நினைத்து பயணித்திருக்கிறேன், மனிதர்கள் உடன் நடக்க நாடு நகரமெங்கும் அலைந்திருக்கிறேன். ஆனால், அறைகளெங்கும் வீற்றிருக்கும் சிலைகளும் கலைகளும் என்னுடனே நடப்பது போன்ற அனுபவத்தை லூவர் அருங்காட்சியகத்தில்தான் பெற்றேன்.

காதலின் கடவுள்

சிலையரங்கில் செண்டார் சிலை இருந்தது. கிரேக்கத்தில் கி.மு. 2-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சிலையின் மாதிரியில், கி.பி. முதல் நூற்றாண்டு உரோமையில் செய்யப்பட்டது இச்சிலை. கிரேக்க புராணத்தில் செண்டார் என்பது, மனிதத் தலை, கைகள், முண்டம் மற்றும் குதிரையின் உடல், கால்கள் உள்ள ஓர் உயிரினம். செண்டாரின் மீது அமர்ந்து, தலை முடியை எட்டிப் பிடிப்பது போன்று ஈரோஸ் சிலை உள்ளது. கிரேக்கத்தில் ஈரோஸ், காதலின் கடவுளாவார். உரோமையர்கள், மன்மதன் அதாவது கியூபித் (Cupid) என்று சொல்வார்கள். காதலையும், ஆசையையும் மட்டுமல்ல, துயரத்தையும், அழிவையும் ஈரோஸ் கொண்டுவருவதால் பழங்காலத்தில் ஈரோஸை நினைத்து மக்கள் பயந்தார்கள். ஈரோஸ் குறித்த பல்வேறு கதைகள் இருந்தாலும், பெரும் கடவுள்கள் என கிரேக்கர்கள் நம்பும் 12 கடவுள்களுள் ஈரோஸுக்கு இடமில்லை.

செண்டார் சிலை

சிறிது தூரத்தில், உரோமை பேரரசர் அகுஸ்துஸ் சிலை இருந்தது. அதன் அருகிலேயே அகுஸ்துஸின் மனைவி லிவியா நின்றுகொண்டிருக்கிறார். வளமையின் கடவுளான செரெஸ் என்பவரைக் குறிக்கும், கொம்புகளை கையில் வைத்திருக்கிறார். உரோமைத் தாய்மார்கள், மணமான வயதுவந்த பெண்கள் அணியும் ஆடை (Stola) அணிந்திருக்கிறார்.

மோனலிசா

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஓவியத்தைச் சேதப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதால், குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் பாதுகாக்கப்படுகிறது.

லியானோர்டோ டாவின்சி வரைந்த மோனலிசாவின் புன்னகையில் மயங்காதார் யாருமில்லை. உதட்டில் புன்னகையும், கண்களில் சோகமும் ததும்பும் இவ்வோவியம் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன. அவற்றில் சில, ‘மோனலிசா கருவுற்றிருந்தார் அதனால்தான் வயிற்றை மறைத்துக்கொண்டிருக்கிறார்’... ‘உடலுக்கும் முகத்துக்கும் வித்தியாசம் தெரிவதால் இது பெண் உருவம் அல்ல, ஆண்’... ‘லியானோர்டோ தம் அம்மா காத்திரினா டாவின்சியை வரைந்திருக்கிறார்’... ‘லியானோர்டோ இளமையில் தாடி இல்லாமல் இருந்ததுபோல உள்ளது’... ‘ஆணும் பெண்ணும் கலந்த ஓவியம் இது’. இப்படி நிறைய!

மோனலிசா ஓவியம்

குறுகிய நேரமே இருந்ததால், மோனலிசா ஓவியத்தைப் பார்த்துவிட கால்களில் வேகம் கூட்டினோம். சித்திரை திருவிழாபோல கூட்டம் களைகட்டியது. கயிறு இழுக்கும் போட்டியில் நடுவில் உள்ள துணியாக நான் நின்றேன். இருபுறமும் என்னை திருகி முன்னும் பின்னும் தள்ளிக்கொண்டே இருந்தார்கள். நம்பிக்கை சிறிது சிறிதாக விலகிய நேரம், வரிசையை விடுத்து, எங்களைக் கடந்து முன்னே சென்ற ஒருசிலர் திரும்பி வரவில்லை என்பதைக் கவனித்த டிலானி, தானும் முன்னே சென்றார். சில நிமிடங்களில், “வாருங்கள்” என்று செல்போனில் அழைத்தார். சென்றோம், வரிசையில் எப்படியோ நுழைந்துவிட்ட டிலானியை நாங்களும் பின்தொடர்ந்தோம்.

கூட்டத்தில் நீந்தி, மாடிக்குச் சென்றால், கீழிருந்ததைவிட அதிகமானோர் அங்கிருந்தார்கள். பல்வேறு வரிசைகள் இருந்தன. மெல்ல நடந்து, பரிசோதனை கடந்து, மோனலிசா ஓவியம் உள்ள அரங்கில் நுழைந்தோம். அங்கும் ஜனத்திரள். நடந்துகொண்டே மோனலிசாவைப் பார்த்தோம். வித்தாரக்கள்ளி, எல்லாரையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘என்னைத்தான் பார்க்கிறாள்’ என ஒவ்வொருவரும் விழியோடு விழி கோத்து நின்றோம்.

லிவியா

நிச்சயம் இன்னொரு முறை பாரிஸ் வர வேண்டும். லூவர் அருங்காட்சியகத்தில் நாள் முழுவதும் செலவழிக்க வேண்டும் என்று நினைத்தபடி வீட்டுக்குப் புறப்பட்டேன்.

உயரமான குன்று

மறுநாள், 130 மீட்டர் உயரமுள்ள மோந்தேமார்த்தே குன்றுக்குச் சென்றோம். உரோமையர்கள் பிரான்சை ஆட்சி செய்த காலத்தில், இக்குன்றில், செவ்வாய் மற்றும் புதன் கோள்களுக்காகக் கோயில்கள் கட்டி வழிபாடு நடத்தினார்கள். பின்னாட்களில், பாரிஸின் முதல் கத்தோலிக்க ஆயரும், ரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்தவருமான புனித டென்னிஸ் நினைவாக இவ்விடத்தில் கோயில் கட்டப்பட்டது.

மோந்தேமார்த்தே குன்றில் கோயில்

நூற்றாண்டுகள் கழிந்தன. பாரிஸ் நகரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் எனத் திட்டமிட்ட அரசாங்கம், இக்குன்றில் திரு இருதய ஆண்டவர் பேராலயம் எழுப்பியது. 1919 அக்டோபர் 16-ல் அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலின் அகலம் 85 மீட்டர், நீளம் 35 மீட்டர். கோயிலின் அதிகபட்ச உயரம் 91 மீட்டர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வந்து செல்லும் இந்தக் கோயிலில் பிரான்சின் மிகப்பெரிய மற்றும் அதிக எடையுள்ள (18,835 கிலோ) மணி தொங்குகிறது.

குன்றடிக்குச் சென்று, பயணச்சீட்டு வாங்கி கம்பி ரயில் ஏறினோம் (Funiculaire railway). கண்ணாடி பெட்டியில் நின்றோம். எங்கள் பெட்டி புறப்பட்ட அதே நேரத்தில், மேலிருந்து ஒரு பெட்டி கீழே இறங்கத் தொடங்கியது. செங்குத்தாக, இரண்டும் ஒரே நேரத்தில் பயணித்தது. நாங்கள் மேல் நிறுத்தத்தைச் சேர்ந்தபோது, மேலிருந்து இறங்கிய பெட்டி கீழே சென்று சேர்ந்தது. கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். கட்டிடத்தின் பிரம்மாண்டத்தையும், அங்கிருந்தபடியே நகரின் அழகையும் ரசித்தோம். இறங்குகையில் கம்பி ரயிலுக்குச் செல்லாமல், படியில் நடந்தோம். பசுஞ்சோலை சுவாசித்த காற்றை, நுரையீரலில் உறிஞ்சிக்கொண்டோம். பூங்காவில் அமர்ந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் புறப்பட்டோம்.

மகதலா மரியா கோயில்

மகதலா மரியா

மகதலா மரியா (La Madeleine) கோயிலும் பார்க்க வேண்டியது என்று சொன்னதால் அங்கு சென்றோம். இந்த இடத்தில் 1764-ல் கோயில் கட்டும் பணி தொடங்கியது. கட்டிட வடிவமைப்பாளர் 1777-ல் இறந்துவிட்டதால், அதுவரை கட்டப்பட்டதை முழுவதுமாக இடித்துவிட்டு முற்றிலும் புதிய கோயிலை மற்றொருவர் தொடங்கினார். ஆனால், புரட்சி தொடங்கிவிட்டதால் கட்டிட வேலை தொடரவில்லை. பின்னாளில், இரண்டாவது கட்டிடமும் இடிக்கப்பட்டது. முதலாம் நெப்போலியன் புதிய கட்டிட வடிவமைப்பாளரை நியமித்து இக்கோயிலைக் கட்டினார்.

இயேசுவைப் பின்பற்றிய பெண்களுள் முக்கியமானவர் மகதலா மரியா. இயேசுவின் கால்களை எண்ணெய்யால் கழுவி, தன் பாவத்துக்குப் பரிகாரம் தேடியவர் இவர். இவரிடமிருந்து 7 தீய ஆவிகளை இயேசு ஓட்டியதாகவும், இயேசுவுக்கு இவர் பணிவிடைகள் செய்ததாகவும், இயேசுவின் மரணம் மற்றும் அடக்க நேரத்தில் உடனிருந்ததாகவும், உயிர்த்த இயேசு, மகதலா மரியாவுக்கு முதலில் காட்சி கொடுத்ததாகவும் விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியில் நின்று பார்க்கும்போது பழங்காலத்திய கிரேக்க கோயில் போலவே உள்ளது. படிகளில் ஏறி கோயில் நுழைவாயிலுக்குச் சென்றோம். என் கவனம் கதவில் மையம் கொண்டது. கடவுள் மோசேவுக்கு (Moses) வழங்கிய 10 கட்டளைகள் அற்புதமாகக் கதவில் செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே சென்றோம். கிரேக்க கோயில் கட்டிடக் கலையில் டோரிக், ஐயோனிக் மற்றும் கொரிந்தியன் எனும் 3 பிரிவுகள் உள்ளன. அதில், கொரிந்தியன் வடிவத்தைச் சேர்ந்த 52 தூண்கள் 20 மீட்டர் உயரத்தில் இருக்கக் கண்டோம். பீடத்தின் மேற்புற தலைக்கட்டில் (Pediment) உலகக் கடைசியில் நிகழும் தீர்ப்பு வரையப்பட்டுள்ளது. உயரமான பீடத்தில், மகதலாவை வானதூதர்கள் தூக்கிச் செல்வதுபோன்ற சிலை உள்ளது. ‘விண்ணுக்குச் செல்லும் மகதலா மரியா’ எனும் குறிப்பை வாசித்தேன்.

கட்டைவிரல்

அங்கிருந்து, ‘பாரிஸின் பாதுகாப்பு’ என்னும் நினைவுச்சின்னம் இருக்கின்ற இடத்திற்குச் சென்றோம். அப்பகுதி வணிகக் கட்டிடங்களால் நிறைந்துள்ளது. அங்கு சென்றதும் முதலில் கண்ணில் பட்டது உயரமான ஒரு கட்டைவிரல். சீசர் பால்டாசினி எனும் சிற்பி, தன்னுடைய கட்டைவிரலை, 40 சென்டிமீட்டர் உயரத்தில் உலோகத்தில் செதுக்கி பன்னாட்டு கலை கண்காட்சியில்’ வைத்தார். அதற்கு, ‘கை’ என்று பெயர் சூட்டியிருந்தார். பார்வையாளர்கள் மிகவும் ரசித்தார்கள். பல்வேறு அளவுகளில் உலகின் பல நாடுகளுக்கும் அது விற்பனையானது.

கட்டை விரல்

சீசரை அழைத்த பிரான்ஸ் அரசு, கட்டைவிரலைப் பெரிய அளவில் செய்ய கேட்டுக்கொண்டது. அதன்படி, 12 மீட்டர் உயரம், 18 டன் எடையுடன், வெண்கல கட்டைவிரலைச் செதுக்கினார் சீசர். 1994-ல் திறக்கப்பட்ட இக்கட்டைவிரலில் சீசரின் விரல் ரேகைகூட துல்லியமாகத் தெரிகிறது.

மறுநாள் காலை, நண்பர்களுக்கு விடைகொடுத்துவிட்டு, தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றேன். நான் செல்ல வேண்டிய தடத்தில், வேலை நடப்பதாகவும், அடுத்த நிலையத்துக்குச் செல்லுமாறும் சொன்னார்கள். அந்த வண்டியைத் தவறவிட்டால் அடுத்த 3 மணி நேரத்துக்கு வண்டியில்லை என்பதால் பறந்து சென்றேன். 10 நிமிடம் தாமதமாகிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே சென்றபோது, நான் செல்ல வேண்டிய வண்டி 20 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படுவதாகச் சொன்னார்கள். என்னுடைய ஐரோப்பிய பயணத்தில் தொடர்வண்டி தாமதமாகப் புறப்படுவது அதுதான் முதல் முறை. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்னும் மகிழ்ச்சியில் தொடர்வண்டியில் அமர்ந்தேன்.

(பாதை விரியும்)

பெட்டிச் செய்தி:

அன்பினால் இழந்த அடையாளம்

நகரத்தின் வளர்ச்சியை சாலைகளும், நாகரிகத்தின் வளர்ச்சியை மக்களின் நடத்தைகளும் அறிவிக்கின்றன. ஆனால், பாரிஸின் சாலைகளும், பாதாள தொடர்வண்டி பாதைகளும் ஐரோப்பிய உணர்வை எனக்கு அளிக்கவே இல்லை. எங்கு பார்த்தாலும் ஆசிய, ஆப்பிரிக்க முகங்கள். நடப்பதும், ஓடுவதும், பேசுவதும், விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் கடப்பதும் நல்ல உணர்வை எனக்குத் தரவில்லை. நண்பரிடம் கேட்டேன், “ஆமாம். வேலை தேடியும், அகதிகளாகவும் நிறைய பேர் இங்கு வந்திருக்கிறார்கள். தங்கள் கலாச்சாரமும், ஊரின் இயல்பும் திருடப்பட்டதாக வருந்திய உள்ளூர் மக்கள் பலர், பாரிஸை விட்டு கிராமப்புறங்களுக்குச் சென்றுவிட்டார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE