போதைக்கு எதிரான போரில் வெல்வோம்!

By காமதேனு

போதைப்பொருட்கள் நமது நினைவைச் சிதைப்பதுடன் நமது சுயமரியாதையுடன் தொடர்புடைய அனைத்தையும் அழிக்கின்றன என்றார் ‘நிர்வாணா’ எனும் புகழ்பெற்ற இசைக்குழுவை நடத்திவந்த கர்ட் கோபெய்ன். போதைப்பொருள் பழக்கத்துக்குப் பரிச்சயமான அந்த இசை மேதை, இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொள்ள அந்தத் தவறான பழக்கம் முக்கியக் காரணமானது.

இன்றைக்குத் தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது ஆழ்ந்த கவலையளிக்கிறது. போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவாகும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களைப் போதைக் கும்பல்கள் குறிவைப்பதும் அதிகரித்திருக்கிறது.

புதுப்புது வடிவில் போதைப் பொருட்களை போதை கும்பல்கள் அறிமுகம் செய்வது இன்னொரு பிரச்சினை. எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே போதையை ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை இளைஞர்களிடம் அறிமுகப்படுத்துவதை அக்கும்பல்கள் ஓர் உத்தியாகப் பயன்படுத்துகின்றன.

2022-ம் ஆண்டுவாக்கில், இந்தியாவின் 100 மாவட்டங்களைப் போதைப்பொருள் இல்லா மாவட்டங்களாக மாற்றப்போவதாகக் கடந்த ஆண்டே மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அது எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என இனிமேல்தான் தெரியும். போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக அவ்வப்போது கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாதது ஏன் எனும் கேள்வியும் எழுகிறது.

போதைப் பொருட்கள் தனிமனித அளவில் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை. பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதை அன்றாடச் செய்திகளே நமக்கு உணர்த்துகின்றன. எனவே, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளின் நச்சு வலைப்பின்னல்களை முழுமையாகக் கண்டறிந்து அதை ஒழித்துக்கட்ட வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE