“இனிமேல் எப்போது பார்ப்போமோ?” என்று யாருக்காவது பிரியாவிடை கொடுத்திருக்கிறீர்களா? எதிர்பாரா சூழலில் அவர்களை மறுபடியும் சந்தித்து ஆச்சரியத்தில் உறைந்திருக்கிறீர்களா? ஏதென்ஸிலிருந்து நான் கிளம்பியபோது, இந்நகருக்கு எப்போது இனி வரப்போகிறேனோ என ஏங்கியிருக்கிறேன். பாரிஸின் லூவர் அருங்காட்சியகம் என் ஏக்கத்தைத் தணித்தது.
லூவர் அருங்காட்சியகம்
பாரிஸ் நகரைப் பாதுகாக்க, 12-ம் நூற்றாண்டில் ஒரு கோட்டை எழுப்பினார் அரசர் இரண்டாம் பிலிப். அதே இடத்தில், 1546-ல், அரசர் முதலாம் பிரான்சிஸ், லூவர் அரண்மனை கட்டத் தொடங்கினார். கலைப் பொருட்களைச் சேகரிக்கும் தீரா தாகம் கொண்டவர் முதலாம் பிரான்சிஸ். இவருக்குப் பிறகு வந்த அரசர்களும் அரண்மனை பரப்பளவை அதிகரிப்பதிலும், செழுமைப்படுத்துவதிலும், கலைப் பொக்கிஷங்களைச் சேகரிப்பதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இங்கிலாந்தின் முதலாம் சார்லஸை வெற்றிகொண்டபோது, அவரது கலைச் சேகரிப்புகள் அனைத்தையும் லூவர் அரண்மனைக்கு அள்ளி வந்தார் 14-ம் லூயிஸ்.
உலகம் முழுவதிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த, கலைநயம் மிக்க அரண்மனையில் அரசர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஏறக்குறைய 200 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, 1793 ஆகஸ்ட் 10-ல் லூவர் அரண்மனை, லூவர் அருங்காட்சியகமானது. 60,600 சதுர மீட்டர் பரப்பளவில், 11 ஆயிரம் ஆண்டுகால மனித நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலைப்பொருட்களுடன் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1 கோடி பேர் இங்கே வருகிறார்கள்.
நினைவுகளை வருடிய காட்சிகள்
மாலைநேரத்தில் லூவருக்குச் சென்றோம். இணையதளம் வழியாக முன்பே நுழைவுச்சீட்டு பெற்றிருக்க வேண்டும் என்பது அங்கு சென்ற பிறகுதான் அறிந்தோம். உடனே, இணையத்தில் முன்பதிவு செய்தாலும், நாங்கள் உள்ளே செல்வதற்கு ஒரு மணி நேரம் இருந்ததால், தெருக்களைச் சுற்றிவிட்டு திரும்பினோம்.
முதல் அரங்கில் நுழைந்ததும், ஏதென்சில் இருப்பதுபோன்ற உணர்வு மேலெழுந்தது. அரங்கம் முழுவதும் கிரேக்க கடவுளர்களின் சிற்பங்கள். அவர்கள் அனைவரும் என்னையே பார்ப்பதுபோல இருந்தது. பிரம்மாண்டமான ஏதென்னா, பல்லாஸ் சிலைகளும், சேயுஸ், மற்றும் உலிசெஸ் சிலைகளும் அருகருகே இருந்தன. நளினத்துடன் இடுப்பு வளைந்திருக்க, இரண்டு கைகளும் இல்லாத பேரழகி அஃரோடைட் சிலையும் கவர்ந்திழுத்தது. ஒவ்வொரு சிலைக்கும் வாழ்வியல் கதை இருப்பதால், வீட்டுக்குத் திரும்பியதும், அஃரோடைட் மற்றும் பல்லாஸ் இருவரையும் பற்றி வாசித்தேன்.
அழகு மற்றும் அன்பின் தேவதை
அஃரோடைட் அழகின் தேவதை. முன்னொரு காலத்தில், பெலியஸ் மற்றும் தெடிஸ் இருவருக்கும் திருமணம் முடிவானது. அனைத்து ஆண் கடவுள்களும் பெண் கடவுள்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். முரண்பாடுகளின் பெண் கடவுளான எரிஸ் என்பவரை மட்டும் அழைக்கவே கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். ஆனால், திருமணம் நடக்க இருப்பதை எரிஸ் அறிந்தார். ஆப்பிள் பழத்துடன் திருமண அரங்கத்துக்குள் நுழைந்தார். அங்கிருந்த பெண் கடவுள்களுக்கு மத்தியில் ஆப்பிள் பழத்தை எறிந்துவிட்டு, “உங்களில் மிகவும் அழகானவர் யாரோ அவர் இதைப் பிடியுங்கள்” என்றார்.
பெண் கடவுள்கள் அனைவரும் எழுந்து ஓடினார்கள். அவர்களுள், போர்களின் கடவுளான ஏதென்னா, பெண் கடவுள்களின் அரசி ஹேரா, மற்றும் அழகின் கடவுள் அஃரோடைட் மூவரும் அடங்குவர். தெருவோர பூனை போல எல்லாரும் சண்டையிட்டார்கள். பிறகு, கடவுள்களுக்கெல்லாம் கடவுளான சேயுஸ் வந்தார். “இங்கே என்ன நடக்கிறது?” என்று கேட்டார். சொன்னார்கள். அவர் ஆப்பிளை எடுத்தார். கடவுளின் தூதரான ஹெர்மெஸிடம் கொடுத்து,“மனிதர்களிலேயே மிகவும் ஆண்மைத் தினவுள்ள பாரிசை (Paris) போய் பாருங்கள். உங்கள் மூவரில் யார் மிகவும் அழகானவர் என்பதை அவரிடம் கேளுங்கள்” என்றார்.
பெண் கடவுள்களுடன் பறந்து சென்றார் ஹெர்மெஸ். ஒரு மலையில் பாரிசைப் பார்த்தார். அமைதியாக ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பாரிசிடம், “உங்களிடம் இந்த ஆப்பிளைக் கொடுக்கும்படி சேயுஸ் அனுப்பினார். இந்த மூன்று பெண் கடவுள்களில் யார் பேரழகு என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்” என்றார். யாராவது ஒரு கடவுளைத் தேர்வு செய்தால், மற்ற இருவரும் தன்னை விரும்பமாட்டார்கள், தனக்குத் தீங்கிழைப்பார்கள் என்பதை அறிந்த பாரிஸ் வருந்தினார். “நீங்கள் மூவருமே பேரழகிகள். இந்த ஆப்பிளை மூன்று பங்காகப் பிரிக்கிறேன்” என்றார். மூவரும் கோபத்துடன் உற்று நோக்கினார்கள். “யாராவது ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்!” என்றார்கள்.
அஃரோடைட் உடலிலிருந்து ஆண்களை மயக்கும் வாசனை காற்றில் மிதந்தது. பாரிஸின் மனதில் ஆசை தூண்டப்பட்டது. கஷ்டப்பட்ட பாரிஸ் கண்களைத் தாழ்த்தினார். இதைக் கவனித்த, ஏதென்னா, “பாரிஸ், நீ என்னைத் தேர்வு செய்தால் நான் உனக்கு வெற்றியைத் தருவேன். என்றென்றைக்கும் மிகப்பெரிய வீரனாக நீ இருப்பாய்” என்றார். இதைக் கேட்ட ஹேரா கோபப்பட்டார். பாரிஸின் அருகில் சென்று, “பாரிஸ் நீ என்னைத் தேர்வு செய்தால், உனக்குப் புகழும் மகிமையும் கொடுப்பேன். என்றைன்றைக்குமான மிகப்பெரும் பேரரசனாக நீ திகழ்வாய்” என்றார். அஃப்ரோடைட், பாரிஸின் அருகில் சென்று, தன் தோளையும், மார்பகத்தையும் காட்டி, “பாரிஸ், நீ என்னைத் தேர்ந்தெடுத்தால் மிகவும் அழகான பெண்களின் அன்பை உனக்கு வழங்குவேன்” என்றார். யாராலும் தடுத்து நிறுத்த முடியாதபடி ஓடிய பாரிஸ், ஆப்பிள் பழத்தை அஃரோடைட்டிடம் கொடுத்தார். ஏத்தென்னாவும் ஹேராவும் கடுங்கோபத்துடன் திரும்பிச் சென்றார்கள்.
அஃப்ரோடைட் தான் கொடுத்த உறுதிமொழியில் உறுதியாக இருந்தார். பாரிஸை, மெனிலாஸ் அரண்மனைக்குக் கூட்டிச் சென்றார். பெண்களிலேயே மிகவும் அழகான ஹெலன் என்னும் அரசியை மணமுடிக்க வைத்தார். அரண்மனையிலிருந்து ஹெலனைத் தூக்கி வருவதற்கு உதவி செய்தார். தன் அரண்மனைக்குத் திரும்பிய அரசர் மெனிலாஸ், நடந்ததைப் பார்த்து கொதித்தெழுந்தார். கிரேக்கத்தின் அனைத்து தலைவர்களையும் ஒன்று கூட்டினார். “நாம் அனைவரும் ட்ராய்க்கு (Troy) எதிராகப் போர் தொடுப்போம். என் மனைவி எனக்குத் திரும்ப வேண்டும்” என்றார். இவ்வாறாக ட்ராஜன் (Trojan) போர் தொடங்கியது.
ஏதென்னா மற்றும் பல்லாஸ்
அடுத்தது பல்லாஸ். ஆயுதங்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஏதென்னா, தன் வயதொத்தா பல்லாஸ் விளையாடுவதைப் பார்த்தாள். இருவரும் நண்பர்களானார்கள். ஒருநாள் ஏதென்னா, விளையாட்டாக பல்லாஸை நோக்கி ஈட்டியை எறிந்தார். இதயத்தில் காயப்பட்ட பல்லாஸ் இறந்தாள். பெருங்கவலை ஏதென்னாவை சூழ்ந்தது. மரத்துண்டில் பல்லாஸை பொம்மையாகச் செய்தார் ஏதென்னா. தன் தந்தை சேயுஸிடம் எடுத்துச் சென்று நடந்ததைச் சொல்லி, “தந்தையே, பல்லாதியோன் என நான் அழைத்த, என் தோழியின் சிலையை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள். அவரும் சம்மதித்தார்.
ஒருநாள் சேயுஸின் கையிலிருந்து தடுமாறிய அச்சிலை பூமியில் ஒரு குடிசையின் முன் விழுந்தது. எதிர்காலத்தில் ட்ராய் அரசை நிறுவிய, இலியோன் “வானிலிருந்து விழுந்த இச்சிலை, நிச்சயம் கடவுளர்களின் பரிசாக இருக்க வேண்டும்” என்று சொல்லி, ட்ராய் நகரத்தில் இருந்த ஏதென்னா கோயிலில் பல்லாதியோனின் சிலையை வைத்தார்.
காலம் கடந்தது. ட்ராஜன் போர் தொடங்கியது. கிரேக்கர்கள் ட்ராஜனுக்கு எதிராக நின்றார்கள். கிரேக்கர்களுக்கு ஏதென்னா துணையாக இருந்தார். இருப்பினும் கிரேக்கர்களால் வெற்றிபெற இயலவில்லை. “என் கோயிலில் நிற்பது நிச்சயம் பல்லாதியோன்தான். அவள்தான், ட்ராய் நகரத்தைக் காப்பாற்றுகிறாள்” என்று சொன்ன ஏதென்னா, தன் நம்பிக்கைக்கு உரிய, உலிசெஸ் எனும் வீரரைப் பார்க்கச் சென்றார். அனைத்து வீரர்களிலும் மிகவும் தந்திரமானவர் உலிசெஸ். “நீ என்ன செய்தாலும் சரி, ட்ராய் நகரில் இருக்கும் என் கோயிலில் உள்ள பல்லாதியோனை வெளியே கொண்டு வா” என்றார் ஏதென்னா. உலிசெஸ், மற்றும் அவரின் நண்பர் டயோமெடெஸ் இருவரும், பிச்சைக்காரர்கள்போல மாறுவேடத்தில் செல்ல முடிவெடுத்து, காட்டு விலங்குகளின் ஆடை அணிந்தார்கள். கெட்ட வாடை அடிக்க வேண்டும் என்பதற்காக செம்மறி ஆட்டின் தோலை உடலில் தேய்த்தார்கள். தலை முடியில் வெள்ளை நிறம் பூசினார்கள். கூன் வேடத்துடன் வயதானவர்கள் போல ட்ராய் நகருக்குள் சென்று, கோயிலுக்குள்ளும் நுழைந்தார்கள்.
கோயிலில், தலைமை பெண் குரு தியானோ இருந்தார். உலிசெஸ், தியானோவைப் புகழ்ந்தார். தான் யார், எங்கு இருக்கிறோம் என்பதை தியானோ மறக்கும்படி பாடினார். தியானோ புகழ்ச்சியில் மயங்கி நின்ற வேளையில், பல்லாதியோனைத் தருமாறு கேட்டார் உலிசெஸ். தியானோ மறுக்கவேயில்லை. கொடுத்தார். பல்லாதியோனை எடுத்துக்கொண்டு உலிசெஸ் மற்றும் டயோமெடெஸ் இருவரும் கிரேக்கத்திற்கு திரும்பினார்கள். கிரேக்கர்கள் ட்ராஜன் போரில் வென்றார்கள்.
கதைகளைச் சுமந்து நிற்கும் சிலைகளைப் பார்த்துக்கொண்டே நடந்தோம். காலச் சக்கரத்தில் மகிழ்ந்து சுழன்றோம்.
(பாதை விரியும்)
பெட்டிச் செய்தி:
வேட்டைக் கடவுள்
அருங்காட்சியகத்தில், நாயுடன் நிற்கும் வேட்டைக் கடவுள் ஆர்ட்டிமிஸ் சிலையைப் பார்த்தேன். 1556-ல் ஃபோன்டைன்பேலு அரண்மனையிலும், 1602-ல் லூவர் அரண்மனையிலும் இருந்த இச்சிலை, 1696-ல் வெர்செல்லிஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் லூவர் வந்தது. ஆர்ட்டிமிஸ் குறித்து கொடூரமான ஒரு கதை இருக்கிறது. ஆற்றில் நிர்வாணமாகக் குளித்துக்கொண்டிருந்தார் ஆர்ட்டிமிஸ். வேட்டைக்காரரான ஆக்டியோன் அதைத் தற்செயலாகப் பார்த்துவிட்டார். ஆர்ட்டிமிஸ் கோபமானார். ஆக்டியோனை நாயாக மாற்றினார். தன் நாய்களை ஏவினார். ஆக்டியோனை துண்டு துண்டாகக் கிழித்துக் கொன்றன நாய்கள்.