சிறகை விரி உலகை அறி - 58: அன்பு, அருள், வீரம்!

By சூ.ம.ஜெயசீலன்

கல்லாகவும் கடவுளாகவும் நிற்கிறார்கள் சுமைதாங்கிகள். இறக்கிவைக்க இடம் தேடும் ஒருவரையும் தடுப்பதில்லை அவர்கள். நாடுகள் மாறலாம், இனம் வேறுபடலாம், வார்த்தைகள் தடுமாறலாம். ஆனாலும், நம்பிக்கையோடு வரும் யாவரையும் ஆறுதலோடு அனுப்பிவைக்கிறார்கள்.

சுமைதாங்கியைத் தேடி ஸ்விட்சர்லாந்திலிருந்து புறப்பட்ட இலங்கை தமிழர்களுடன் சேர்ந்துகொண்டேன். 3 நாட்கள் அவர்களுடன் தங்கி, வழிநடத்தும் பொறுப்பை எனக்கு வழங்கியிருந்தார்கள். பெரும்பாலானோர் சைவ சமயத்தவர்கள். இரவு முழுதும் பயணித்து, பிரான்ஸ் நாட்டின் லூர்து கிராமத்தில் இறங்கினோம். தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி மாதா திருத்தலம்போல மிகவும் புகழ்பெற்றது லூர்து மாதா திருத்தலம்.

சிறுமி பெர்னதெத்

பிரான்ஸ் நாட்டின் தெற்கு எல்லையில் உள்ளது லூர்து எனும் கிராமம். இங்கிருந்த ஏழை குடும்பத்தில், 9 குழந்தைகளுள் முதலாவதாக பிறந்தவர் பெர்னதெத். சிறுமியாக இருந்தபோது (1858 பிப்ரவரி 11-ல்) விறகு பொறுக்க தம் நண்பருடனும், சகோதரியுடனும் பெர்னதெத் சென்றார். மதியவேளையில் மசபெல் குகைக்கு அருகில் நின்றபோது, திடீரென எழுந்த ஒளியில் வெள்ளை ஆடை அணிந்த, ஜெபமாலை தாங்கிய ஒரு பெண் நிற்பதாகச் சொன்னார். மற்ற இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. இதை அறிந்த பெற்றோர், “மறுபடியும் அங்கே செல்லக் கூடாது” என்று கண்டித்தனர். பயமறியாச் சிறுமியான பெர்னதெத் அடுத்தடுத்து அங்கு சென்றார்.

மசபெல் குகை

மூன்றாவது முறை அங்கு சென்றப்போது, “இரண்டு வாரங்கள் தினமும் வா” என்றார் காட்சி கொடுத்த அந்த வெள்ளை ஆடைப் பெண். 8-வது காட்சியில், “பாவிகள் மனம் திரும்ப கடவுளிடம் மன்றாடு” என்று பெர்னதெத்திடம் சொன்னார். 9-வது காட்சியில், “அந்த இடத்தில் உள்ள புற்களை உண்டு, அங்குள்ள சுனையில் வரும் நீரைக் குடி. உன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்” என்றார். 13-வது காட்சியில், “பவனியாக இங்கு வர வேண்டும். எனக்குக் கோயில் கட்ட வேண்டும். குருக்களிடமும் மக்களிடமும் சொல்” என்றார். “உங்கள் பெயரென்ன?” என்று கேட்ட சிறுமியிடம், 16-வது காட்சியில், “நாமே அமல உற்பவம்” அதாவது, பாவக்கறை ஏதுமின்றி கருவான இயேசுவின் தாய் என்று அறிவித்தார். மொத்தம் 18 முறை காட்சி கொடுத்தார்.

அன்னை மரியாவின் புகழ் பரவியது. உலகம் முழுவதிலிருந்தும், பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். இதுவரை 7 ஆயிரம் புதுமைகள் (miracles) நடந்துள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும், மருத்துவப் பரிசோதனைகளால் உறுதிசெய்யப்பட்ட 67 புதுமைகளை மட்டுமே, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை அங்கீகரித்துள்ளது.

எங்கும் தமிழ்

விடுதியில் மதிய உணவுக்குப் பிறகு சற்று ஓய்வெடுத்தோம். ஓய்வெடுக்காமலேயே ஜெபம் செய்யவும், கோயிலைச் சுற்றிப் பார்க்கவும் சிலர் புறப்பட்டார்கள். வேடிக்கை பார்ப்பதுபோல செல்லாமல், அதற்கென நேரம் ஒதுக்கிச் செல்ல விரும்பினேன். மாலையில் சென்றபோது, சாலையோரத்தில் நீல நிறக் கோடு போடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். நீல நிறம் மாதாவின் நிறம் என கிறிஸ்தவர்கள் நம்புவதுண்டு. பார்க்க வேண்டிய புனித இடங்களை நீல நிறக் கோட்டைப் பின்பற்றி, யாரிடமும் வழி கேட்காமலேயே சென்று பார்க்கலாம். நிறைய தன்னார்வலர்கள் மாற்றுத்திறனாளர்களை சக்கர நாற்காலிகளில் அமரச் செய்து தள்ளிச் சென்றதைப் பாத்தேன். கோயிலுக்கு அருகே செல்லச்செல்ல, ஏதோ தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வு எழுந்தது. விசாரித்தேன். பாரிஸ் நகரிலிருந்து 8 பேருந்துகளில் திருப்பயணிகள் வந்திருந்தார்கள். அனைவரும் இந்திய மற்றும் இலங்கை தமிழர்கள். தெரிந்த சிலரிடம் பேசினேன்.

சூரியச் சூடு தணிந்த வேளையில், மசெபெல் குகைக்குச் சென்றேன். தரையில் அமர்ந்தேன். காட்சிகளைக் கற்பனை செய்தேன். மனம் அமைதியானது. பெர்னதெத் நீர் அருந்திய சுனையில் இப்போதும் நீர் சுரக்கிறது. சுகம் வேண்டி அதில் நீராடுகிறவர்கள் உண்டு. மறுநாள் காலையில் நானும் சென்றேன். உள்ளே சென்றதும் கட்டிக்கொள்ள துண்டு கொடுத்தார்கள். அடுத்த அறையில் தண்ணீர் தொட்டி இருக்கிறது. அங்கு நின்ற இரண்டு பேர், நான் தொட்டியில் இறங்கியதும் ஜெபிக்கச் சொன்னார்கள். அவர்களே என்னை நீரில் இறக்கி எடுத்தார்கள். குளிர்ந்த நீரில் மனமும் குளிர்ந்தது.

பாரிஸ் நகரம் நோக்கி

காலையில் தொடர்வண்டியில் ஏறி பாரிஸ் சென்றேன். அழைத்துச் செல்ல நண்பரும் எழுத்தாளருமான ஈழபாரதி, தன் மனைவி டிலானியுடன் வந்திருந்தார். திருச்சி, வாழவந்தான்கோட்டை முகாமை மையமாக வைத்து, பல்வேறு முகாம்களை ஒருங்கிணைத்து 2007-ல் நான் நடத்திய ‘வேர்விடும் நம்பிக்கை’ மாத இதழில் எழுதியவர் ஈழபாரதி. அப்போது தொடங்கிய நட்பு இது. நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பிரான்ஸ் நாட்டின் அடையாளங்களுள் ஒன்றான, ‘வெற்றியின் வளைவு’ (Arc de Triomphe) பார்க்கச் சென்றோம். கோட்டைச் சுவர் ஏதுமின்றி தனித்து நிற்கிறது இவ்வளைவு.

வெற்றியின் வளைவு

ஆஸ்டர்லிஸ் வெற்றிக்குப் (1805) பிறகு, வெற்றியின் நினைவாகவும், பிரான்ஸ் வீரர்களின் ராணுவ சாதனையைக் கொண்டாடும் விதமாகவும் ‘வெற்றியின் வளைவு’ கட்டுமாறு முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார். நெப்போலியனின் பிறந்த நாளான 1806 ஆகஸ்ட் 5 அன்று வேலை தொடங்கியது. அடித்தளம் முடிந்து, தூண் எழும்பிக்கொண்டிருந்தபோது, 1810-ல் ஆஸ்திரியப் பேரரசரின் மகள் மரிய லூயிஸை நெப்போலியன் மணமுடித்தார். தன் மனைவிக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்க நினைத்த நெப்போலியன், வெற்றியின் வளைவை பலகைகளாலும், சித்திரப் படங்களாலும் தற்காலிகமாக முழுமை செய்து, அதனூடே அழைத்து வந்தார்.

வெற்றியின் வளைவு

50 மீட்டர் உயரம், 48 மீட்டர் அகலம் மற்றும் 4 தூண்களுடன்கூடிய இந்த வளைவைக் கட்டி முடிக்க 30 ஆண்டுகள் ஆகின. வளைவு நடுவில் இருக்க, அதைச் சுற்றிலும் பெருவட்டம் இருக்கிறது. அதிலிருந்து நகரின் 12 தெருக்கள் நட்சத்திரம் போல செல்கின்றன. 1836 ஜூலையில் முறைப்படி திறக்கப்பட்ட இவ்வளைவில், 284 படிகள் இருக்கின்றன. மின்தூக்கி உண்டு என்றாலும், பாதிவரை சென்றுவிட்டு அங்கிருந்து, மறுபடியும் படிகளில் ஏறியே உச்சிக்குச் செல்ல முடியும். அருங்காட்சியகமும் உள்ளது. குடியரசு காலத்திலும் பேரரசர் காலத்திலும் நடந்த 128 போர்களின் பெயர்களும், அதில் பங்கேற்ற தளபதிகளின் பெயர்களும் என மொத்தம் 660 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக 1835-ல் எடுத்த கணக்கெடுப்பு சொல்கிறது.

வளைவின் நான்கு தூண்களிலும் சிற்பங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. டூலரிஸ் அரண்மனையைப் பார்த்தபடி இருக்கிற தூண்களில், நெப்போலியனின் வெற்றி ஒரு பக்கமும். தன்னார்வலர்களின் பிரம்மாண்டமான புறப்பாடு (1792) மறுபக்கமும் உள்ளது.

வளைவைச் சுற்றி 12 தெருக்கள்

மக்களின் குடியிருப்புப் பகுதியை (Neuilly-Sur-Seine) நோக்கியுள்ள தூண்களில், 1814-ன் நிகழ்வுகளைக் குறிக்கும், ‘எதிர்ப்பு’ மற்றும் ‘அமைதி’ சிற்பங்கள் அமைந்துள்ளன. இச்சிற்பங்களுக்கு மேலேயும், தூண் தலைப்பு அமைவுக்கு கீழேயும் ஆர்கோல் பாலத்தைக் கடப்பது, அலெக்ஸாண்ட்ரியாவைக் கைப்பற்றியது, தளபதி மார்செயு அடக்க நிகழ்வு, அபு கிர் போர் ஆகியவை உள்ளன. வளைவின் மற்ற இரண்டு பக்கங்களிலும் ஆஸ்டர்லிஸ் போர், ஜெம்மாப்ஸ் போர் ஆகியவை உள்ளன.

அறியப்படாத வீரரின் கல்லறை

வெற்றி வளைவுக்கு நடுவில், ‘அறியப்படாத வீரரின் கல்லறை’ இருக்கிறது. முதல் உலகப் போரில், நாட்டுக்காகப் போரிட்டு இறந்த வீரர்களை நினைவுகூர வேண்டி, போர் முனையில் இறந்த, அடையாளம் தெரியாத வீரர் ஒருவரின் மிச்சங்களை இங்கே புதைத்துள்ளார்கள். ‘நாட்டுக்காகப் போரிட்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, என்றென்றைக்கும் நிரந்தர தீபம் அமைக்கலாமே’ என்று கவிஞரும் பத்திரிகையாளருமான கேப்ரியல் போய்சி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, 1923 நவம்பர் 11-ல் முதன் முறையாக தீபம் ஏற்றப்பட்டது. எப்போதும் எரிகிறது.

அறியப்படாத வீரரின் கல்லறை

நோட்ரடாம் பேராலயம்

மத்திய காலத்தில் ‘கோதிக்’ கலை வடிவத்தில் கட்டப்பட்ட கோயில்களில் மிகவும் முக்கியமானது நோட்ரடாம் பேராலயம். 1163-ல் அடித்தளம் இடப்பட்ட இப்பேராலயத்தின், உயரமான பீடம் 1189-ல் புனிதப்படுத்தப்பட்டது. உட்புறம் 130 மீட்டர் நீளம், 48 மீட்டர் அகலம், கூரை 35 மீட்டர் உயரம் உள்ளது. 68 மீட்டர் உயரமுடைய பிரம்மாண்டமான இரண்டு கோபுரங்கள் இருக்கின்றன.

கூரை எரிந்த நோட்ரடாம் பேராலயம்

பேராலய புனரமைப்பின்போது, 2019 ஏப்ரல் 15-ல் ஏற்பட்ட பெரு நெருப்பில் கூரையின் பெரும்பாலான பகுதிகள் சாம்பலாகின. நான், 2019 ஜுலை மாதம் சென்றேன். கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. எரிந்த நிலையில் இருந்த கோயிலைப் பார்த்தேன். பேரமைதி கவிழ்ந்திருந்தது.

(பாதை விரியும்)

லூர்து மாதா கோயில் முகப்பு...

பெட்டிச் செய்தி:

எதிர்பார்ப்புகளும் எதிர்ப்பும்

பெர்னதெத் சொன்னதை யாரும் அப்படியே நம்பவில்லை என்பதையும், பலரும் பல விதமாகப் பேசினார்கள் என்பதையும் அருங்காட்சியகத்தில் தெரிந்துகொண்டேன். சாட்சியாக, சிலரின் படங்கள், பெயர்கள், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை வைத்திருக்கிறார்கள்.

பாதிரியார் பெயர்மலே - ‘அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கள். அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்’; காவல் துறை அதிகாரி ஜாகோமெட் - ‘எல்லாரையும் உனக்குப் பின் ஓடி வரவைத்துள்ளாய்’; மருத்துவர் போசாஸ் - ‘நீ என்ன பார்க்கிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நீ ஏதோ பார்க்கிறாய் என்பதை நான் நம்புகிறேன்’; திருமதி மில் - ‘நீ பொய் சொன்னால் கடவுள் உன்னைத் தண்டிப்பார்’; திருமதி பைல்ஹாசன் - ‘உனக்குப் பைத்தியம்தான் பிடித்துள்ளது’; அருட்சகோதரிகள் - ‘உன்னுடைய கோமாளித்தனத்தை முடித்துவிட்டாயா? இது எல்லாமே மாயை. நீ மறுபடியும் அங்கே சென்றால் உன்னை சிறையில் அடைத்துவிடுவார்கள்’; பாதிரியார் தமியான் - ’நீ மசபெல் குகைக்குச் செல்வதைத் தடுப்பதற்கு அவர்களுக்கு உரிமையில்லை.’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE