திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய மேயரை தேர்வு செய்வது குறித்து கட்சி நிர்வாகிகளிடமும், மாநகராட்சி கவுன்சிலர்களிடமும் திமுக தலைமை கருத்து கேட்டு வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். இந்நிலையில் மாநககராட்சி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 34-ன்படி மாமன்ற தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். இந்த பதவி விலகல் கடிதம் குறித்து மாமன்றத்தின் பார்வைக்கும், பதிவுக்கும் வைப்பது தொடர்பான சிறப்பு கூட்டம் வரும் 8-ம் தேதி திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்டப மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேயர் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரிடமும், மாநகர மக்கள் மற்றும் அதிகாரிகளிடமும் எழுந்துள்ளது. புதிய மேயராக எந்த கவுன்சிலரை தேர்வு செய்வது என்பது குறித்து, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், மாநகரச் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் திமுக தலைமை கருத்து கேட்டுள்ளதாக தெரிகிறது.
» சிறார்களிடையே வாசிப்புத் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்!
» ஆங்கிலேயர் காலத்தில் ஆயுத கிடங்காக இருந்த திருப்புல்லாணி அரண்மனை மீட்டெடுக்கப்படுமா?
ராஜினாமா செய்த மேயர் பி.எம். சரவணன் சார்ந்துள்ள சமுதாயத்தை சேர்ந்த கவுன்சிலர்களில் ஒருவரை புதிய மேயராக தேர்வு செய்ய கட்சி தலைமை விரும்புவதாக தெரிகிறது.
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டும், திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் அச்சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் அதிகம் இருப்பதாலும், அத்தகைய முடிவுக்கு கட்சி தலைமை வரக்கூடும் என்று, திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே திமுக கவுன்சிலராக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்றிய கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன் ஆகியோரில் ஒருவர் மேயராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் தரப்பிலிருந்து கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பனின் பெயரையும், மாநகர செயலர் தரப்பிலிருந்து கவுன்சிலர் வில்சன் மணிதுரை பெயரையும் பரிந்துரைத்துள்ளதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மகளிர் ஒருவரை மேயராக தேர்வு செய்யும்பட்சத்தில் கவுன்சிலர் சுதா மூர்த்தியின் பெயரும் பரிசீலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, சில திமுக கவுன்சிலர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் மேயர் பதவியை பிடிக்க காய்களை நகர்த்தி வருவதாகவும் தெரிகிறது.
ஆனால். புதிதாக தேர்வு செய்யப்படும் மேயருக்கு கட்சி கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்களா அல்லது வழக்கம்போல் குடைச்சல் கொடுத்து மாநகராட்சி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைப்பார்களா? என்றெல்லாம் கட்சி தலைமை யோசிக்கிறது.
விக்ரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்குப்பின் திருநெல்வேலியின் புதிய மேயராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து கட்சி தலைமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.