ஆசிரியர் நியமனத்தில் அரசுக்கு ஏன் தடுமாற்றம்?

By காமதேனு

அரசு ஒரு முடிவை எடுக்கிறது என்றால் அதன் பின்னே தர்க்கங்கள், நியாயங்கள், நடைமுறைச் சாத்தியங்கள், அறிவார்த்தமான் ஆலோசனைகள் இருக்கும் என்றே நம்புகிறோம். ஆனால், பல தருணங்களில் அந்த நம்பிக்கை பொய்த்துவிடுகிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாகப் பணிநியமனம் செய்ய தமிழக அரசு எடுத்த முடிவும், அதன் பின்விளைவுகளும் இதற்குச் சரியான உதாரணம்.

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் என13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு எடுத்த முடிவுக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு எழுந்ததில் ஆச்சரியமில்லை.

இன்றைய சூழலில் முதுகலை ஆசிரியர்களுக்கே 12 ஆயிரம் ரூபாய்தான் மதிப்பூதியம் என அறிவிக்கப்பட்டதே ஓர் அவலம்தான். அதையும் தாண்டி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேறியவர்களுக்கும் முன்னுரிமை, இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை என்று கூறப்பட்டிருந்தது பல ஆண்டுகளாக ஆசிரியர் கனவில் இருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது. ஆசிரியர் நியமனத்தில் அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளி நிர்வாகங்களே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டதும் குழப்பங்களுக்கு வழிவகுத்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது எனக் கூறியிருப்பது இந்தச் சிக்கலின் தீவிரத்தை உணர்த்துகிறது. ஒருவழியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது ஆறுதல் அளிக்கிறது. எனினும், முன்பே ஏன் இதுகுறித்த முழுமையான ஆய்வுகளைச் செய்யவில்லை என்பது முக்கியமான கேள்வி.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் அதை நோக்கிப் பயணிப்பதே நல்லது. முறையாகத் திட்டமிட்டால் தான் எதற்கும் நிரந்தரத் தீர்வை எட்ட முடியும். அரசு சிந்திக்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE