வானம் பார்த்த விழிகளில் விழும் துளி மழை, விரல் மீட்டிய கூச்சத்தில் மேலேறும் பசு முலை, இரவு குளிப்பாட்டிய புல்லின் நுனிப் பனி, காய்ந்த ஓலையில் முன்னேறும் தீ பொறி. இயற்கையின் பந்தியில் இதயம் நிறைகிறது, இறுகிய உணர்வு தளர்வடைகிறது.
டிட்லிஸின் உரைந்த பனியில் கரைந்த மனது, தொடர்வண்டி ஜன்னலினூடாக சுவிட்சர்லாந்தின் அழகில் கிறங்கியது. பெர்ன் நகரில் இறங்கியபோது, வெண்மையும் கருமையும் கலந்திருந்த கோடைகால முன்னிரவு வரவேற்றது. அழைத்துச் செல்ல மகிழுந்துடன் கஜன் வந்திருந்தார். ஹம்பர்க் நகரில் என்னை வரவேற்ற உறவுக்காரரின் நண்பர் இவர்.
பணமும் பாசமும்
சூரியனில்லாத மாலை வேளையில் நகரின் நயத்தகு அழகை சுற்றிக் காட்டிய கஜன், “சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம் பதுக்கிவைத்திருப்பதாக அடிக்கடி கேள்விப்படுகிறீர்களே! அதுதான் சுவிஸ் மத்திய வங்கி” என்று விரல் நீட்டினார். கண்ணாடியில் பார்த்தபோது, “மத்திய வங்கியின் தலைமையகம் பெர்ன் நகரிலும், சூரிச் நகரிலும் இருக்கிறது” என்றார். எனக்கு ஆஸ்விட்ஜ் நினைவுக்கு வந்தது. வதை முகாம்களில் கைதிகளிடமிருந்து பறிக்கப்பட்ட விலை உயர்ந்த நகைகள் சுவிஸ் மத்திய வங்கியில்தான் அதிகம் முதலீடு செய்யப்பட்டன. 1939 -1945 வரை, 387.8 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் சுவிஸ் மத்திய வங்கிக்கு வந்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சுவிஸ் நாடாளுமன்றக் கட்டிடத்தையும் பார்த்தோம். அருகில் நின்று படமெடுத்த பிறகு வீட்டுக்குச் சென்றோம். மறுநாள், நான் ஜெனிவாவுக்குச் செல்வதை அறிந்த நண்பர், “காத்திருக்க இயலுமா? வேலை முடித்து 3 மணிக்கு வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்றார். பெர்னில் இருந்து ஜெனிவாவுக்கு 2 மணி நேரமாகும். மாலை வேளையில் சென்றால் இடங்களைப் பார்க்க இயலாதென்பதால், நான் தனியாகச் செல்வதாகக் கூறினேன். ஓய்வுக்குத் தயாரானபோது, தங்களின் அறையை எனக்குக் கொடுத்துவிட்டு உள் முற்றத்தில் அவர்கள் படுத்துறங்கினார்கள்.
தடையும் தவிப்பும்
காலையில் ஜெனிவா கிளம்பினேன். நண்பரின் வீட்டுக்கு அருகிலுள்ள நிடார்வெஞ்சன் தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றேன். அங்கிருந்து, இரண்டு வழிகளில் ஜெனிவா செல்லலாம். ஃபிரிபோங் நிலையத்தில் இறங்கி மாறினால் கால் மணிநேரம் சேமிக்க இயலும் என்பதால், அவ்வழியைத் தேர்வு செய்தேன். புறப்பட்ட வண்டி, சில நிமிடங்களிலேயே நின்றது. “தடத்தில் பராமரிப்பு வேலை நடப்பதால், தொடர்ந்து செல்ல இயலாது, பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே பயணச்சீட்டுடன் பயணிக்கலாம்” என்றார்கள். 26 நிமிடத்தில் ஃபிரிபோங் சென்றிருக்க வேண்டும். ஆனால், 2 மணி நேரம் ஆனது.
அடுத்த தொடர்வண்டியில் ஏறியதும், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். தமிழுடன் போட்டி போட்டது சுவிட்சர்லாந்தின் பேரழகு. தொடர்வண்டிப் பாதையை ஒட்டி வகிடெடுத்த வயல்கள், வயல்களுக்கு அருகே கரையேதுமின்றி கலையாமல் ஓடும் ஆறு, ஆற்றில் நீர் உறிஞ்சி நிமிர்ந்து நிற்கும் மலை. மலை முகடுகளில் கண்ணாமூச்சி ஆடும் மேகங்கள். களைப்பு நீக்கியது இயற்கை.
உடைந்த நாற்காலி
ஜெனிவா சென்றபோது மணி 11.30. பேருந்தில் ஏறி, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்குச் சென்றேன். முகப்பிலிருக்கும் மிகப்பெரிய சதுக்கத்தில், பிரம்மாண்டமான நாற்காலி நிற்கிறது. நாற்காலியின் முன்பக்கத்தில் ஒரு கால் பாதியாக, நார்நாராகப் பிய்ந்து தொங்கி, கண்ணி வெடியின் ஆபத்தைச் சொல்லுகிறது.
போர் நடக்கும் நாடுகளெங்கும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள், போரின்போதும் போருக்குப் பிறகும் ஆயிரக்கணக்கானவர்களை உயிரிழக்கச் செய்வதால், கண்ணி வெடிக்கு எதிராக 1997 செப்டம்பர் 18-ல் கனடாவின் ஒட்டாவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது, கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், இருப்பு வைத்திருத்தல், தயாரித்தல், கொண்டுபோதல் உள்ளிட்டவற்றைத் தடை செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வழி செய்தது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தனர், பன்னாட்டு மாற்றுத்திறனாளர் அமைப்பினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சுவிஸ் நாட்டு சிற்பி டேனியல் பெர்செட் உருவாக்கியதுதான் 12 மீட்டர் உயரமுள்ள இந்த நாற்காலி. தொடக்கத்தில், 3 மாதங்கள் மட்டுமே வைக்க நினைத்திருந்தார்கள். ஆனால், 25 ஆண்டுகளாக நின்று, கண்ணி வெடிக்கு எதிராகப் பரப்புரை செய்கிறது.
அமைதி மணி
ஐநா வளாத்துக்குள் செல்ல, நுழைவாயிலுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். நான் ஆங்கில வழிகாட்டிக்குப் பதிவு செய்தேன். “மதியம் 1.30-க்குத் தொடங்கும். 1 மணிக்கு வந்துவிட வேண்டும்” என்றார்கள். வெளியே சுற்றுச் சுவரைச் சுற்றி நடந்து மற்றொரு வளாகத்துக்குள் நுழைந்தேன். நிறைய நினைவுச் சின்னங்கள் இருந்தன. பெரிய மணியைப் பார்த்ததும், ‘அட! இது ஹிரோஷிமாவில் உள்ளது போலல்லவா இருக்கிறது...’ என்று அருகில் சென்றேன். ஆமாம், ஹிரோஷிமாவின் அமைதி நினைவுப் பூங்காவில் உள்ள ‘அமைதி மணியின்’ மாதிரியை இங்கே நிறுவியுள்ளார்கள். பழங்கால பீங்கான் பொருட்கள் நிறைந்த அருங்காட்சியகமும் அவ்வளாகத்தில் இருந்தது. உள்ளே சென்றேன். நேரம் இல்லாததால் முழுமையாகப் பார்க்க இயலவில்லை.
என் பெயர் நுஜுத்
மறுபடியும் ஐநா நுழைவாயிலுக்குத் திரும்பினேன். மிக நீண்ட பரிசோதனைக்குப் பிறகு அனுமதி அட்டை கொடுத்து கழுத்தில் தொங்கவிடச் சொன்னார்கள். உள்ளே நடந்தேன். வளாகத்தில் இருந்த சிற்பங்களுடன் படங்கள் எடுத்தேன். அரங்கத்துக்குள் சென்றேன். சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்நேரத்தில், அங்கிருந்த புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். ‘I am Nujood, Age 10 and Divorced’ எனும் தலைப்பு எதிர்பார்ப்பை அதிகரித்தது. 10 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட ஏமன் நாட்டு சிறுமி, போராடி விவாகரத்து பெற்ற தன்வரலாற்று நூல் அது. உலகில் 38 மொழிகளில் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. வாங்கினேன். (விமானப் பயணத்திலேயே வாசித்து முடித்தேன். ஊருக்கு வந்ததும் தமிழில் மொழிபெயர்த்தேன். ‘என் பெயர் நுஜுத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது!’ டிஸ்கவரி பதிப்பாக வெளிவந்துள்ளது).
ஆதாமின் படைப்பு
மதியம் 1.30 மணிக்குத் தொடங்கியது சுற்றுலா. கட்டிடத்தின் பல்வேறு அறைகளுக்கு அழைத்துச் சென்றார் வழிகாட்டி. அதனதன் வரலாற்றை விவரித்தார். பெரிய உள் முற்றத்துக்குள் சென்றோம். கடவுளின் விரலும், முதல் மனிதன் எனப்படும் ஆதாமின் விரலும் தொட்டுக்கொண்டிருப்பது போன்ற உருவம் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. இப்படைப்பு, மைக்கேல் ஆஞ்சலோ வரைந்த ‘ஆதாமின் படைப்பு’ ஓவியத்தின் பிரதிபலிப்பில் அமைந்துள்ளது. முற்றத்தின் மையத்தில் ‘வாழ்வின் நீல நட்சத்திரம்’ என்று பொருள்படும், பீங்கான் குவளை உள்ளது. அது, ஐநா தொடங்கப்பட்ட பொன்விழா ஆண்டில் (1995), ஜப்பான் நன்கொடையாக வழங்கியதாகும்.
கவுன்சில் அறை ஓவியங்கள்
கவுன்சில் அறைக்குள் சென்றோம் (The Council Chamber). தொடக்கத்தில் 21 பேர் அமரும்படி அரைவட்ட மேசையுடன் அமைக்கப்பட்டிருந்த இந்த அறை, பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த அரங்கில் உள்ள பிரம்மாண்டமான சுவர் ஓவியங்களும், அறையின் மேல்புறச் சுவரில் உள்ள ஓவியமும் 1936-ல் ஸ்பெயின் அரசாங்கம் பரிசாக வழங்கியவை. வரைந்தவர், ஸ்பெயின் நாட்டின், கட்டலோன் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் மரிய செர்ட். ஓவியத்தைப் பார்க்கும்போது, சுவரின் நிறம் மஞ்சள் போல தெரியும். ஆனால் அதுவும் ஓவியத்தின் நிறமே.
விசுவாசம், நம்பிக்கை, நீதி, அறிவு, சகோதரத்துவம், அமைதி, அறிவியல், சமூக, மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து சுவர் ஓவியங்கள் தத்ரூபமாகப் பேசுகின்றன. சமூக வளர்ச்சி குறித்தான ஓவியத்தில், கறுப்பின அடிமைகளின் சங்கிலிகள் உடைக்கப்படுவதையும், அவர்கள் விடுதலை பெறுவதையும் பார்த்தேன். அந்தப் பக்கமாகத் திரும்பி நின்று, ஆவணத்தை வாசிக்கும் வெள்ளை இன மனிதர், ஒருவேளை ஆபிரகாம் லிங்கனாக இருக்கலாம்.
போர் முடிந்து, காயப்பட்டவர்களையும் இறந்தவர்களையும் தூக்கிச் செல்லும் ஓவியம் இருக்கிறது. முதல் உலகப்போராக இருக்கலாம். அருகிலேயே போரில் தோற்கடிக்கப்பட்டவர்களின் ஓவியம் இருக்கிறது. அவர்கள் உள்ளங்கையை மூடி வானை நோக்கி உயர்த்தி, ‘நிச்சயம் பழி வாங்குவோம்’ என கத்துகிறார்கள். போர் ஒருபோதும் முடிவை எட்டுவதில்லை என்பதை இப்படம் உணர்த்துவதாக குறிப்பிட்ட வழிகாட்டி, “மக்கள்தான் மாறிமாறி மடிகிறார்கள். தலைவர்கள் வாழ்கிறார்கள்” என்றார்.
இந்த அறையின் மையத்தில், மேற்கூரையில் ஓர் ஓவியம் உள்ளது. அதில், 5 மனிதர்கள் கைகளை உயர்த்தி நிற்கிறார்கள். 5 கைகளும் 5 கண்டங்களைக் குறிக்கின்றன. பிணைந்துள்ள கைகள், வரப்போகும் நல்லுலகை அறிவிக்கின்றன.
(பாதை விரியும்)
பெட்டிச் செய்தி:
அழைக்கிறது உடைந்த நாற்காலி...
உடைந்த நாற்காலிக்கு அருகே இவ்வாறு எழுதியுள்ளது. ‘வலு மற்றும் வலுவின்மை, நிலையற்றது மற்றும் நிலையானது, மிருகத்தனம் மற்றும் கண்ணியம் இரண்டின் அடையாளமாக இருக்கிறது உடைந்த நாற்காலி. மனிதர்களுக்கு எதிரான கண்ணி வெடிகள் (1997) மற்றும் கிளஸ்டர் வெடி மருந்துகளைத் (2008) தடை செய்யுமாறு மற்ற நாடுகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது இந்த நாற்காலி. இது போரினால் கிழித்தெறியப்பட்டவர்கள் விரக்தியுடன் வடிக்கும் கண்ணீரின் தொடர்ச்சியாகும். உடைந்த நாற்காலியானது, பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான நிவாரணம் வழங்கவும் உலக நாடுகளுக்கு நினைவூட்டுகிறது. ஏற்றுக்கொள்ள முடியாததைக் கண்டிக்கவும், தனி நபர் மற்றும் சமூகத்தின் உரிமைகளுக்காக நிற்கவும், அவர்கள் தங்களின் நியாயமான நிவாரணத்தைப் பெற குரல் கொடுக்கவும் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது உடைந்த நாற்காலி!’