சைக்கிள் என்பது சாமானியர்களின் புஷ்பக விமானம்!

By ராணிப்பேட்டை ரங்கன்

உலக அளவில் அன்னையர் தினம், அப்பாக்கள் தினம், மகளிர் தினம் என்றெல்லாம் கொண்டாடப்படுவதைப்போல ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. சைக்கிள் என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் மிதிவண்டி என்றும் ஈரு(ரு)ளி என்றும் கூட அழைக்கின்றனர். மிகுந்த வறியவர்களைத் தவிர அனைவராலும் வாங்கக்கூடிய, எரிபொருள் தேவைப்படாத வாகனம் சைக்கிள்.

சைக்கிள் சரிதம்

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த இளைஞர்கள், வேலை தேடும் வாலிபர்கள் ஆகியோருடைய லட்சியக் கனவுகளில் ஒன்று எப்படியாவது சைக்கிள் வாங்கிவிடுவது என்பது. அதைக்கூட வாங்க முடியாதபடிக்குப் பல குடும்பங்களில் பொருளாதாரச் சூழல் தடுத்துக்கொண்டிருந்தது. இன்னும் பலர் வாலிபம் முழுக்க சைக்கிள் ஓட்ட பயந்து ஒதுங்கிவிட்டு, அவசியம் என்றவுடன் நடுத்தர வயதில் விழுந்து அடிபட்டு கற்றுக்கொண்ட காட்சிகள் எல்லாம் ஏராளம். சைக்கிளைப் பராமரிப்பது எளிது. குறிப்பாக சைக்கிள் டயர்களை அதிகக் கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளில் ஓட்டுவது அவசியம். தினமும் அதைத் துணியால் துடைத்து அதன் இண்டு இடுக்குகளில் உள்ள அழுக்குகளை எடுத்து சுத்தம் செய்வது அந்தக் கால சைக்கிள் உரிமையாளர்களுக்குப் பெருமிதமான பொழுதுபோக்கு. சிலர் சக்கரத்தில் உள்ள குறுக்குக் கம்பிகளை (ஸ்போக்ஸ்) கூட அழுக்கில்லாமல் துடைப்பார்கள். போலீஸ்காரர்கள் கேஸ் பிடிக்க பெரும்பாலும் சைக்கிள்களில்தான் போவார்கள்.

சிறிய பையன்கள் அப்பா அல்லது அண்ணன்மார்கள் மதிய வேளையில் சாப்பாட்டுக்காக வீட்டு வாசலில் கொண்டுவந்து நிறுத்தும் சைக்கிளை, அவர்களிடம் அனுமதி பெறாமல் (கேட்டால் தர மாட்டார்கள் – கீழே போட்டு உடைத்துவிடுவாய் என்று கர்ஜிப்பார்கள்) ரகசியமாக சிறிது தூரம் தள்ளிச் சென்று பிறகு குரங்கு பெடல் அடித்து ஓட்டிப் பழகுவார்கள். நன்றாக ஓட்டத் தெரிந்துவிட்டால் சீட்டின் மீது அமர்ந்து ஆரோகணித்து ஒய்யாரமாக ஓட்டுவார்கள். கடை வீதிகளிலும் நெரிசல் மிக்க சாலைகளிலும் பெல்லை விடாமல் அடித்துக்கொண்டு ஓட்டுவது, பெரிய கூட்டத்தில் ஆட்களுக்கு நடுநடுவில் புகுந்து, யார் மீதும் இடிக்காமல் ஓட்டுவது பெரிய சாகசம். யாருமில்லாத இடங்களில் இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரிலிருந்து எடுத்துவிட்டு இடுப்பை ஆட்டாமல் அப்படியே நேராக ஓட்டிப் பழகும்போது ஏற்படும் வீர உணர்ச்சிக்கு ஈடாக எதுவும் இருந்ததில்லை. இப்படியெல்லாம் சைக்கிளை விளையாட்டுக் கருவியாக, பொழுதுபோக்குக்குத் தோழனாக, உயிர் காக்கும் உதவியாளாக, வேலைக்குப் போக அன்றாட நண்பனாக, குடும்பங்களைக் காப்பாற்றும் டெலிவரி வேலைகளுக்குச் சரக்கேற்றிச் செல்லும் வாகனனாகவெல்லாம் சைக்கிளுடன் வாழ்ந்தவர்கள் அனேகம்.

நம்ம ஊரு வண்டி

இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. தமிழ்நாட்டின் டி.ஐ. சைக்கிள் நிறுவனத்தின் ஹெர்குலிஸ், பிலிப்ஸ், பிஎஸ்ஏ சைக்கிள்கள் மிகவும் பிரபலம். ஹெர்குலிஸ் சைக்கிள் பாரம் ஏற்றிச் செல்ல தோதானது. மளிகைக் கடைக்காரர்கள், அரிசி வியாபாரிகள், பாத்திரம் விற்போர் என்று பலரும் பெரிய கேரியரைப் பின்னால் பொருத்திக்கொண்டு சைக்கிளிலேயே சரக்குகளைக் கொண்டுபோய் கிராமம் கிராமமாக விற்பார்கள். சோடா, கலர், கிரஷ் விற்பவர்கள் அதற்கென்றே தனித்தனி அறைகளைக் கொண்ட அஞ்சறைப் பெட்டி போன்ற மரத்தால் செய்யப்பட்ட பாட்டில் ஹோல்டர்களை பின்னால் பொருத்திக்கொண்டு அந்த கிரேட்டுகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டுபோய் கடைகளுக்குப் போட்டுவருவார்கள்.

பிலிப்ஸ் சைக்கிள் உயரமானவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்குத் தோதானது. பிஎஸ்ஏ சைக்கிள் அதிக மிதி வாங்காமல் வேகமாக ஓட்டச் சிறந்தது. கொல்கத்தாவிலிருந்து ஹம்பர், சென் ராலே என்று இரண்டு சைக்கிள்கள் பிரபலம். தமிழ்நாட்டில் உள்ள சைக்கிள் அபிமானிகள் பலர் வாங்கிப் பயன்படுத்தியது. அதன் பெயின்ட் ஆலிவ் கிரீன் கலரில் இருக்கும். பெரும்பாலான சைக்கிள்கள் கருப்புக் கலர் பெயின்டோடுதான் இருக்கும். அவ்விரு சைக்கிள்களிலும் முன்புறம் இரண்டு ஃபோர்க் கம்பிகள் தந்திருப்பார்கள். அதன் பின்சக்கரத்தின் ஃப்ரீவீல் ஹப் என்பது மிகவும் மெலிதாக இருக்கும். ஓட்டுவதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். எவ்வளவு தொலைவு ஓட்டினாலும் களைப்பு ஏற்படாது. டி.ஐ. சைக்கிள் நிறுவனத் தயாரிப்புகள் எத்தனை காலமானாலும் பழுதாகாமல் உழைக்கும். ஆண்டுக்கொரு முறை ஓவர்ஹால் செய்து ஓட்டினால் வருடக்கணக்கில் உழைக்கும் தன்மையுள்ளவை சைக்கிள்கள். புதிய சைக்கிள் வாங்கியவுடன் ஒரு மாதம் ஓட்டிவிட்டு மீண்டும் அதே கடைக்குக் கொண்டுபோய் எல்லா பாகங்களையும் முழுதாகக் கழற்றி மீண்டும் ரீஃபிட் செய்து தருவார்கள். அதற்குப் பிறகு, வாங்கிய புதிதைவிட நன்றாக ஓடும்.

சைக்கிள் உரிமையாளர்கள் அதற்கு டைனமோ என்று அழைக்கப்பட்ட விளக்குகளை ரசனையோடு வாங்கிப் பொருத்துவார்கள். டைனமோவுக்கு சிறிய பாட்டரி பாட்டில் வடிவத்தில் இருக்கும். அதன் அருகிலேயே சிறிய டேஞ்சர் லைட்டும் உண்டு. அது பின்னால் வரும் லாரி, பஸ் போன்ற வாகனங்களை முன்னால் போவது சைக்கிள் என்று அடையாளம் காட்ட உதவும். அந்த டைனமோ சைக்கிள் ஓடும்போது பின் சக்கரத்தில் உரசி சார்ஜ் ஆகும். அதனால் விளக்கு எரியும். மண்ணெண்ணெய் ஊற்றி எரியவிடும் விளக்குகளும் அதற்கும் முன்னால் புழக்கத்தில் இருந்தன. அதை இரவு நேரத்தில் மட்டும் எடுத்து சைக்கிளில் மாட்டுவார்கள். இரவு நேரத்தில் சைக்கிளில் லைட் இல்லாமல் போனாலோ, சைக்கிளில் டபுள்ஸ், டிரிபிள்ஸ் போனாலோ போலீஸ்காரர்கள் பிடித்து அபராதம் விதிப்பார்கள். எம்ஜிஆர். முதல்வராக வந்தவுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகலாம் என்று அனுமதி கிடைத்தது.

சொந்தமாக சைக்கிள் வாங்க முடியாதவர்களுக்கு வாடகை சைக்கிள்கள் எளிதில் கிடைத்துவிடும். கிராமங்களில்கூட எட்டு அல்லது 10 பெரிய சைக்கிள்கள், ஒரு சிறிய சைக்கிள் ஆகியவற்றுடன் ‘ஹவர்’ சைக்கிள் கடைகள் இருந்தன. கடையின் பெயரையும் சைக்கிள் நம்பரையும் பின்னால் பெயின்டில் அழகாக எழுதிவிடுவார்கள். வண்டி எடுக்கும் நேரத்தையும் பெயரையும் குறித்துக் கொள்வார்கள். எல்லா சைக்கிள் கடைகளிலும் கட்டாயம் ஒரு டைம்பீஸ் இதற்காகவே வைத்திருப்பார்கள். நம்மைக் கடைக்காரருக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்த யாராவது வந்து சிபாரிசு செய்தால் சைக்கிளை வாடகைக்குக் கொடுப்பார்கள். அரை நாள் வாடகை, முழு நாள் வாடகைக்கும் சைக்கிள்கள் கிடைக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் பின்பக்கம் கேரியர் வைக்க மாட்டார்கள். வைத்தால் டபுள்ஸ் அடிப்பார்கள், டயர் – டியூப் கெட்டுவிடும் என்று முன் எச்சரிக்கையாக இருப்பார்கள். சைக்கிள் கடையில் தனியாளாக வாங்கிக்கொண்டு, கடைக்காரரின் கண்பார்வைக்கு அப்பால் போனதும் இன்னொருவரை சைக்கிள் பாரில் உட்கார வைத்து டபிள்ஸ் ஓட்டுவார்கள். ஹவர் சைக்கிள்களில் பெரும்பாலும் டயர்கள் பழுதாகி அல்லது வலுவிழந்து காற்று குறைந்துவிடும் அல்லது பஞ்சராகிவிடும். சைக்கிளோடு கீழே விழுந்தால் ஹாண்டில் பார் அழுத்தம் தாங்காமல் திரும்பிவிடும். அதை சைக்கிள் கடைக்காரர்கள் முன் வீலை இரண்டு தொடைகளுக்கு நடுவில் நுழைத்து நேர் செய்வதைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருக்கும்.

வாடகை சைக்கிள்

சின்ன சைக்கிள்களை சிறிய பையன்களுக்கு ஓட்டப்பழக வாடகைக்குத் தருவார்கள். ஒரு மணி நேரத்துக்கு 20 பைசா என்றால் அந்தப் பையன்கள் ஒரு ரவுண்டு ஓடிவிட்டு நேரம் ஆகிவிட்டதோ என்ற அச்சத்தில், ‘இப்ப மணி என்னண்ணா?’ என்று கடைக்காரரை அடிக்கடி வந்து கேட்டு நச்சரிப்பார்கள். சிலர் எரிச்சலடைந்து, ‘டைம் ஆயிடுச்சுடா வைச்சுட்டுப் போ’ என்று வாங்கி வைத்துக்கொள்வார்கள். டீக்கடைகளுக்கு அடுத்தபடியாக அந்தக் காலத்தில் சைக்கிள் கடைகள்தான் சமூக மன்றங்களாக இருந்தன. ஒத்த வயதுடையவர்கள் அங்கே வந்து ஊர் விவகாரம் - அரசியல் பேசுவார்கள். பெரும்பாலான சைக்கிள் கடைக்காரர்கள் தங்களுடைய கட்சி அபிமானத்தை சைக்கிள் கடையின் பெயர்ப் பலகையிலும், சைக்கிளின் பின்னால் நெம்பரை பெயின்டில் எழுதுவதிலும் காட்டுவார்கள்.

சுமார் இரண்டாயிரம் பேருக்கு மேல் மக்கள் வாழும் ஊராக இருந்தால் புதிய சைக்கிள்களை விற்கும் கடை நிச்சயம் இருக்கும். பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றால், புதிய வேலை கிடைத்தால் அல்லது திருமணம் ஆகிவிட்டால் புதிய சைக்கிள் குடும்பத்தாரால் வாங்கித்தரப்படும். பணக்காரர்கள் மட்டுமல்ல நடுத்தர மக்களும் பள்ளி, அல்லது கல்லூரி தொலைவில் இருந்தால் சைக்கிள் வாங்கித் தருவார்கள். கடந்த இருபது ஆண்டுகளாக பெண்கள் ஏராளமாக சைக்கிள் ஓட்டுவதும் சொந்தமாக வண்டி வைத்திருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது. பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்களின் முன்னேற்றம் ஆகிய அனைத்துக்கும் அடையாளம் அவர்கள் சைக்கிள் ஓட்டுவதுதான். தமிழக அரசு தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் விலையில்லா சைக்கிளை வழங்குவதுகூட நல்லதொரு உதவியாக இருக்கும். ஆம்! சைக்கிள் என்பது சாமானியர்களின் புஷ்பக விமானம்.

சைக்கிள் தரும் சாதகங்கள்

சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு நல்ல பயிற்சி. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இதயத்துக்கு நல்லது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். சோம்பலைப் போக்கும். தூய்மையான காற்றை சுவாசிக்க உதவும். கற்பனையும் சிறகடிக்கும். சைக்கிள் ஓட்டத் தொடங்கியவுடன் பாடத் தொடங்கிவிடுவார்கள் அல்லது குறைந்தபட்சம் ஹம்மிங்காவது செய்வார்கள்.

தமிழ்த் திரைப்படங்களில் காதலன் – காதலிகள் சைக்கிளோடு வந்து பாடிய டூயட்டுகள் பல பிரபலமாகின. ‘சைக்கிள் வண்டி மேலே…’ என்று சீர்காழி கோவிந்தராஜன், ‘அக்கம் பக்கம் பார்க்காதே…’ என்று டிஎம்எஸ், ‘சந்திப்போமா தினம் சந்திப்போமா…’ என்று பிபிஎஸ் பாடிய பாடல்கள் உதாரணங்கள்.

சைக்கிளை யார் கண்டுபிடித்தார்கள், எந்த நாடு அதில் முதலில் என்பதெல்லாம் இன்றும் கூட சர்ச்சைக்குரிய வாதங்களையே மேலை நாடுகளில் எழுப்புகின்றன. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதுதான் தொழில் புரட்சிக்கே முன்னோடி என்பார்கள். சைக்கிள் என்பது அந்த சக்கரத்தையே மையமாகக் கொண்டு உருவானது. சைக்கிளுக்குள்தான் எத்தனை சக்கரங்கள். சைக்கிள்களை சமூக சேவைக்காக மட்டுமல்ல, ராணுவத்துக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில். இலங்கையில் பொடியன்கள் சைக்கிளுடன் வருவதைப் பார்த்தாலே சிங்கள வீரர்களுக்கு எமனையே நேரில் பார்த்துவிட்டதைப்போல கலக்கம் தோன்றுமாம்.

சைக்கிள் சாகசங்கள்

சைக்கிளைவிட்டு இறங்காமலேயே இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து ஓட்டும் சாகசம் செய்வார்கள். அந்த இடமே திருவிழா போல களைகட்டிவிடும். ஒரு திடலில் பெரிய மேடை அமைத்து அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைப் போட்டுவிடுவார்கள். சாகசக் காரர் ஓட்டும் அந்த வண்டியில் தாம்புக் கயிறால் குறுக்காக ஒரு கயிறை பாருக்கு மேல் வருமாறு கட்டியிருப்பார்கள். அதை ஒரு தகர டப்பாவில் நுழைத்திருப்பார்கள். சைக்கிளை ஓட்டும்போது ஒர் என்று ஒரு பேரோசை தொடர்ந்து கேட்கும். சாகசக்காரர் இரண்டு தவலைகள் அல்லது அண்டா நிறைய தண்ணீரை இரண்டு தோள்களிலும் ஒரு தவலைத் தண்ணீரை வாயில் பல்லாலும் கடித்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று சுற்று ஓட்டுவார். இரண்டு பக்கமும் இரண்டு உதவியாளர்கள் ஓடிக் கொண்டே இருப்பார்கள். தரையில் வைக்கும் ஊசி போன்ற பொருளை சைக்கிளிலிருந்து இறங்காமலேயே அப்படியே எடுத்து நூலில் கோர்த்துக்காட்டுவார். தீப்பந்தம் ஏந்துவார், குழந்தைகளைத் தோளில் வைத்துக் கொள்வார். இன்னொரு இரும்புக் கம்பியை வாங்கி அதன் இரண்டு பக்கம் இரண்டு பேரை தொங்கவைத்து ஓட்டுவார். சைக்கிளிலிருந்து எகிறி அந்தர் பல்டி அடித்துவிட்டு, தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சைக்கிளின் சீட்டில் சரியாக வந்து அமர்ந்துவிடுவார். சைக்கிளில் இதுவெல்லாம் சாத்தியமா என்று வியப்போடு பார்த்து மகிழ்வார்கள் மக்கள். அவருக்கு நிறைய காசு போடுவார்கள். கூட்டத்தைச் சேர்க்க கூம்பு ஒலி பெருக்கி மூலம் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவார்கள். சைக்கிள் இப்படியும் பலர் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறது.

இன்றைய சைக்கிள்

இப்போது சைக்கிள்களைவிட ஸ்கூட்டர், பைக் போன்ற டூ வீலர்கள் அதிகமாகிவிட்டன. நகரங்களில் சைக்கிள் ஓட்ட முடிவதில்லை. சில அடி தூரம் போவதற்குள் ராங் சைடில் வரும் டூ வீலர்கள் அனேகம். அவர்களிடம் பிரேக்கும் கிளட்சும் இருப்பதால் சில நொடிகளுக்குள் சுதாரித்து பயணத்தைத் தொடருகிறார்கள். சைக்கிள்காரர்கள் பிரேக் பிடித்தால் கூட கீழே காலை ஊன்றிவிட்டு பிறகு மீண்டும் உந்திதான் சைக்கிளைக் கிளப்ப வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நகரங்களில் சிக்னலுக்காக காத்திருக்கும்போது பிற மோட்டார் வாகனங்கள் வெளியிடும் கரும் புகையை சைக்கிள்காரர்கள்தான் (ஹெல்மெட் போடாதது ஒரு காரணம்) அதிகம் சுவாசிக்க நேர்கிறது. சைக்கிள்காரர்கள் நகரங்களில் ஓட்ட தனிப்பாதை மட்டும் போதாது, கரும்புகை அளவும் கட்டுக்குள் வர வேண்டும். வந்தால் சைக்கிள் உன்னதமான வாகனம்தான்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு போன்றவர்களும் சைக்கிள் பிரியர்களே என்பதை அவர்கள் தொடர்ந்து மாமல்லபுரத்துக்கு சைக்கிளிலேயே அடிக்கடி போவதிலிருந்து அறிய முடிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE